800
விமர்சனம்
தயாரிப்பு- மூவி டிரைன் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் - எம்எஸ் ஸ்ரீபதி
இசை - ஜிப்ரான்
நடிப்பு - மதுர் மிட்டல், மகிமா நம்பியார், நாசர்
வெளியான தேதி - 6 அக்டோபர் 2023
நேரம் - 2 மணி நேரம் 39 நிமிடம்
ரேட்டிங் - 3/5
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இப்படம் வெளிவந்துள்ளது. மலையகத் தமிழரான முரளிதரன், இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட் வீழ்த்திய சாதனையைக் கொண்டாடும் ஒரு படம்.
இயக்குனர் ஸ்ரீபதி ஒரு சாதனையாளரின் பயோபிக் படத்தை எடுக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருந்து அதை படத்தின் உருவாக்கத்திலும் கொண்டு வந்து நேர்த்தியான ஒரு படமாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.
தமிழகத்திலிருந்து இலங்கையில் உள்ள மலைத் தோட்டங்களில் டீ பயிரிடுவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் செல்கிறது முரளிதரனின் தாத்தா குடும்பம். முரளியின் அப்பா கண்டியில் பிஸ்கெட் கம்பெனி ஒன்றை சொந்தமாக நடத்தி வருபவர். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட முரளிதரன் பள்ளி, கல்லூரி அணிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்து பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியில் நுழைகிறார். ஆரம்ப காலத்தில் சில சிரமங்களை சந்தித்தவருக்கு ஒரு கட்டத்தில் பந்தை எறிகிறார் என்ற பழி வந்தது. அதிலிருந்தும் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட் வீழ்த்தியதை உணர்வுபூர்மாகவும் சொல்கிறது இந்தப் படம்.
முரளிதரன் கதாபாத்திரத்தில் மதுர் மிட்டல் நடித்திருக்கிறார். 'ஷக்கலக்க பூம் பூம்' டிவி தொடர், 'ஸ்லம்டாக் மில்லியனர்' ஆகிய படங்களில் நடித்தவர் மதுர் மிட்டல். முரளிதரன் கதாபாத்திரத்திற்காக சிறப்பான கிரிக்கெட் பயிற்சியைப் பெற்றிருக்கிறார் என்பது தெரிகிறது. அவருடைய பந்து வீச்சு முறை அப்படியே நிஜ முரளிதரனைப் பார்ப்பது போலவே உள்ளது. கிரிக்கெட்டில் மட்டுமல்லாது நடிப்பிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார். உணர்வுபூர்வமான காட்சிகளில் நம்மையும் உருக வைக்கிறார்.
படம் முழுவதுமே முரளிதரன் குடும்பம், அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஆகியவற்றைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய திருமண வாழ்க்கை, மனைவி ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக முடித்துவிட்டனர். அவரது மனைவியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
சில காட்சிகளில் வந்தாலும் முரளிதரனின் அப்பாவாக வேலராமமூர்த்தி, அம்மாவாக ஜானகி சுரேஷ், பாட்டியாக வடிவுக்கரசி ஆகியோர் பாசமான குடும்பத்தினரைக் கண்டு முன் காட்டுகிறார்கள். முரளிதரன் பற்றிய விஷயங்களை கதையாகச் சொல்லும் கதாபாத்திரத்தில் நாசர், இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்காவாக நடித்திருக்கும் கிங் ரத்னம் ஆகியோரும் படத்தில் குறிப்பிட வேண்டியவர்கள். மற்ற சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால் பல நாட்டு கிரிக்கெட் மைதானங்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என மேக்கிங்கில் நிறைய பிரம்மாண்டத்தைக் காட்டியாக வேண்டும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் மூலமும் அதை இயல்பாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.
ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் அவருடைய அனுபவம் படத்தில் தனியாய் தெரிகிறது. ஜிப்ரான் பின்னணி இசை படத்திற்கான ஆதரவைக் கொடுத்துள்ளது.
முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் பந்து வீசுவதை எறிகிறார் என ஆஸ்திரேலிய அம்பயர் ஒருவர் குற்றம் சாட்டியதுதான் மிகப் பெரும் அரசியல். அந்தப் பகுதியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாய், நீளமாய் கொடுத்திருக்கலாம்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முரளிதரனின் நிலை என்னவாக இருந்தது என்பதை படத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். போர் இல்லாத அமைதியான வாழ்க்கைதான் அவருடைய எண்ணம் என்று வெளிப்படுத்தியுள்ளார்கள். இப்படத்தில் முன்னர் திட்டமிட்டபடி விஜய் சேதுபதி நடித்திருந்தால் இந்தப் படத்திற்கு இங்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்க வாய்ப்புகள் உண்டு.
800 - யாருக்கும் எட்டாக்கனி…