தினமலர் விமர்சனம்
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி... படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியைத் தேடித்தர வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் வலியவன் என்றால் அது மிகையல்ல!
கதைப்படி., சற்றே பயந்த சுபாவம் உடைய வினோத் எனும் ஜெய்க்கு சுபிக்ஷா எனும் ஆண்ட்ரியா மீது காதல். அதற்கு ஓ.கே.சொல்லும் ஆண்ட்ரியா ஒரே ஒரு கண்டிஷன் போடுகிறார்!. அது., "சர்வதேச குத்துச்சண்டை வீரன் அஸ்வினுடன் நீ சண்டை போட்டு ஜெயித்தால் உன் காதலை நான் ஏற்றுக்கொள்கிறேன்..." எனும் கண்டிஷன் தான். அதற்கு டபுள் ஓ.கே. சொல்லும் ஜெய்., தன் தனியார் ஷாப்பிங் மால் சூப்பர்வைசர் வேலையுடன் சேர்த்து குத்துச்சண்டையும் கற்றுத்தேர்ந்து., ஒருநாள் அஸ்வினை அவனது வீட்டில் வைத்து வென்று அதை செல்ஃபோனிலும் படம்பிடித்து காதலி ஆண்ட்ரியாவிடம் காட்ட எடுத்துச்செல்கிறார்.
ஆனால், அந்த வீடியோ பதிவு, காதலி ஆண்ட்ரியா கண்களுக்கு விருந்தாவதற்கு முன், மீடியாக்களில் பரவி அஸ்வினை நிலைகுலைய செய்கிறது. "அது போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ பதிவு., என்னை வெல்ல ஒருத்தன் பிறந்து வர வேண்டும்.." என்று பிரஸ்மீட்டில் பில்டப் கொடுக்கிறார் அஸ்வின்! இல்லை...அந்த சண்டை உண்மை சண்டை தான்...என சொல்லியபடி அங்கு வரும் வினோத் - ஜெய் மீண்டும் அத்தனை ஊடகங்களின் முன்னிலையில் அஸ்வினை வென்று நம் தேசத்திற்கு அவர் செய்த துரோகத்திற்காகவும், தனது பெர்சனல் பகைக்காகவும் பழிதீர்த்து, சுபிக்ஷா - ஆண்ட்ரியாவின் கரம் பிடிப்பது தான் வலியவன் படத்தின் எளிய கதை! ஆனால், இந்த கதைக்குள் ஜெய்க்கும், அஸ்வினுக்குமான பெர்சன்ல பகை என்ன? அதை ஆண்ட்ரியா எவ்வாறு இனம் கண்டு கொண்டு, ஜெய்யை, அஸ்வினுடன் மோத விடுகிறார்...? அஸ்வின், நம் இந்தி்ய தேசத்திற்கு செய்த துரோகம் என்ன..? எனும் எண்ணற்ற கிளைக்கதைகளையும் அழகம்பெருமாள் - ஜெய் இருவரது அழகிய அப்பா- மகன் சென்டிமென்டையும் கலந்துகட்டி, வலியவனை மேலும் வலியவனாக்கி இருப்பதில் இருக்கிறது இயக்குநர் எம்.சரவணனின் சாமர்த்தியம், சமயோஜிதம்...இத்யாதி, இத்யாதிகள்..எல்லாம்!
ஜெய், வினோத்தாக ஆரம்பத்தில் பயந்த சுபாவம் உடையவராகவும், அதன்பின் துணிந்த சுபாவம் உடையவராக மாறி, குத்துச்சண்டை வீரராகவும் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். ஆண்ட்ரியாவை அசத்துவதற்காக அவர் தயிர்சாதம் மட்டும்தான் சாப்பிடுவார்...என்பது தெரியாமல் காஸ்ட்லீ நான் -வெஜ் ஹோட்டலில் அத்தனை அயிட்டங்களையும் ஆர்டர் செய்து அதை பார்சலாக்கி பின் டிஸ்போஸ்..செய்ய படாதபாடு படுவதில் தொடங்கி முதன்முதலாக குடித்துவிட்டு தன் அம்மா, ஆசிரியர் எல்லோரிடமும் சாரி கேட்பது வரை...சகலத்திலும் சக்கைபோடு போட்டிருக்கிறார். ஆனால், தன்னையும் தன் தகப்பனையும் சாதாரண ஒரு விஷயத்துக்காக தன் தாயின் முன் பொதுஇடத்தில் அடித்து உதைத்த அஸ்வின் மீது ஆண்ட்ரியா சொன்னபின் தான் ஜெய்க்கு பழி தீர்க்கும் எண்ணம் உருவாவது கொஞ்சம் காமெடியாக இருக்கிறது.
ஆண்ட்ரியா, சுபிக்ஷாவாக தொடை தெரியும் கிளாமரில் நடிப்பை காட்டிலும், இளமை துடிப்பில் ரசிகர்களை கவருகிறார்.
