சாகுந்தலம்
விமர்சனம்
தயாரிப்பு - குணா டீம் ஒர்க்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
இயக்கம் - குணசேகர்
இசை - மணி சர்மா
நடிப்பு - சமந்தா, தேவ் மோகன்
வெளியான தேதி - 14 ஏப்ரல் 2023
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
தெலுங்குத் திரையுலகத்தின் குறிப்பிட வேண்டிய இயக்குனர்களில் ஒருவர் குணசேகர். விஜய் நடித்து இங்கு சூப்பர் ஹிட்டான 'கில்லி' படத்தின் ஒரிஜனலான 'ஒக்கடு' தெலுங்குப் படத்தை இயக்கியவர். கடைசியாக அனுஷ்கா நடித்த 'ருத்ரமாதேவி' என்ற சரித்திரப் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இயக்கியுள்ள சரித்திரப் படம்தான் இந்த 'சாகுந்தலம்'. புராண காலத்தில் நடந்த சகுந்தலை, துஷ்யந்தன் இடையிலான காதல் கதைதான் இந்தப் படத்தின் கதை. முடிந்த வரையில் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முயற்சித்து அதில் ஓரளவே வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.
விசுவாமித்ர முனிவர் பிரம்மரிஷி என்ற அந்தஸ்தைப் பெற கடும் தவமிருந்தார். அவரது தவத்தால் பயந்த இந்திரன், விசுவாமித்திரர் தவத்தைக் கலைக்க தேவகன்னியான மேனகையை பூமிக்கு அனுப்புகிறார். விசுவாமித்ரர் முன் நடனமாடி அவரது தவத்தைக் கலைக்கிறார் மேனகை. தவம் கலைந்த விசுவாமித்ரர், மேனகையின் அழகைக் கண்டு மயங்கி அவருடன் இரண்டறக் கலந்தார். இருவரும் சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறக்கிறது. இந்திரன் அனுப்பிய தேவ கன்னி தான் மேனகை என்று தெரிந்து கொண்ட விசுவாமித்ரர், தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மேனகையை விட்டுப் பிரிந்து சென்றார். பூலோகவாசிகளுக்கு தேவலோகத்தில் இடமில்லை என்பதால் மேனகை அவருக்குப் பிறந்த பெண் குழந்தையை கன்வ முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் விட்டு, தேவலோகம் சென்றுவிடுகிறார்.
குழந்தையைப் பார்த்த கன்வ முனிவர் அந்தப் பெண் குழந்தைக்கு சகுந்தலை எனப் பெயர் வைத்து ஆசிரமத்திலேயே வளர்க்கிறார். வருடங்கள் கடந்து போக சகுந்தலை தேவதை போன்ற அழகுடன் இளம் பெண்ணாக வளர்ந்து நிற்கிறார். காட்டிற்கு வேட்டையாட வந்த துஷ்யந்த மகாராஜா, சகுந்தலையின் அழகில் மயங்கி காதல் கொள்கிறார். இருவரும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டு இரண்டறக் கலக்கிறார்கள். சகுந்தலையை தன் நாட்டிற்கு பிறகு வந்து அழைத்துச் செல்வதாக சொல்லிவிட்டுச் செல்கிறார் துஷ்யந்தன். சகுந்தலை கர்ப்பம் அடைகிறார். மாதங்கள் உருண்டோடியும் துஷ்யந்தன் வரவில்லை. இந்நிலையில் ஆசிரமத்திற்கு துர்வாச முனிவர் வருகிறார். அவர் வந்ததை அறியாத சகுந்தலை, தனது கணவர் துஷ்யந்தன் நினைப்பில் இருக்கிறார். அதைக் கண்டு கோபமடைந்த துர்வாசர், சகுந்தலையின் நினைவுகள் துஷ்யந்தனுக்கு இல்லாமல் போகட்டும் என சாபம் விடுக்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இக்கதையைத் திரைப்படமாகப் பார்க்கும் போது அதில் ஒரே ஒரு திருப்பம் மட்டுமே சுவாரசியமானது. துர்வாச முனிவர் சகுந்தலைக்கு சாபம் கொடுக்க, அதனால் துஷ்யந்தன் சகுந்தலையை மறப்பது மட்டுமே அந்தத் திருப்பம். அதற்கு முன்பு வரை சகுந்தலை, துஷ்யந்தன் ஆகியோரது காதல் கதையாகவும், அதற்குப் பின் அவர்கள் இருவரும் சேர்வார்களா என்பது மட்டுமே இப்படத்தின் கதையாக உள்ளது. முதல் பாதியில் காதல் காட்சிகள் அழகியலுடன் படமாக்கப்பட்டிருந்தாலும், இரண்டாவது பாதியில் எந்த சுவாரசியமும் இல்லாமல் கதை நகர்கிறது.
சாகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா பொருத்தமாக நடித்திருக்கிறார். வெள்ளை நிற உடையில் தேவதை போலவே இருக்கிறார். ஆனால், சில குளோசப் காட்சிகளில் அவரது முகத்தில் பெரும் சோர்வு தெரிகிறது. காதலின் தவிப்பு, கணவர் யாரென்றே தெரியாது என்று சொன்னதன் கோபம் என சமந்தா நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை.
துஷ்யந்த மகாராஜாவாக தேவ் மோகன். கம்பீரம், காதல் இரண்டிலும் அந்தக் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். துர்வாச முனிவராக சிறப்புத் தோற்றத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் மோகன்பாபு அசத்தியிருக்கிறார். கன்வ முனிவராக சச்சின் கடேகர், சமந்தா தோழியாக 'அருவி' அதிதி பாலன், ஆசிரமத்தின் அம்மாவாக கவுதமி, படகோட்டியாக ஒரே ஒரு பாடலில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் வெறும் காதலை மட்டும் சொன்னால் போதாது என காலநேமி அசுவர வம்சத்தைச் சேர்ந்தவர்களுடன் துஷ்யந்தன் போர் புரியும் காட்சிகள் என சிலவற்றைச் சேர்த்திருக்கிறார்கள். அந்தப் போர் காட்சிகளின் விஎப்எக்ஸ் மிகச் சுமாராக உள்ளது. சாகுந்தலை வசிக்கும் ஆசிரமத்தின் அரங்க அமைப்பு, விஎப்எக்ஸ் ஆகியவை பாராட்டும்படி உள்ளது.
மணிசர்மாவின் பின்னணி இசையும், பாடல்களும் பாராட்டும்படி உள்ளது. படத்தில் நிறைய விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள். சில பல காட்சிகள் டிவி சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவை அழகாகக் காட்டுவதில் ஒளிப்பதிவாளர் சேகர் வி ஜோசப் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்.
ஒரு புராண வரலாற்றைத் தெரிந்து கொள்ள இக்கால சினிமா ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்கலாம். 80 கோடி பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். இன்னும் அதிகமான பட்ஜெட்டில் எடுத்திருந்தால் படத்தின் தரமும் சிறப்பாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.
சாகுந்தலம் - ‛சாகாத காதல்'