தினமலர் விமர்சனம்
அம்புலி , ஆ ஆகிய அமானுஷ்ய சக்தி படங்களை இயக்கிய ஹரி & ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஜப்பானிலேயே படபிடிப்பு கண்டு, சிறுவர்களை குறிவைத்து வந்திருக்கும் படம் தான் "ஜம்புலிங்கம்".
கதைப்படி , இந்தியாவில் தனது ஊருக்கு மேஜிக் செய்ய வரும் யோக் ஜாப்பியின் மேஜிக்கில் மயங்கி, அவரிடம் உதவியாளராக சேர்கிறார் நாயகன் கோகுல்நாத். இந்நிலையில், யோக் ஜாப்பி, ஜப்பானில் நடைபெறும் மேஜிக் நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் கோகுல்நாத்தையும் கூட்டிக் கொண்டு, ஜப்பானுக்கு பயணமாகிறார். போன இடத்தில் யோக் ஜாப்பிக்கு ஹார்ட் அட்டாக் .வேறு வழியில்லாமல், கோகுல்நாத் அந்த மேஜிக் நிகழ்ச்சியை தனக்கு தெரிந்த சின்ன சின்ன விஷயங்களுடன் வித்தியாசமாக நடத்துகிறார். அந்த கோகுலின் வித்தியாச மேஜிக் நிகழ்ச்சி அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிடித்துப்போகிறது. அதிலும்
ஜப்பான்- டோக்கியோவின் மிகப்பெரும் தாதாவான ஒக்கிடாவுக்கு பிடித்துப்போகவே, கோகுலை தனது குடும்பநிகழ்ச்சி ஒன்றுக்கு ஒப்பந்தம் செய்கிறார்.
இந்நிலையில், கோகுல்நாத்தின் குழுவை சேர்ந்த அனைவரும் ஜப்பானை சுற்றிப்பார்க்க செல்கிறார்கள். அப்போது, கோகுல்நாத்தும், அக்குழுவில் இடம்பெற்றிருந்த நாயகி அஞ்சனா கீர்த்தியும் தங்களது குழுவை தவறவிடுகிறார்கள். இருவரும் தங்களது குழுவை தேடிச் செல்லும்போது இருவரும் நெருங்கி பழகி காதலர்களாகிறார்கள். அதேநேரத்தில், பெரும் வசதி மற்றும் ஜப்பான் கணவருடன் ஜப்பானில் வசித்து வரும் சுகன்யாவின் மகளை பணத்திற்காக ஒரு கும்பல் கடத்தி சென்றிருக்க, பணம் கேட்டு மிரட்டும் அந்த கும்பலிடம் பணத்தை கொடுத்து குழந்தையை மீட்க சுகன்யாவும், அவரது ஜப்பான் கணவரும் பெரும்
முயற்சி செய்து வர, மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சுகன்யாவின் மகளை, எதிர்பாராமல் அந்த கும்பலிடமிருந்து மீட்கிறார் ஜப்பானில் காணாமல் போன கோகுல்.
பின்னர், மொழி தெரியாத ஊரில் அந்த குழந்தையை சுகன்யாவிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார். ஆனால், இவர் செய்யும் எல்லா முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. இறுதியில், அந்த குழந்தையை கோகுல் சுகன்யாவிடம் ஒப்படைத்தாரா? தனது குழுவை தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து ஜப்பான் தாதாவின் குடும்ப நிகழ்ச்சியில் மேஜிக் செய்தாரா? யோக் ஜாப்பி என்ன ஆனார்? கோகுல் - அஞ்சனாவின் காதல் கைகூடியதா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக 3டி எஃபெக்ட்டில் விடையளிக்கிறது ஜம்புலிங்கம் படத்தின் மீதிக்கதை. அது இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் விடைபளித்திருந்தால் ஜம்புலிங்கம் ஒரே ஜம்ப்பில் வெற்றிப் பட வரிசையில் இணைந்திருக்கும்... என்பது நம் எண்ணம்.
