தினமலர் விமர்சனம்
சிவகாசி, திருப்பாச்சி, திருப்பதி, திருவண்ணாமலை என தென் இந்திய புகழ்மிகு ஊர்களின் பெயர்களில் படமெடுத்து வந்த இயக்குநர் பேரரசு, முதன்முதலாக, டில்லியில் உள்ள ஊரின் பெயரில் உருவாக்கியுள்ள படம் தான் திகார். சிறைக்கு பெயர் போன ஊரின் பெயரில் படம் எடுத்ததாலோ என்னவோ? இயக்குநர் பேரரசு எதிர்பார்க்காத அளவிற்கு நீண்ட நெடுங்காலம் தயாரிப்பில் இருந்துவிட்டு ஒருவழியாக திரைக்கு வந்திருக்கிறது திகார். ரசிகர்களும் பாவம்... படத்தில் அடிக்கடி கேட்கும் அதிர்வேட்டு வெடி சத்தங்களால் ஒருவழி ஆகிவிடுகின்றனர்.
தாதாக்கள் யுத்தத்தில் தன் தாதா அப்பாவையும், குடும்பத்தையும் இழக்கும் மகன் வளர்ந்து ஆளாகி, தந்தையின் சாவுக்கு காரணமானவர்களை பழிதீர்க்கும் வழக்கமான கதை! அதை, தன் பாணியில் நடிகர் பார்த்திபனை நம்பி படமாக்கி இருக்கிறார் இயக்குநர் பேரரசு!
பார்த்திபன், உன்னிமுகுந்த், நாயகி அகன்ஷா பூரி, எம்.எஸ்.பாஸ்கர், ரியாஸ் கான் உள்ளிட்டவர்களில் அகன்ஷா பூரியின் பூரிப்பான கவர்ச்சியும், எம்.எஸ்.பாஸ்கரின் பாம் காமெடி காட்சிகளும் தான் தேறுகிறது. நக்கல், நையாண்டி இல்லாத பார்த்திபன் உப்பு, சப்பில்லாத பண்டமாக வந்ததும் போனதும் தெரியாமல் வந்துபோவது பலவீனம்.
சேகர் வி ஜோசப்பின் ஒளிப்பதிவு, ஷபீரின் இசை உள்ளிட்ட ப்ளஸ்கள் இருந்தும் பேரரசுவின் தீப்பொறி பறக்கும் சண்டைக்காட்சிகள் உள்ளிட்ட வழக்கமான ஒரேபாணி இயக்கம் திகாரை - சிறைவாசமாகவே ரசிகனுக்கு தோன்ற செய்திருப்பது பலவீனம்.
"திகார் - அதிரடி மிரட்டல் என்றாலும் திகட்டல்!!"