நடிகர்கள் : துல்கர் சல்மான், தன்ஷிகா, ஆர்த்தி வெங்கடேஷ், ஆன் அகஸ்டின், ஸ்ருதி ஹரிஹரன், நேஹா சர்மா, சௌபின் சாஹிர், நாசர், சுகாசினி, ஜான்விஜய், சுரேஷ் மேனன், அன்சன் பால், மனோஜ் கே.ஜெயன் மற்றும் பலர்
டைரக்சன் : பிஜாய் நம்பியார்.
நான்கு குறும்படங்களை ஒன்றிணைத்து ஆந்தாலாஜி படமாக வெளியாகியுள்ள படம் தான் சோலோ. அந்த நான்கிலும் துல்கர் சல்மானே ஹீரோவாக நடித்துள்ளது தான் ஹைலைட்.
நீர், காற்று, நெருப்பு, நிலம் என நான்கு களங்களை பின்னணியாக கொண்டு ஒவ்வொரு படமும் உருவாக்கப்பட்டுள்ளது.
நீர் - சேகரின் உலகம்
இசையில் ஆர்வமுள்ள, அதேசமயம் திக்குவாய் பிரச்சனை கொண்டவர் துல்கர் சல்மான். நாட்டியத்தில் சிறந்த, அதேசமயம் பார்வையற்றவரான தன்ஷிகா துல்கரை காதலித்து, வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார். இனிய இல்லறத்தின் சாட்சியாக அழகான குழந்தையை பெற்றுக்கொடுத்து விட்டு உயரை விடுகிறார் தன்ஷிகா.
காற்று - திரிலோக்கின் உலகம்
காதல் மனைவி ஆர்த்தியுடன் மலைப்பகுதியில் வசித்து வருகிறார் துல்கர் சல்மான். தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் சந்தோஷ செய்தியை அவர் தெரிந்து கொண்ட சில மணித்துளிகளிலேயே, விபத்தில் சிக்கி உயிரை விடுகிறார் ஆர்த்தி. விபத்துக்கு காரணமான கோடீஸ்வரர் ரெஞ்சி பணிக்கர், உடனிருக்கும் தனது மருமகன் அன்சன் பாலின் உதவும் குணத்தையும் தடுத்து, ஆர்த்தியை நடுரோட்டில் அம்போவென தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார். சில வருடங்கள் கழித்து இதேபோன்ற ஒரு விபத்தில் அன்சன் பால் சிக்க, அவரை காப்பற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார் துல்கர்.. துல்கரின் மனிதநேயம் பற்றி நீங்கள் நினைப்பதற்குள் துல்கரின் இன்னொருமுகம் அங்கே வெளிப்படுகிறது.
நெருப்பு - சிவாவின் உலகம்
மிகப்பெரிய தாதாவான மனோஜ் கே.ஜெயனிடம் அடியாளாக இருப்பவர் துல்கர் சல்மான். சிறுவயதிலேயே தாய் வேறொருவருடன் சென்றுவிட, தந்தை இருந்தும் தம்பியை தானே வளர்க்கிறார் துல்கர். ஸ்ருதி ஹரிஹரனை திருமணம் செய்துகொள்கிறார். ஒருநாள் பார் ஒன்றில் தனது தந்தை சுடப்பட்டு இறந்துகிடப்பதை அறிந்து கோபம் கொள்ளும் துல்கர், கொன்றவனை தேடிக்கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கிறார். இறுதியில் அந்த நபரை நெருங்கும் வேளையில் எதிர்பாராத அதிர்ச்சியை சந்திக்கிறார் துல்கர்.
நிலம் - ருத்ராவின் உலகம்
ராணுவத்தில் முக்கியமான காமாண்டோ வீரராக இருப்பவர் துல்கர் சல்மான். உயரதிகாரியான சுரேஷ் சந்திர மேனனின் மகள், நேஹா ஐயரை துல்கர் காதலிக்கிறார். துல்கரின் தந்தை நாசரும் ஆர்மி மேன் தான் என்றாலும், அவரைவிட உயரதிகாரியான சுரேஷ் மேனன் இந்த காதலை விரும்பாததால் மகனை ஒதுங்கி நிற்க சொல்கிறார் நாசர். ஆனால் நேஹாவை பெண் பார்க்க வருவோரை எல்லாம் அச்சுறுத்தி துரத்துகிறார் துல்கர்.