படத்தின் கதாநாயகராக கோகுல்நாத் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும்படியான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். படத்தில் இவர், மேஜிக்கை காட்டிலும் தன் டான்ஸ் உள்ளிட்ட தனித்திறமைகளால் குழந்தைகளை வெகுவாக வசியப்படுத்துகிறார். அதற்கான காட்சிகள் நிறையவே படத்திலும் இருக்கிறது. அதை மிகவும் அனாயாசமாக செய்திருக்கிறார் கோகுல் வாவ்!
நாயகி ஐரீனாக அஞ்சனா கீர்த்தி, படம் முழுக்க கோகுலுடன் தேமே என வந்து போவது படத்தில் அடிக்கடி வரும் டயலாக் மாதிரி சிறப்பு எனும் அளவில் இல்லை. வெறுப்பு தான் வருகிறது!
சுகன்யாவுக்கு தனது மகளை பிரிந்து வாடும் கதாபாத்திரம். ஆனால், ஜப்பான் பிள்ளைகளுக்கு பரதம் சொல்லி தருவதில் காட்டும் ஈடுபாட்டை தன் குழந்தை தேடலில் சுகன்யா காண்பிக்காதது சும்மாய்யா ... என இருக்கிறது. பாவம்!
கும்கி அஸ்வின், லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ் ஆகியோரில் கும்கி அஸ்வின், ஈரோடு மகேஷ் இருவரையும் காட்டிலும் லொள்ளு சபா ஜீவா நச் - டச் செய்கிறார் அடிக்கடி . மேற்படி, காமெடிக்கு நிறைய பேர் இருந்தாலும், காமெடிக்கு ஸ்கோப் உள்ள இப்படத்தில் காமெடி காட்சிகள் மிகவும் குறைவே. குறிப்பாக, மகேஷ் ஜப்பான் தாதாவிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் காட்சிகளை காமெடியாக எடுத்திருந்தாலும், திரையில் பார்க்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை .
மற்றபடி, முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இடம்பெறும் மேஜிக் காட்சிகள், ஜப்பானின் கொள்ளை இயற்கை , செயற்கை அழகு எல்லாவற்றையும் 3 டியில் பார்க்கும்போது மேலும் அழகாக, தத்ரூபமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, யோக் ஜாப்பி செய்யும் மாயாஜால மேஜிக் காட்சிகளில் சிங்கம் நடந்து வருகிற மாதிரி காட்சியை 3டியில் பார்க்கும்போது வியப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.அது மாதிரி இன்னும் நிறைய காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கலாம்!
சதீஷ் ஒளிப்பதிவு ஜப்பானை மிகவும் பிரமாண்டமாகவும் ,அழகாகவும் படம்பிடித்து காட்டியிருக்கிறது. வாவ்.
கோலிவுட்டிற்கு புது வரவான பெண் இசையமைப்பாளர் ஸ்ரீவித்யாவின் பின்னணி இசையும், பாடல்கள் இசையும் சிறப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை.
ஆகமொத்தத்தில் ஹரி - ஹரீஷ் இயக்கத்தில், ஜி.ஹரியின் தயாரிப்பில், ஒரு சில இழுவை காட்சிகளைத் தவிர., பெரிதாக குறைகள் இல்லாமல் 3டி எஃபெக்ட்டில் பிள்ளைகளையும், பெரியவர்களையும் கவரும் ஜம்புலிங்கம் - மாயாஜால - ஜாலி லிங்கம் வசூல் தங்கமா ..? இனிமேல் தான்தெரியும்...?!
-----------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
இது முழுக்க முழுக்கக் குழந்தைகளின் கொண்டாட்டத்தை மனதில் இருத்தி எடுக்கப்பட்ட படம்! ஜப்பானில் ஒரு குழந்தையைக் கட்த்திப் பணம் பறிக்க முயலும் கும்பலின் முயற்சியை முறியடிக்கும் காமெடியனின் கதை இது. மிக உயர்ந்த தொழில்நுட்ப உதவியோடு படமாக்கியிருக்கிறார்கள். மானாட மயிலாட புகழ் கோகுல்நாத்தான் ஹீரோ.
