தினமலர் விமர்சனம்
நடிகை அனுஷ்கா, ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் ருத்ரமாதேவி, இயக்குனர் குணசேகரின் கனவு படமான இது மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இது போன்ற விஷயங்கள் படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், படத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராணா இருப்பது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காக்திய சாம்ராஜ்யம் தான் கதை நிகழும் இடம், அதை ஆளும் மன்னன் கணபடிதேவுடு (கிருஷ்ணமா ராஜு). அவனுக்கு பின் ராஜ்யத்தை ஆழ வாரிசு இல்லை. இந்த நேரத்தில் தான் மகாராணி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். ஆண் வாரிசு எல்லை என தெரிந்தால், எதிரி சாம்ராஜயமான தேவகிரியின் அரசன் நாட்டை தாக்க கூடும் என்று நினைத்து. ருத்ரமா தேவியை பட்டத்து இளவரசனாக மாற்றி ருத்ர தேவடுவாக அறிவிக்கிறார். ருத்ரமா தேவியும் தன் அடையாளங்களை மறைத்து போர்க்கலைகளில் தேர்ச்சிபெறுக்கிறார். பின் ஒரு நாள் பட்டத்து இளவரசன் நிஜமான் பெண் என்ற உண்மை காக்திய சாம்ராஜ்யத்திற்கு தெரியவருகிறது. பின் ருத்ரமாதேவி என்ன செய்தார்? தன்னை மகாராணியாக அறிவித்து ஆட்சி செய்தாரா? எதிரி மன்னன் படையெடுத்து வந்தானா?அல்லு அர்ஜுன் மற்றும் ராணாவிற்கு படத்தில் என்ன வேலை என்பன போன்ற கேள்விகளுக்கு தொய்வான இரண்டாம் பாதி விடையாக அமைந்துள்ளது.
படத்தில் அனுஷ்கா ருத்ரமாதேவி ராணியாக பிரமாதப் படுத்தியிருக்கிறார். பாடல்களில் அழகாகவும் சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாகவும் இருவேறு பரிமாணங்களை காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அனுஷ்காவின் சாகசம் அரங்கத்தில் கைத்தட்டல்களை அள்ளுகிறது. படத்தின் காட்சிகளுக்கு நிறையவே செலவு செய்திருக்கிறார்கள். VFX க்கு மெனக்கெட்டு இருக்கிறார்கள்.
அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்திருக்கிறார் குணசேகர்.. அல்லு அர்ஜுனின் நடிப்பு ஆளுமையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. அதுவும் அவரது அறிமுக காட்சி அருமை. இறுக்கமான முகத்துடன் அல்லு அர்ஜுன் செய்யும் நகைச்சுவையும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. ராணா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணமா ராஜு என அனைவரும் பாத்திரம் அறிந்து பளிச்சிடுகிறார்கள்.
பலவீனம் என்ன என்றால், இரண்டாம் பாதி திரைக்கதை தான். முதல் பாதியில் அடுக்கடுக்கான காட்சிகள் விரைவாக கதை சொல்கிறது. ஒரு ராணி உருவாகுக்கிற காட்சிகள் அதற்கான நியாத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இடைவேளையை எதிர்பார்ப்புடன் வைத்துவிட்டு அதன் பின்னான காட்சிகள் படத்தின் வேகத்தை தடாலடியாக குறைத்துவிடுவது படத்தின் மிகப்பெரும் பலவீனமாக அமைகிறது. குறிப்பாக இரண்டாம் பாதி பாடல்களை தவிர்த்திருக்கலாம். நித்யா மேனன் மற்றும் கேத்ரின் தெரஸாவிற்கு குறிப்பிட்டு சொல்லும்படி படத்தில் ஒரு வேலையும் செய்யவில்லை.