பாலசரவணன்., ஹீரோ ஜெய்யின் நண்பராக ஹீரோவை ஓட்டியபடியே வழக்கம்போல காமெடி ஸ்கோர் செய்திருக்கிறார். ஜெய்யின் அம்மாவாக அனுபமா குமார், அப்பா அழகம்பெருமாள், வில்லன் அஸ்வின் உள்ளிட்டோரும் அவர்களது பாத்திரமும், வலியவன் படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது!
டி.இமானின் இசை, தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள் எம்.சரவணனின் இயக்கத்தில் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு எனும் மெசேஜை புதுமையாகவும்,நீதி, நேர்மையுடனும் சொல்ல பெரிதும் உதவியுள்ளன எனலாம்!.
மொத்தத்தில், வலியவன்- நல்லவன் -வல்லவன் - வாழ்வான்!!.
கல்கி சினிமா விமர்சனம்
வலியவன்
வலிமையான திரைக்கதையோடு எடுக்கப்பட்டதே "வலியவன். வசனம் வலிது. காட்சிகள் அரிது. நடிப்பு இனிது. பாடல்களின் படப்பிடிப்பு புதிது. இயக்குநர் விரும்பியிருப்பது பெரிதினும் பெரிது. சரவணன் மீண்டும் நிரூபித்திருக்கிறார். படம் பார்க்க வருகிற ரசிகர்களை புத்திசாலிகளாக மதித்து திரைக்கதையை உருவாக்கியிருப்பதற்காக இயக்குநர் சரவணனுக்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம்.
முன்பின் அறிமுகமில்லாத அழகான பெண் (ஆண்ட்ரியா) திடீரென்று வந்து காதலைச் சொல்வதும், அவளைக் கண்டுபிடிச்ச ஜெய்- சப்வேக்களில், பெரும் அங்காடிகளில், சந்தடிமிக்க சாலைகளில், அறைக்கு, அலுவலகத்துக்கு என்று அலைவது, கான்ஃப்ரன்ஸ் கால்களில் நண்பர்களோடு அலம்பல் செய்வது என் யூத் ஸ்பெஷல் ட்ரீட்.
கதாநாயகன் ஜெய் சென்னையில் "அவ்ளோ பெரிய வீடு இருக்கிறப்ப - ஏன் நண்பர்களோட அறையில் தங்கியிருக்கிறார். வங்கி அதிகாரி (ஜெய்யின் அப்பா) முன்வரிசை பல் ஒன்று ஏன் விழுந்தது?
காதலைச் சொன்ன ஆன்ட்ரியா ஏன் சர்வதேச புகழ் குத்துச்சண்டை வீரர் அஸ்வினை அடிக்கச் சொல்கிறார்? சிம்பிளான கேள்விகளுக்கான பதிலாக திரைக்கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர். பின்னிட்டாரு.
ஆபீஸ் பார்ட்டியில் தண்ணி அடித்துவிட்டு, குற்ற உணர்வு மிகுந்து அம்மாவுக்கு போன் போட்டு ஜெய் கேவிக் கேவி அழுவதும், உயர் அதிகாரிகளுக்கும் கல்லூரி பேராசிரியருக்கும் நள்ளிரவில் போன் போட்டு பாவமன்னிப்பு கேட்பதும், லிப்ட் கொடுக்கும் ஆன்ட்ரியாவுக்குப் பிறந்தநாள் பரிசு (சூப்பர் கிப்டுங்கன்னா) கொடுப்பதும் என்று ஜெய் கலக்கியிருக்கிறார். கடைசி காட்சியில் சட்டையைக் கழற்றி விட்டு காக்ஸரை அடிக்கற காட்சியில் செம மிரட்டல்.
நாயகர் தர வரிசையில் ஜெய் மிகச் சுலபமாக இன்னொரு மேற்படியில் கால் வைத்திருக்கிறார் வெல்கம்.
பிச்சைக்காரனுக்கு ஜீன்ஸும், முத்தமும் - பிலால் ஹோட்டல் நான்-வெஜ் அயிட்டங்கள் - கையேந்தி பவன் வாடிக்கையாளர்களுக்கு என ஏராளமான கலகலப்பு. உதட்டின் நுனி வரை வந்து விட்ட கெட்ட வார்த்தையை அண்ணா சிலையைப் பார்த்து அடக்கிக் கொண்டு "அண்ணா இருக்கிறாருன்னு பார்க்கறேன் என் ஜெய் சொல்வது,
சப்வேயில் காதலை மறுதலிக்கும "ஆன்ட்ரியாவிடம் பெரியாரை "கோட் செய்வது (காதல்ங்கறது வாழ்க்கை, கல்யாணங்கறது சடங்கு. சடங்குக்காக வாழ்க்கையை இழந்துடாதே), அதற்கு ஆன்ட்ரியாவின் ரியாக்ஷன் காதல் தோல்வியில் புலம்பும்போது, இன்னொரு தோல்வியாளர் வந்து சேர்ந்துகொண்டு தத்துவங்களாகப் பொழிந்து விட்டு "டீக்கான காசை தானே கொடுப்பது என நெஞ்சை அள்ளும் காட்சிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்பா - பிள்ளைக்கான உறவுக்குள் ஒளிந்திருக்கும் உளவியலை ஒரு நேர்த்தியான காதலோடு சொன்னதற்காக "வலியவன் வெல்வான்.