2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மேப்பிள் லீவ்ஸ புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஈவி கணேஷ்பாபு
இசை - ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு - ஈவி கணேஷ்பாபு, சிருஷ்டி டாங்கே
வெளியான தேதி - 8 டிசம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

சொந்த வீடு வைத்திருந்தாலும், வாடகை வீட்டில் வசித்து வந்தாலும் ஒவ்வொருவருக்கும் அந்த வீட்டின் மீது, அந்த வீட்டில் உள்ள பொருட்கள் மீது உணர்வுபூர்வமான ஒரு தொடர்பு இருக்கும். சிலவற்றை நம் வாழ்க்கை முழுவதுமே வைத்து பாதுகாக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி தனது வாழ்க்கையில் சிறு வயதிலிருந்தே மிகவும் பிடித்துப் போன ஒரு 'கட்டில்' மீது ஆசை வைத்திருக்கும் நாயகனைப் பற்றிய படம்தான் இது. படத்தின் பெயரைப் பார்த்ததும் இது வேறு விதமான படமோ என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். ஆனால், இது பாசமான ஒரு படம்.

கணேஷ் பாபு இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழும் குடும்பத்தை நாம் பார்த்திருப்போம். அப்படியான ஒரு குடும்பம்தான் கணேஷ்பாபுவின் குடும்பம்.

காரைக்குடி பக்கம் அந்தக் காலத்து பிரம்மாண்டமான செட்டிநாடு வீடு ஒன்றில் அம்மா, கர்ப்பிணி மனைவி, ஒரு மகன் என வசித்து வருபவர் கணேஷ் பாபு. அந்த ஊரில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். அவரது வசதியான அண்ணன்கள், அக்கா ஆகியோர் அவர்களது பாரம்பரியமான வீட்டை விற்க முடிவு செய்து விற்றும் விடுகிறார்கள். ஆனால், அந்த வீட்டில் 250 வருட வயது கொண்ட ஒரு கட்டிலை தன்னுடனே எடுத்துச் செல்ல ஆசைப்படுகிறார் கணேஷ் பாபு. வீட்டை விற்ற பிறகு அந்தப் பெரிய கட்டிலை வைக்கும் அளவிற்கு அவருக்கு வீடு கிடைக்கவில்லை. அதனால், அதை ஒருவரிடம் கொடுத்துவிட்டு வசிப்பதற்காக சிறு வீட்டிற்கு வாடகைக்குச் செல்கிறார். தங்கள் பழைய வீட்டை விற்றதால் கிடைத்த அவரது பங்கில் புதிய வீடு வாங்கி அதில் கட்டிலை வைக்க ஆசைப்படுகிறார். அவரது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

வசதியாக வாழ்ந்த குடும்பத்திலிருந்து வந்து பின்னர் ஏழ்மையாக வசிக்க வேண்டிய சூழல் வருவதெல்லாம் விதியின் விளையாட்டு. அப்படியானவர்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினமானதாகவே இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை வலியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கணேஷ்பாபு. அவரது அண்ணன்களும், அக்காவும் அவரை துச்சமென மதித்து நடத்துகிறார்கள். தங்கள் பாரம்பரிய வீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமலும், அந்தக் கட்டிலை எப்படியாவது காப்பாற்றி புது வீடு வாங்கி வைக்க வேண்டுமென்பதிலும் உறுதியாக இருக்கிறார். அதற்காக பல சிரமங்களை சந்திக்கிறார். அப்படிப்பட்ட கட்டிலுக்காக அவர் கொடுக்கும் ஒரு முடிவு கண்கலங்க வைத்துவிடுகிறது.

சிருஷ்டி டாங்கே ஆச்சரியப்படும் அளவிற்கு அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார். எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் அதில் மன நிறைவாய் இருக்கிறார். அன்பான கணவன், மகன், நன்றாக கவனித்துக் கொள்ளும் மாமியார் என இவரும் அவர்கள் மீது அவ்வளவு பாசமாய் இருக்கிறார். கொஞ்சமாக சிரித்து நடித்தாலும் கடைசியில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் கணேஷ்பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், பாரம்பரிய பொருட்களை சேர்த்து வைக்கும் ராமையா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திரா சௌந்திரராஜன் மனதில் இடம் பிடிக்கிறார்கள். விதார்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். கணேஷ்பாபு மகனாக நடித்திருக்கும் சிறுவன் மாஸ்டர் நிதிஷ் மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சில பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் அடிக்கடி பாடல்கள் வருவது போல உள்ளது. வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு கதையுடன் சேர்ந்து பயணிக்கிறது.

படத்தின் கடைசியில் மத ஒற்றுமை, சாதி ஒற்றுமை என கொஞ்சம் கருத்துக்களையும் சேர்த்துள்ளார் இயக்குனர். முதல் பாதியை விட இரண்டாம் பாதி மெதுவாக நகர்கிறது. இன்னும் விறுவிறுப்பாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கட்டில் - ஆட்டமில்லாமல்…

 

கட்டில் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கட்டில்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