விமர்சனம்
தயாரிப்பு - பயாஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பார்த்திபன்
இசை - இமான்
நடிப்பு - பார்த்திபன், யோகி பாபு
வெளியான தேதி - 12 ஜூலை 2024
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 2.5/5
சிறுவர்கள், குழந்தைகளை மையப்படுத்திய படங்கள் தமிழ் சினிமாவில் அபூர்வம். தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு வித்தியாசத்தை செய்ய முயற்சிக்கும் பார்த்திபன் இந்தப் படத்திலும் அப்படி முயன்றிருக்கிறார். இருந்தாலும் பார்த்திபன் படங்களுக்கே உரிய ஒரு 'மேக்கிங்' இந்தப் படத்தில் மிஸ் ஆகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
'வில்லா' டைப் வீட்டில் வசிக்கும் உயர்தர குடியிருப்பு வளாகத்தில் டீன் ஏஜ் வயதில் உள்ள சிறுவர்கள், சிறுமியர்கள் 13 பேர் தாங்கள் சிறு வயது அல்ல என்பதை தங்கள் பெற்றோர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதில் ஒரு சிறுமி தங்களது பாட்டி ஊரில் பேய் இருக்கும் ஒரு இடம் பற்றி சொல்ல அங்கு தைரியமாகச் சென்று தாங்களும் தைரியமானவர்கள் என நிரூபிக்க வேண்டும் என திட்டமிடுகிறார்கள். பள்ளிக்குச் சென்றுவிட்டு, அங்கு 'கட்' அடித்து ஊருக்குப் போகிறார்கள். ஊருக்குச் செல்ல சில கி.மீ. தூரம் நடக்க வேண்டி வருகிறது. அப்படி நடந்து போகும் போது ஒருவர் பின் ஒருவராக சிலர் காணாமல் போகிறார்கள். அவர்கள் எப்படி காணாமல் போனார்கள், அதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சிறுவர் கதையாக ஆரம்பமான படம், பின் த்ரில்லர் படமாக மாறி, கடைசியில் சயின்ஸ் பிக்ஷன் படமாக முடிகிறது. சிறுவர், சிறுமியர்களை யதார்த்தமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். ஒரு சிலரைத் தவிர பலரும் புதுமுகங்களாக இருந்தாலும் அவரவர் வயது கதாபாத்திரம் என்பதால் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஊருக்குப் போக திட்டம் தீட்டும் காட்சியில் உள்ள ஒரு துள்ளல், அவர்கள் ஊருக்குப் போக நடக்க ஆரம்பித்த பின் குறைந்து போகிறது.
நடுவில் சம்பந்தமே இல்லாமல் யோகி பாபு வந்து போகிறார். அவரை அந்த ஊருக்கு அழைத்துச் செல்லவும் நேரமில்லை போலிருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 'கிரீன் மேட்'டில் ஷுட் செய்து ஒப்பேற்றி இருக்கிறார்கள்.
கிளைமாக்சுக்கு முன்பாக 71 வயது சயின்ட்டிஸ்ட் ஆக பார்த்திபன் வருகிறார். அவரை எடுத்து வளர்த்தவர் 40 ஆண்டுகளுக்கு முன்பாக 'ஏலியன்'களுக்காக ஒரு தகவலை அனுப்பியுள்ளார். அவரது மறைவுக்குப் பின்பு பார்த்திபன் அந்த ஆராய்ச்சியைத் தொடர்கிறார். பார்த்திபனின் காட்சிகளில் வழக்கம் போல அவருடைய 'டச்' அதிகமாகவே உள்ளது.
இமானின் பின்னணி இசை பரவாயில்லை ரகம், பாடல்கள் கவரவில்லை. கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு சில காட்சிகளில் சிறப்பாகவும், சில காட்சிகளில் சுமாராகவும் இருக்கிறது.
டெக்னிக்கலாக நிறைய சமரசம் செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். தயாரிப்பாளர் பார்த்திபனாக கொஞ்சம் தாராளமாக செலவு செய்து தரமேற்றி இருக்கலாம். தமிழ் சினிமா அதிகம் கண்டு கொள்ளாத, சிறுவர்களுக்கான ஒரு படத்தை இயக்கி, தயாரித்ததற்கு பாராட்டுக்கள்.
டீன்ஸ் - டெஸ்ட்டிங்...
டீன்ஸ் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
டீன்ஸ்
- நடிகர்
- இயக்குனர்
பார்த்திபன்
தமிழ் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்ட ராதாகிருஷ்ணன் பார்த்திபன், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சுமார் 10 படங்களை இயக்கி உள்ளார். டைரக்டர் பாக்யராஜிடன் உதவியாளராக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கி, 1981ம் ஆண்டு ராணுவ வீரன் படத்தின் சிறிய வேடத்தில் அறிமுகமான பார்த்திபன், தூரம் அதிகமில்லை, அன்புள்ள ரஜினிகாந்த், தாவணி கனவுகள் உள்ளிட்ட படங்களிலும் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். 1989ம் ஆண்டு தான் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பொண்டாட்டி தேவை, தாலாட்டு பாடவா, தையல்காரன், சுகமான சுமைகள், உள்ளே வெளியே, புள்ளகுட்டிகாரன், டாடா பிர்லா. பாரதி கண்ணம்மா, குடைக்கள் மழை, தென்றல், அழகி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.