நாடு,Naadu

நாடு - சினி விழா ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்ரீ ஆர்க் மீடியா
இயக்கம் - சரவணன்
இசை - சத்யா
நடிப்பு - தர்ஷன், மகிமா நம்பியார்
வெளியான தேதி - 1 டிசம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் - 3/5

சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் அடிப்படை வசதிகளைக் கூடப் பெறாத எத்தனையோ கிராமங்கள் உள்ளன. மருத்துவம், குடிநீர் உள்ளிட்டவை அவர்களுக்கு இன்னும் எட்டாத உயரத்தில் உள்ளது. மருத்துவமனை இருந்தும் மருத்துவ வசதி கிடைக்காத ஒரு மலைக்கிராமம் பற்றிய கதைதான் இந்த 'நாடு'. படத்தில் முக்கியமாக எமோஷன் வேண்டும் என்பதற்காக, நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட அனிதா கதாபாத்திரத்தை படத்தில் நுழைத்திருக்கிறார் இயக்குனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உள்ள மலைகிராமம் ஒன்று. அந்த கிராமத்தில் படிக்காத பழங்குடி மக்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள். அந்த ஊரில் ஒரு மருத்துவமனை இருந்தும் டாக்டர் யாரும் வேலை செய்ய வர மறுக்கிறார்கள். ஊர் மக்களின் புகாரை அடுத்து மகிமா நம்பியார் வேலைக்குப் போகிறார். ஒரு வாரம் மட்டுமே வேலை பார்ப்பேன் என்பவர் மேலும் சில வாரங்கள் தங்க நேரிடுகிறது. அவர் அந்த ஊரைவிட்டு போய் விடாமல் இருக்க கிராமத்து இளைஞர் தர்ஷன், ஊர் மக்கள் எவ்வளவோ முயற்சிக்கிறார்கள். மகிமா அங்கேயே இருந்து சேவை செய்தாரா, அல்லது ஊரை விட்டுப் போனாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குறிப்பிடும்படியான ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். மலை கிராமம், அந்த மலைவாழ் மக்களின் வாழ்வியல், அவர்களது ஏக்கம், அங்கு பிடிக்காமல் வேலைக்கு வரும் சிலர் என அந்த கிராமத்துக்குள் நம்மையும் அழைத்துக் கொண்டு சென்றுவிடுகிறார்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பார்த்த தர்ஷனா இது என ஆச்சரியப்பட வைக்கிறார். லுங்கி, சட்டை, துண்டு என அப்படியே கிராமத்து மனிதராகவே மாறியிருக்கிறார். முதலில் அவரைப் பார்க்கும் போது கூட அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார். தனது கிராம மக்களுக்கு மருத்துவ வசதி கிடைத்துவிட வேண்டும் என நிறையவே போராடுகிறார். கூகுள் குட்டப்பா படத்தில் அறிமுகமானாலும் இந்த படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தர்ஷன்.

மலை கிராம மருத்துவமனைக்கு வரும் டாக்டராக மகிமா நம்பியார். அப்பாவே கலெக்டர் என்பதால் அவரது உத்தரவைத் தட்ட முடியாது என வேண்டா வெறுப்பாக வேலைக்கு வருகிறார். முதலில் பிடிக்கவில்லை என்றாலும் போகப் போக அந்த ஊர் மக்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என நினைக்கிறார். ஒரு டாக்டர் உருவாக அரசாங்கம் ஒரு கோடிக்கும் மேல் செலவு செய்கிறது என்றாலும் அந்த டாக்டர்கள் கிராம மக்களுக்கு சேவை செய்யத் தயங்குவதை எப்போது கட்டாயமாக்கப் போகிறார்கள்.

மற்ற கதாபாத்திரங்களில் ஊர் தலைவராக சிங்கம்புலி, தர்ஷன் அப்பாவாக மறைந்த நடிகர் ஆர்எஸ் சிவாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தர்ஷன் கூடவே இருக்கும் அவரது ஊர் நண்பர் அடிக்கடி சிரிக்க வைக்கிறார்.

சத்யாவின் பின்னணி இசை சிறப்பு. அந்த மலை கிராமத்தின் மூலை முடுக்குகளிலும் இதமாய் பயணித்துள்ளது சக்திவேலின் ஒளிப்பதிவு.

படம் இப்படிப் போய் முடியும் என நாம் எதிர்பார்த்தால் நம் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி வேறு ஒரு முடிவைக் கொடுக்கிறார் இயக்குனர். இது போன்ற கிராமங்கள் என்று அனைத்து அடிப்படை வசதிகளையும் பெறுகிறதோ அன்றுதான் நாம் சுதந்திரம் பெற்றதற்கான அர்த்தம் முழுமையடையும்.

நாடு - கனவு…

 

நாடு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நாடு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