ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் பேனரில் சாந்தனு - பார்வதி நாயர் ஜோடியுடன் பார்த்திபனும் லீட்ரோலில் நடிக்க, சிம்ரன் கெஸ்ட் ரோலில் ஆங்காங்கே தலை காட்ட., இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடத்திற்கு வித்தியாசமான பொங்கல் விருந்தாக இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் "கோடிட்ட இடங்களை நிரப்புக."
ரங்கராஜ் எனும் ராஜ் - பார்த்திபன் ஒரு மொடா குடிகார டிராவல்ஸ் கார் டிரைவர். இருபத்தோறு வயது வித்தியாசமுள்ள கேரள சேச்சிமோகினி எனும் பார்வதி நாயரை திருமணம் செய்துக்கொண்டு குடியால் குடியை கெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது அயல் நாட்டு கஸ்டமர் கெவின் _ சாந்தனுவை வம்படியாய் ஒருசகல வசதிகளும் நிரம்பிய பங்களாவிற்கு அழைத்துப் போய் வம்படியாய் தங்க வைத்து அவருக்கு தன் இளம் மனைவியையே சமைத்துப் போடவும் வைக்கிறார். அங்கு ராஜ் -பார்த்திபனின் மோகினி - பார்வதி தன் திருப்தியில்லா வாழ்க்கையை மெல்ல, மெல்ல கெவின் - சாந்தனுக்கு புரியவைக்க, கெவின், கோடிட்ட இடங்களை நிரப்பினாரா.? இல்லையா ..? என்பது தான் "கோ.இ.நிரப்புக" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.
ரங்கராஜ் எனும் ராஜாக பார்த்திபன்., டிராவல்ஸ் கார் டிரைவராக மொடா குடிகாரராக தியாகியாக வாழ்ந்திருக்கிறார். செல்ப் ஷேவ் கேள்வி பட்டிருக்கேன். அது எப்படி செல்ப் ஹேர்கட் பண்றீங்க ... என தனக்குத்தானே ஹேர் கட் பண்ணிக்கொண்டிருக்கும் பார்த்திபனைப் பார்த்து சாந்தனு கேட்க, இருக்குற லட்சணுத்துல செல்ப் எடுக்கறதே கஷ்டம். இதுல செல்பி எங்க எடுக்காது அதுவும் இப்படி ஒரு மொபைலை வச்சுகிட்டு... இதுல மூஞ்சியே சரியாத் தெரியலை... கெவின் கிட்ட கேட்கலாமா? என்பது சாந்தனுவுடன் இருவரும் செல்பி எடுத்துக் கொள்வது, அதிலும் பார்வதி அந்த இருமணம் புரிந்தது.... இனி, திருமணம் புரியனும்... என கவிதையெல்லாம் பேசும் காதல் ஒ... சாரி காம வாலிபராக சாந்தனுவும் வாழ்ந்திருக்கிறார்.
இருபத்தோறு வயது வித்தியாசமுள்ள பார்த்திபனைக் கட்டிக் கொண்டு படாத பாடுபடும் கேரள சேச்சி மோகினியாக் பார்வதி நாயர் பக்கா. சாந்தனுவைப் பார்த்து திடீரென கோபமாக பெண்ணின் நெறிமுறை எல்லாம் பேசும் யோக்கிய பெண்ணாகவும்,அதன்பின் ஆரத் தழுவி அணைக்கும் அயோக்கிய பெண்ணாகவும் ரொம்பவே நடித்திருக்கிறார்.
"சண்டாலப் பாவிகளே., அது எப்படிடா? உங்களுக்கெல்லாம் காதல் வந்ததும் கவிதை வந்துடுது..?" , "நீ ஒரு மென்பொருள் பொறியாளர்.... பெண்ணும் மென்பொருள் தான்..." என்று சாந்தனுவை போனிலேயே கலாய்த்து பெண் மனம் பற்றி புட்டு புட்டு வைக்கும் சாந்தனுவின் குருவான தாய் சிம்ரன்., பார்த்திபனின் மறதி மன்னரான தம்பி ராமையா, டிராவல்ஸ் அதிபர் சிங்கம் புலி உள்ளிட்ட எல்லோரும் பா(ர்)த்தி(ப)ரம் அறிந்து பக்காவாக நடித்திருக்கின்றனர்.
படத்தொகுப்பாளர் ஆர்சுதர்சனின், படத்தொகுப்பிலும் பார்த்திபனே பிரதானமாய் தெரிகிறார் .அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவிலும் பெரிதாய் குறையேதுமில்லை.
இசையாளர் சத்யாவின் இசையில், "யாரைக் கேட்டும் பூக்காதே காதல் தாவரம் ...", "கிளு கிளுப்பையா ...", "டு முக்காத்தான் டு முக்காத்தான் ... " பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு பின்னி பெடலெடுத்திருக் கின்றன. அதிலும் டி.ஆரின் வாய்ஸில் "டு முக்காத்தான் டு முக்காத்தான் ... " பாடல் தியேட்டரை விட்டு வந்தப் பிறகும் காதில் ரீங்காரமிடுகிறது!
"குடைநனையறது மட்டும் தான் மழைக்குத் தெரியும். அது உள்ள இருக்கிற கம்பி நனையாதது அந்த குடைக்குத் தெரியுமா ..?"நீ ஒரு மென்பொருள் பொறியாளர் .... பெண்ணும் மென்பொருள் தான் நீ ஈஸியாக ஹேண்டில் பண்ணலாம் ...." உள்ளிட்ட டபுள் மீனிங் வசனங்கள் பேமிலியோடு தியேட்டருக்கு வந்திருப்பவர்களை நெளிய வைப்பது படத்திற்கு சற்றே பலவீனம் .
இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் எழுத்து, இயக்கத்தில், "நியாயம் - அநியாயம் இரண்டிற்கும் சிறு வித்தியாசமே உள்ளது அதன் பெயரே தர்மம். - கடவுள் கிருஷ்ணன் "என டைட்டில் கார்டு போடும் போதே எழுத்து வடிவில் மின்ன விடுவதும்., அதற்கு முன் படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் என சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதையும் பார்க்கும் போதே பார்த்திபன் எக்கச்சக்கமாய் ஏதோ சொல்ல போகிறார்... என எதிர் பார்த்து இருக்கையில் வீற்றிருப்பவர்களுக்கு "கோடிட்ட இடங்களை நிரப்புக" புல்லாய் பூர்த்தி செய்கிறது. அதிலும், அந்த க்ளைமாக்ஸ்.... கல்ச்சரை காப்பாற்றி விட்டார் பார்த்தி... என ரசிகனை கைத்தட்ட விட்டிருப்பதில் ஜெயித்திருக்கிறார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன். படமும் ஜெயிக்குமா? பார்ப்போம் ..!
மொத்தத்தில்,"கோடிட்ட இடங்களை நிரப்புக - ஒரு மாதிரி இட்டு, அந்த மாதிரி ரசிகர்களை தொட்டு நிரப்பியிருக்கிறார்... இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.. எனலாம்!"