எக்ஸ்பிரஸ் அவென்யூவின் ஸ்பாட் தியேட்டரில் குழந்தைகளுக்கு மத்தியில் அமர்ந்து ரசித்தது மனதுக்கு நிறைவு. அந்தச் சிறுவர் கூட்டத்திடமே திரட்டிய துளிகளையே விமர்சனமாகத் தரலாம் என்று நினைக்கிறேன் சரியா?
படத்தின் ஆரம்பத்தில் வரும் பரத நாட்டியம் ரொம்ப நல்லா இருக்கு. அடேயப்பா! என்ன மாதிரி ஆட்டம்!
அதைவிட அந்தக் காட்டு யானையை ஜம்பு திருப்பி அனுப்புற போங்கு சீன் ஒரே சிரிப்பு!
சுமோ வீரரோட ஒல்லிப்பிச்சான் ஜம்பு சண்டை போடுற சீனில் சிரிச்சு சிரிச்சு கண்ல தண்ணியே வந்திட்டுது
ஏய் இண்டர்வெல்லுல ஜம்புவோட கண்ணு ஸ்க்ரீன்ல இருந்து வெளியே என் முகத்துக்கிட்ட வந்துநின்னுதே, எனக்கு பாத்ரூம் வர்ற மாதிரி ஆயிட்டு!
ய்யே அதெல்லம் ஸ்க்ரீனில் இருந்து நம்மை நோக்கி வர்ரது, அதை விட நம்ம பக்கத்தில இருந்து யாரோ ஸ்க்ரீனுக்குள்ள போற மாதிரி கூட இருந்துச்சே!
ஆமாம் நானும் சில 3டி படம்லாம் பார்த்திருக்கேன். இதில செமை!
பாஸ்போர்ட் விசா எதுவுமே இல்லாம ஜப்பானை ரொம்ப அழகா சுத்திக் காமிச்சிரக்காங்க. அந்த அருவிகள், ஏரியல் வியூ காட்சிகள் எல்லாம் ரொம்ப அற்புதம்.
பொம்மை மாதிரி அந்த அக்காவும் ஜம்புவும் செய்யும் ஷோ... நோ சான்ஸ்! ஆனா நாகேஷ் மகளிர் மட்டும்ல டெட் பாடி மாதிரி நடிப்பாரே.. அது ஞாபகம் வந்துச்சு!
குட்டியூண்டு பைக்ல ஜம்பு போறது, வித்தியாசமான சைக்கிளை ஓட்டுறதையெல்லாம் பார்த்த பிறகு எங்கப்பாகிட்ட அதே மாதிரி வாங்கித் தாங்கன்னு சொல்ல நினைச்சிருக்கேன்.
அந்த மேஜிக் ஷோவில் ரயில், சிங்கம் எல்லாம் இல்யூஷனா வரும்போது ஆச்சர்யம் தாங்க முடியலை.
எனக்கு ரொம்ப பிடிச்சது நதிதரோ பாட்டுல வரும் பப்பெட் ஷோதான். அய்யே அது பப்பெட் ஷோ இல்ல; அதுக்கு பேரு வென்ட்ரிகுலாரிஸம் சூப்பரா இருந்துச்சு!
இப்படி ஒவ்வொரு காட்சியையும் சிலாகித்துக் குழந்தைகள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
வெறும் பாராட்டையே சொன்னால் விமர்சனம் நிறைவடையுமா? குறை சொன்னால்தானே ஒரு திருப்தி! தான் கைது செய்திருக்கும் நபரை, வில்லன், தன் கையில் கோர்த்திருக்குமு் விலங்குடனே கழிவறை முதல் ஜலக்கிரீடை வரை அழைத்துச் செல்வதை தவிர்த்திருக்கலாம்.
ஜம்போ 3 டி ஜகஜாலக் கில்லாடி!