Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்,Engeyum Epothum
04 அக், 2011 - 12:58 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » எங்கேயும் எப்போதும்

  

தினமலர் விமர்சனம்



பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் பட நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோஸ்வுடன் இணைந்து தன் உதவியாளர் எம்.சரவணன் இயக்கத்தில் முதன்முதலாக தயாரித்திருக்கும் தரமான ப(பா)டம் தான் "எங்கேயும்... எப்போதும்..."

கதைப்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் ஆம்னிபேருந்து புறப்படும் அதே நேரத்தில், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு அரசு சொகுசு பேருந்தும் புறப்படுகிறது. இரண்டு பேருந்துகளும் விழுப்புரம் அருகே எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாக, அதில் நிலைகுலைந்தும், உயிர் இழந்தும் போனவர்களது சொந்தகதை, சோக கதைகளுடன் சில, பல காதல் கதைகளையும், காமெடி காட்சிகளையும் இணைத்து கலக்கலாக கதை சொல்லி, கண்ணீரை வரவழைத்து விடுகிறார் இயக்குநர் சரவணன். சபாஷ் சரவணன்.

திருச்சியில் இருந்து அரசூர் நோக்கி சென்னை பேருந்தில் பிரயாணிக்கும் ஜெய்-அஞ்சலியின் காதலாகட்டும், சர்வானந்த்-அனன்யாவின் அறிமுகமும் அதைத்தொடர்ந்து அவர்களுக்குள் எழும் காதலுமாகட்டும், இன்னும் புதிதாய் திருமணமான ஒரு பிரியமான ஜோடியின் பிரியமுடியாத காதலாகட்டும், கண்டக்டரின் சதியால் பிரிந்து, பின் இணையும் பேருந்து இளம் காதலர் ஆகட்டும், அந்த சுட்டி குழந்தை ஆகட்டும், அதை அடக்கும் அழகு அம்மாவாகட்டும், அரசூர் ஊர் தலைவராகட்டும், அனன்யாவின் அழகு அக்காவாகட்டும், எல்லோருமே நச் என்ற பாத்திரத்தில், பளிச் என்று நடித்து ரசிகர்கள் மனதை டச் செய்து விடுகின்றனர். பலே, பலே!

ஜெய் முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். மற்றொருநாயகர் சர்வாவும் தானும் சளைத்தவர் இல்லை என நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார்.

நாலு வீடு தள்ளி மாடியில் இருந்து கை காட்டும் ஜெய்யை மடக்கி, காதலும் கண்டிப்பும் காட்டும் அஞ்சலி, ஜெய் உடனான காதலில் நடிக்கவே இல்லை, உண்மையை சொல்வதென்றால் ஜெய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார். எவ்வளவுதான் படித்திருந்தாலும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் புதிதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பயத்தை பிரமாதமாக தன் நடிப்பில் காட்டியிருக்கும் "நாடோடிகள்" அனன்யா, சர்வாவுடனான காதல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

ஒவ்‌வொரு காட்சியிலும் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு ஓவியம் என்றால், சத்யாவின் இசை, ஆரம்பகாட்சிகளில் ஏற்படுத்தும் விறுவிறுப்பு, கடைசி வரை பாடல் காட்சிகளிலும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படம் முழுக்க எக்கச்சக்க காதல் ஜோடிகளுடன், இனிமையாக ரசிகர்களையும் பிரயாணம் செய்ய வைத்து, க்ளைமாக்ஸில் அந்த ஜோடியை பிரித்து விட்டாரே... இந்த ஜோடியை சேர விடவில்லையே... என எமனையும், இயக்குநர் எம்.சரவணனையும் சபிக்க வைத்திருப்பது தான் "எங்கேயும் எப்போதும்" படத்தின் பெரிய பலம்!

மொத்தத்தில் "எங்கேயும்... எப்போதும்..." படத்திற்கு நிச்சயம் "வெற்றிகளும்... விருதுகளும்..."



--------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்



ஒரு பஸ் விபத்து எப்படி பலரது வாழ்வைக் கலைத்துப் போடுகிறது என்ற ஒன்லைன் கதைக்கு மிகவும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார் புதுமுக இயக்குனர் எம். சரவணன். ஏ.ஆர். முருகதாஸிடம் பாடம் பயின்றவர். இந்தப் படத்தின் ஹைலைட்டே, பாத்திரங்களை உருவாக்கியுள்ள விதம்தான். சென்னையில் ஒரு ஜோடி, திருச்சியில் மற்றொரு ஜோடி. இரண்டு காதல்களும் இரு வேறு டிராக்கில் அமைக்கப்பட்டு, இரண்டுமே மனத்தில் ஈரமாகப் பதிந்துவிடுகிறது. ஒன்று மெலோடி என்றால், மற்றொன்று சரவெடி.

