ரயில்,Rail
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிஸ்கவரி சினிமாஸ், சினிமா பேலஸ்
இயக்கம் - பாஸ்கர் சக்தி
இசை - ஜனனி
நடிப்பு - குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரு
வெளியான தேதி - 21 ஜுன் 2024
நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

'வடக்கன்' என தலைப்பு வைக்கப்பட்ட படம், தணிக்கைக் குழுவினர் மறுப்பு தெரிவித்ததால் பின்னர் 'ரயில்' என மாற்றி இன்று இப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். சசிகுமார் நடித்து வெளிவந்த 'அயோத்தி' படம் போல வட இந்திய, தென்னிந்திய மக்களின் உணர்வுபூர்மான உறவுப்பாலத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் பாஸ்கர் சக்தி.

தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் எலக்ட்ரிசியன் ஆக இருப்பவர் குங்குமராஜ் முத்துசாமி. ஆனால், வேலைக்குச் செல்வதை விட எப்போதும் குடிப்பதையே தொழிலாகக் கொண்டவர். அவர் வீட்டிற்கு எதிரில் குடியிருக்கும் வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஷ் மெஹ்ரூவைப் பார்த்தாலே அவருக்குப் பிடிக்காது. வட இந்திய இளைஞர்கள் இங்கு வந்து தங்களது வேலைகளைப் பறிப்பதாக நினைக்கிறார். தனது மனைவி வைரமாலாவுடன் பர்வேஷ் அடிக்கடி பேசுவதாலும் மிகவும் கோபம் கொள்கிறார். அவரைக் கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால், பர்வேஷ் சாலை விபத்தில் திடீரென இறந்து போகிறார். அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்து வைக்கிறார்கள். பர்வேஷ் மனைவி, பெற்றோர் ஊரிலிருந்து வருகிறார்கள். மகன் சேர்த்து வைத்த ஐந்து லட்ச ரூபாயைக் காணவில்லை என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு குங்குமராஜ் தான் எடுத்திருப்பார் என்று சந்தேகம். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆர்ட் பிலிமாகக் கொடுப்பதா கமர்ஷியல் பிலிமாகக் கொடுப்பதா என இயக்குனர் குழம்பியிருப்பது தெரிகிறது. இடைவேளை வரையிலான காட்சிகள் மிக மிக மெதுவாக நகர்கிறது. பல காட்சிகளில் பின்னணி இசை கூட இல்லை. உணர்வுகளைக் கடத்த வேண்டிய பின்னணி இசை இல்லாமல் வெறும் காட்சிகள், அதற்கான வசனங்கள் மட்டும் எப்படி திரையில் இருக்கும் உணர்வை திரையின் எதிரில் இருக்கும் ரசிகர்களுக்குக் கடத்தும். இடைவேளைக்குப் பிறகே கதையாகப் பயணிக்கிறது படம்.

வேலைக்குச் செல்லாமல் எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கும் ஒருவரின் கதாபாத்திரத்தை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் குங்குமராஜ் முத்துசாமி. அவரது உடல்மொழி, பேசும் வசனம், தோற்றம் அனைத்துமே அந்த முத்தையா கதாபாத்திரத்திற்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது.

குங்குமராஜ் மனைவியாக வைரமாலா. கிராமத்து மனைவியர் எப்படி இருப்பார்கள் என்பதை இயல்பாய் காட்டியிருக்கிறார். குடித்துவிட்டு வரும் கணவன் மீது அவ்வளவு கோபத்துடன் இருக்கிறார். ஆனால், குழந்தை இல்லாத ஏக்கம் என்று வரும் போது கணவரைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுகிறார். கிராமத்து மக்கள் பாசமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ள கதாபாத்திரம். எங்கிருந்தோ வந்த பர்வேஷ் மீதும், அவர் குடும்பத்து மீதும் அவர் காட்டும் பாசம் இயல்பாக உள்ளது, உண்மையாகவும் உள்ளது.

கொஞ்ச நேரமே வந்து இறந்து போகும் கதாபாத்திரத்தில் பர்வேஷ் மெஹ்ரு. குங்குமராஜ் குடி நண்பராக ரமேஷ் வைத்யா. குங்குமராஜ் வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் அந்தப் பாட்டி, வைரமாலாவின் அப்பாவாக நடித்திருப்பவர் ஆகியோரும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு கதையின் உணர்வை காட்சி வடிவில் கொடுத்திருக்கிறது. அந்த உணர்வை இடைவேளைக்குப் பிறகுதான் தன் பின்னணி இசையில் ஓரளவிற்குக் கடத்தியுள்ளார் இசையமைப்பாளர் ஜனனி.

'வடக்கன்' எனப் பெயர் வைத்த போது 'வடக்கன், வடக்கன்' என படத்தில் பல காட்சிகளில் வசனத்தை பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தையும் 'கட்' செய்துவிட்டதால் பல இடங்களில் சைலண்ட் ஆகிறது. அதுதான் கதைக்கருவின் முக்கிய தாக்கம். அது இல்லாமல் போனதால் நாயகன் பேசும் வசனங்கள் எடுபடாமல் போகிறது. திரைக்கதையாக அழுத்தம் இல்லாமல் போகிற போக்கில் நகர்வதும் படத்தின் மைனஸ்.

ரயில் - மெதுவாய் நகரும் 'பாசஞ்சர்' ரயில்…

 

ரயில் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ரயில்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