ஒருகட்டத்தில் மேல்படிப்புக்காக வெளிநாடு கிளம்பும் நேஹா, படிப்பை முடித்துவிட்டு இரண்டு வருடங்களில் திருமணம் செய்து கொள்ளலாம் என துல்கரை சமாதனம் செய்கிறார். ஆனால் நான்கு வருடங்கள் கழிந்த நிலையில் நேஹா பற்றிய தகவல், தொடர்பு எதுவும் கிடைக்காமல் தவிக்கிறார் துல்கர். இந்நிலையில் தான் நேஹாவுக்கும் அவரது அப்பா பார்த்த மாப்பிள்ளைக்கும் திருமணம் என்கிற செய்தி துல்கரை எட்டுகிறது. நேஹாவின் திருமணத்தை நிறுத்துவதற்காக நண்பர்களுடன் கிளம்பும் துல்கருக்கு திருமண வீட்டில் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது.
மேலே சொல்லப்பட்ட நான்கு கதைகளிலும் துல்கர் சல்மான் தான் நாயகன் என்றாலும், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் தனது கெட்டப், பாடி லாங்குவேஜ் என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக முன் கோபக்காரராக நடிப்பதற்கு துல்கரை விட்டால் ஆளில்லை என சொல்லும் அளவுக்கு அசாத்திய கோபத்தை ஒவ்வொரு எபிசோடிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஐந்து நாயாகிகள் இருந்தாலும் சேகரின் காதலியாக நடித்துள்ள தன்ஷிகாவுக்குத்தான் கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. பார்வையற்றவராக தன்னை மிகச்சரியாக அடையாளப்படுத்தியுள்ளார். திரிலோக்கின் காதல் மனைவியாக வந்து, பரிதாப முடிவுக்கு ஆளாகும் ஆர்த்தி வெங்கடேஷ், சிவாவின் மனைவியாக, தனது கணவனின் ரவுடியிசத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் கேரக்டரில் ஸ்ருதி ஹரிஹரன், அளவில்லாத காதலை, தூக்கியெறிந்து இன்னொருவனுக்கு மாலையிட தயாராகும் நேஹா ஐயர் என மற்ற கதாநாயகிகள் ஓரளவு தங்களது இருப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
நான்கு குறும்படங்களுக்கும் சேர்த்து பார்த்தால் சேகரின் நண்பனாக வரும் சௌபின் சாஹிர், தன்ஷிகாவின் அண்ணனாக வரும் ஜான்விஜய், விபத்தை ஏற்படுத்தும் மனிதாபிமானமற்ற ரெஞ்சி பணிக்கர், ஆபத்தில் உதவமுடியாத சூழ்நிலை கைதியாக வரும் அவரது மருமகனான அன்சன் பால், ருத்ராவின் எபிசோடில் அவரது பெற்றோராக வரும் நாசர், சுகாசினி, கறார் உயரதிகாரியாக வரும் சுரேஷ் சந்திர மேனன் என பல நட்சத்திரங்கள் தங்களுக்கு கிடைத்த குறுகிய கால அவகாசத்தில் தங்களது சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள்.
இது நிச்சயமாக புதிய முயற்சி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் இந்தப்படம் உற்சாகம் தரும் அளவுக்கு படம் பார்க்கவரும் ரசிகர்களுக்கு உற்சாகம் தருகிறதா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். மாற்று சினிமாவை வரவேற்கும் விமர்சகர்களும், சினிமா ஆர்வலர்களும் கூட இதை கொண்டாடவே செய்வார்கள். ஆனால் முழுநீள படமாக பார்த்து பழகிய நம் ரசிகர்களின் மனதில், இந்தப்படத்தில் இடம்பெற்ற குறைவான நேரத்தில் முடியும் குறும்படங்களும், அதில் நொடிக்கொரு முறை மாறும் காட்சிகளும் பெரிய அளவில் திருப்தியை கொடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்..
குறிப்பு : இயக்குனரின் அனுமதியில்லாமல் ரீ-எடிட் செய்யப்பட்டு வெளியான இந்தப்படத்தின் சில காட்சிகளும், குறிப்பாக ஒவ்வொரு எபிசோடின் முடிவுகளும் படத்தின் நேர்த்தியை குலைத்துவிட்டன. குறிப்பாக நான்காவது எபிசோடில் இந்த கதையை முடித்தவிதம் ஒரு அமெச்சூர் எடிட்டர் கூட செய்ய மறுக்கும் ஒன்று.. இப்படி செய்ய எப்படித்தான் தயாரிப்பளருக்கு மனம் வருகிறதோ..? ஒருவேளை இதையெல்லாம் பார்த்து தான் தயவுசெய்து என் படத்தை கொல்லாதீர்கள் என துல்கர் கதறினாரோ என்னவோ..?