திருச்சி காதலர்கள் - ஜெய், அஞ்சலி. விட்டேற்றியான அனாயாசமான காதல். அஞ்சலி அசத்தியிருக்கிறார். ஜெய்க்கும் இப்படம் பெரிய வாய்ப்புகளுக்கான காவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது. சென்னை காதலர்கள் - சரவ், அனன்யா. மலர் போல் விரியும் அமரிக்கையான காதல். அனன்யாவின் சந்தேகம், வெள்ளந்தியான துடுக்கு, அனைவரையும் கட்டிப் போடுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கு இடையே துளிர்க்கும் காதல், புதுத் திருமண ஜோடியின் தீராக் காதல், ஓர் குழந்தையின் சூட்டிகையான பேச்சு என்று பார்த்துப் பார்த்து வர்ணஜாலம் படைத்திருக்கிறார். நான் - லீனியர் கதை சொல்லும் முறையைச் சிக்கலே இல்லாமல் கோத்த வாங்கியிருப்பது, துருத்தலே இல்லாத பட்டுநெசவு. "சென்னையில் புதுப் பொண்ணு பாடல் மனத்தில் ரீங்கரிக்கிறது. பின்னணி இசை நேர்த்தி. அறிமுக இசை அமைப்பாளர் சி. சத்யா. எங்கேயும் எப்போதும் காத்திருக்கும் மரணம் என்ற உணர்வை, அது மாற்றிப் போடும் வாழ்க்கையை, உறவுகளை மிகவும் ஃப்ரெஷ்ஷாகச் சொல்லியிருக்கிறது இப்படம். இயக்குனர் சரவணனுக்கு, கங்கிராட்ஸ்!




------------------------------------------------------------




குமுதம் சினி விமர்சனம்



எங்கேயும்... எப்போதும் கூடவே "யாருக்கும் எதுவும் நடக்கலாம் என்ற நாரத்தைகளைச் சேர்த்தால் அதுதான் படத்தின் ஒன்லைன்.

திருச்சியில் இருந்து வேலை விஷயமாக சென்னைக்கு வருகிறார் அனன்யா. வந்த இடத்தில் அக்கா வெளியூருக்குப் போய்விட, யாரென்றே தெரியாத சர்வாவின் உதவியோடு இண்டர்வியூ செல்கிறார். இதற்கிடையே அக்கா சொன்னாங்க... அக்கா சொன்னாங்க என சர்வாவை படுத்தி எடுக்கிறார். ஒரு தலைக் காதலால் அனன்யா படும் அவஸ்தைகள் ரசிக்கவைக்கும் ரகம்.

புதுமுகம் சர்வாவின் நடிப்பு அற்புதம். அனன்யாவுக்கு உதவி செய்யும்போது சாதாரணமாக நடந்து கொள்வது, இம்ப்ரெஸ் செய்ய முயற்சிக்காமல் சிகரெட் பிடிப்பது, கூட வருவது ஒரு பெண் என்ற நினைப்பே இல்லாதவராக அலட்சியமான இளைஞனாக நடிப்பில் ஜமாய்க்கிறார்.

இன்னொரு பக்கம் ஜெய் - அஞ்சலி ஜோடி காதலிக்கிறார்கள். நர்ஸான அஞ்சலி ஜெய்க்கு ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்ப்பதும் எய்ட்ஸ் இருக்கிறதா என பரிசோதிப்பதும் கல கல காமெடி. திருமணத்திற்காக அஞ்சலி சொல்லும் கண்டிஷன்கள் செம ரகளை.

சர்வாவைத் தேடி அனன்யா சென்னைக்குக் கிளம்ப, அனன்யாவைத் தேடி திருச்சிக்கு பயணப்படுகிறார் சர்வா. ஜெய் - அஞ்சலி ஜோடி அரசூருக்குப் பயணப்படுகிறது. கடைசி சீட்டில் உட்கார்ந்திருக்கும் பெரியவர், பஸ்சிலேயே காதலை வளர்க்கும் இளஞ்ஜோடி என சில பல சுவாரஸ்ய கேரக்டர்களை பஸ்சில் வைத்துக் கொண்டே அழகாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் எம்.சரவணன்.

இரண்டு பேருந்துகளும் ஒரே சமயத்தில் நேருக்கு நேராக மோதிக் கொள்வதும், அப்பளமாக பஸ் நொருங்கும் காட்சிகளும் நம்மை திகைக்க வைக்கின்றன.

ஒளிப்பதிவில் வேல்ராஜ் ஜெயிக்கிறார். சத்யாவின் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம்தான்.

எங்கேயும் எப்போதும் - சுகமான பயணம்.

குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து (251)

hunter - trichy,இந்தியா
02 ஜன, 2012 - 21:28 Report Abuse
 hunter எச்சலன்ட் mooviii
Rate this:
யாரோ - kualalumpur,மலேஷியா
02 ஜன, 2012 - 05:53 Report Abuse
 யாரோ நல்ல படம் நல்ல கதை நல்ல நடிப்பு
Rate this:
Rajkumar - Karaiyur,pudukkottai(dt),இந்தியா
24 டிச, 2011 - 22:25 Report Abuse
 Rajkumar 'FINAL DESTINATION' படத்தின் பாதிப்பு இந்த எங்கேயும் எப்போதும். பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
Rate this:
வெங்கட் - toronto,கனடா
24 டிச, 2011 - 17:08 Report Abuse
 வெங்கட் சூப்பர் படம்.
Rate this:
கே.shan - nellai,இந்தியா
19 டிச, 2011 - 20:15 Report Abuse
 கே.shan சூப்பர் அப்பு padam
Rate this:
மேலும் 246 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

எங்கேயும் எப்போதும் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in