ஆடை அணிகலன்கள் தேர்வு, போர்க் கால கருவிகள், அரண்மனை அரங்குகள் என அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. VFX காட்சிகளும் அதனுடன் பொருந்துகிற வகையில் இருக்கிறது. என்னதான் VFX நன்றாக இருந்தாலும் போர்க்கள காட்சிகளில் அதன் நேர்த்தி குறைவு. ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சன்டின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகின்றது. படத்தில் தேவையில்லாத காட்சிகளை எடிட்டர் கத்தரித்திருந்தால் திரைக்கதை வேகமெடுத்திருக்கும். இளையராஜா பாடல்களில் சுமாராக வாசித்து, பின்னணியில் உயிர் ஊட்டியிருக்கிறார். படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் வசனங்கள். அதிலும் அல்லு அர்ஜுன் பேசும் வனங்கள் நினைவில் நிற்கின்றன. இயக்குனர் குணசேகரின் கனவு படமாக இருந்தாலும் முதல் பாதியில் காட்டிய அக்கறையை இரண்டாம் பாதியிலும் காட்டியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் இன்னும் படம் மிரட்டலாக வந்திருக்கும்.
படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள், அவர்களின் கதாபாத்திர வடிவமைப்புகள் என குணசேகர் கடினமாக உழைத்திருக்கிறார். ஒரு வரலற்று திரைப்படம் எடுப்பது ஒன்றும் சுலபமல்லவே. குணசேகரின் முயற்சி, அனுஷ்காவின் அதிரடி ஆக்ஷன் நடிப்பு இவற்றை பாராட்டுவதற்காவே ருத்ரமாதேவி படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
ருத்ரமா தேவி - நல்லாட்சி புரிவாள்
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
மீண்டும் ஒரு சாண்டில்யன் டைப் படம்!
மன்னனுக்கு வாரிசாக ஆண் குழந்தை பிறக்காவிட்டால் நாட்டை சூறையாட பங்காளிகளும் எதிரிகளும் திட்டம் தீட்ட, பெண் குழந்தையே பிறக்கிறது. அந்த பெண்ணை ஆண் என்று சொல்லி ஆணாகவே ராஜ குடும்பம் வளர்க்கிறது. உண்மை ஒரு நாள் தெரியுமாபோது ருத்ரமாதேவி என்ன முடிவெடுத்தாள் என்பதுதான் கதை. (இயக்கம் குணசேகர்)
ராணி வேடம் என்றால் அனுஷ்காவை (விசில் பறக்கிறது) அடித்துக் கொள்ள ஆள் இல்லை. குதிரை மேல் குதிரை! அந்தக் கம்பீரமும், வீரமும், கனிவும், கோபமும் அப்படியே அள்ளிக் கொண்டு போகிறது. ஆண் போல தோன்றும் காட்சிகளிலும் அட! ஒரு பெண்ணால் வீட்டைத் திருத்தும்போது நாட்டைக் காப்பாற்ற முடியாதா? வசனம் அங்கங்கே மின்னல் அடிக்கிறது.
படத்தின் மிகப் பெரிய பலம் வி எஃப் எக்ஸ். போர்ப்படையில் நாக வியூகத்தையும் கருட வியூகத்தையும் கண் முன்னே 3 டி காட்டும் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. அஜயனின் ஒளிப்பதிவுக்கு ஒரு கூர்வாள் பரிசு.
காதலுக்கு பாகுபலி ராணாவும், லேசான புன்னகைக்கு அல்லு அர்ஜூனும்!
நிறைவாகச் செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். நல்ல வேளை அவரை வில்லனாகவோ சாகடிக்காமலோ விட்டார்கள்!
பின்னணி இசையில் தான் எப்போதும் முன்னணிதான் என்று சொல்கிறார் இளையராஜா.
மெட்ராஸ் கேத்தரினும், நித்யாமேனனும் சும்மா அழகு காட்டுகிறார்கள். ருத்ரமாதேவி ஒரு பெண் என்பதை நித்யா ஏற்கெனவே தெரிந்து வைத்திருப்பது கவிதை.
கேரக்டர்களின் பெயர்களில் எல்லாம் சுந்தரவாடையைத் தவிர்த்திருக்கலாம்.
ருத்ரமாதேவி - பெண்களின் ராணி.
குமுதம் ரேட்டிங் - ஓகே
-------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
காக்கத்திய தேசம் எட்டு சிற்றரசர்களை உள்ளடக்கியது. அதை ஆளும் கணபதி தேவருக்குப் பிறக்கும் பெண் வாரிசு ருத்ரமாதேவி. ஆனால், நாட்டுமக்கள் ஆண் வாரிசு இருந்தால்தான் நம்மையும் நாட்டையும் காப்பாற்ற முடியும் என்று ஆண் வாரிசுக்காகத் தவம் இருக்கிறார்கள்.
எதிரிநாடான தேவகிரிநாட்டைச் சேர்ந்த மகாதேவன் காக்கத்திய நாட்டின் மீது எந்த நேரமும் போர்த்தொடுக்கும் அபாயம் சூழ்கிறது. நாட்டுக்குள்ளேயே பங்காளிகளான ஹரிஹர தேவர் (சுமன்) ஆண் வாரிசு இல்லாமல் போனால் நாட்டைக் கைப்பற்றும் திட்டம் வகுத்து வருகிறார். இவற்றையெல்லாம் முறியடிக்க மந்திரி சிவதேவ அய்யா (பிரகாஷ்ராஜ்) பிறந்த ருத்ரமாதேவியை இளவரசர் ருத்ரதேவர் என்று பொய் சொல்லி காட்டுக்கு அழைத்துச் சென்று 14 வருடம் போர் பயிற்சி தருகிறார்.
பெண்ணாக இருந்தாலும் நாட்டைக் காப்பாற்ற முடியும். பெண் பஞ்சணைக்கும் எடுபிடி சேவைக்கும் மட்டுமல்ல, நாடாளவும் முடியும் என்று செய்து காட்டி வெற்றி வாறை சூட வைக்கிறார்.
அழகும் ஆளுமையும் ஒருங்கே பெற்ற ருத்ரமாதேவி அரசியாகப் படம் முழுக்க கர்ஜிக்கிறார் அனுஷ்கா. தன் மக்களுக்காக அனுஷ்கா பேசும் வசனம் இன்றைய நாட்டுநடப்பை எடுத்துக் காட்டுகிறது. அவரது மயக்கும் அழகும், ஆக்ரோஷமான நடிப்பும் பளிச்சிடுகின்றன.
இளவரசியாக வரும் நித்யா மேனன், கேத்ரின் தெரஸாவும் நடிப்பிலும் அழகிலும் ஒரிஜினல் இளவரசிகளாகவே ஜொலிக்கிறார்கள். நித்யாமேனன் கதையோடு கலந்து தனிக்கவனம் பெறுகிறார்.
சாளுக்கிய வீரபத்ரனாக வரும் 'ராண டகுபதி' அனுஷ்காவை காதலித்து, பின்னர் அனுஷ்கா நம்மைவிட நாட்டைக் காதலிக்கிறார் என்று ஒதுங்கும்போது சபாஷ் போட வைக்கிறார்.
கோனா கன்னாவாக வரும் சண்டி வீரர் அல்லு அர்ஜூனா, ராணி ருத்ரமாதேவியைக் காக்கும் மாவீரனாக வந்து படம் முழுக்க ராஜ்யம் செய்கிறார்.
இசைஞானி இளையராஜா பின்னணி இசை பிரமாதம். பாடல்கள் அமர்க்களம். தோட்டா தரணியின் அரங்க அமைப்பு ஹாலிவுட் தரம். ஒவவொரு காட்சிக்கும் அவர் உழைப்பின் முக்கியத்துவம் தெரிகிறது.
அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவில் அனுஷ்காவை ருத்ரமாதேவனாக காட்டும்போது, ருத்ரமாதேவியாக காட்டும்போதும் அழகோ அழகு. திருஷ்டி சுத்திப் போடவேண்டும். நீட்டா லுல்லாவின் உடை அலங்காரத் தேர்வு ஒரிஜினல் நகைகளை அனுஷ்காவுக்கு பூட்டி அழகு சேர்த்தவிதம் ஆஹா ரகம்.
பிரம்மாண்டம், கடின உழைப்போடு கதையிலும் விறுவிறுப்பைக் கூட்டி பிரமிக்க வைத்துள்ளார் இயக்குநர் குணசேகர்.
ருத்ரமாதேவி - உச்சம்