3.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன், தர்ஷன்
இயக்கம் - அருண்ராஜா காமராஜ்
இசை - திபு நைனன் தாமஸ்
தயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
வெளியாகும் தேதி - 21 டிசம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் - 3.75/5

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து அதிகமான படங்கள் வருவதே இல்லை. எப்போதோ ஒரு முறை கபடி, கிரிக்கெட் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு சில படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. அந்தப் படங்களும், காதல், காமெடி என வேறு பாதையில்தான் பயணித்தன.

ஆனால், இந்த கனா படம் கிரிக்கெட்டை மையாக வைத்திருந்தாலும், விவசாயத்தின் பெருமையைப் பேசும் படமாக அமைந்துள்ளது. வாழ்க்கையை விளையாட்டாக நினைத்து வசதியாக வாழும் இயக்குனர்கள் எடுத்த கிரிக்கெட் படங்களுக்கும், விவசாயத்தை வாழ்க்கையாக நினைத்து வாழும் இந்த அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

இப்படி ஒரு படத்தை தன் முதல் தயாரிப்பாக எடுக்க நினைத்த சிவகார்த்திகேயனுக்கும் விவசாயத்தின் மீதுள்ள பற்றும் பாராட்ட வைக்கிறது. கிளைமாக்சில் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசுவதைவிட விவசாயத்தைப் பற்றிப் பேசி அனைவரது கைத்தட்டலும் கிடைப்பதே இந்தப் படம் எடுத்ததற்கான பாராட்டும், வெகுமானமும்.

குளித்தலை ஊரில் ஒரு விவசாயியாக இருப்பவர் சத்யராஜ். கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டவர். அவருடைய ஒரே மகள் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்பாவுக்கு கிரிக்கெட் மீதுள்ள காதலைப் புரிந்து கொண்டு தானும் எதிர்காலத்தில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக வரவேண்டும் என நினைக்கிறார். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் ஆட ஆரம்பிக்கிறார். ஊரில் உள்ள அண்ணன்களுடன் கிரிக்கெட் விளையாடி கற்றுக் கொண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற நினைக்கிறார். பல்வேறு தடைகளுக்குப் பிறகு அணியில் இடம் கிடைத்தாலும் ஆடும் 11 பேரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதன்பின் அவர் அந்த 11 பேரில் ஒருவராக இடம் பிடித்தாரா, சாதித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள ஷோபா, ஸ்மிதா பாட்டீல் என ஐஸ்வர்யா ராஜேஷை தாராளமாகக் கொண்டாடலாம். தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் ஏற்றும் நடிக்கும் ஒரு நடிகை இருக்கிறார் என்பதே சிறந்த விஷயம்தான். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்குள் அப்படியே நுழைந்து விடுகிறார். சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தார். இந்தப் படத்தில் பள்ளிக்கூடம் செல்லும் பெண்ணாக நடித்திருக்கிறார். கேரக்டருக்குள் அவர் பொருந்திப் போகிறாரா அல்லது அவருக்குள் அந்த கேரக்டர் பொருந்திப் போகிறதா என்று ஆச்சரியமளிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஏதோ, ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும், விளையாட்டு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. விளையாட்டு வீராங்கனை என்றால், எந்த விளையாட்டை அவர் விளையாடுகிறாரோ அதில் முறையான பயிற்சி எடுத்து நடித்தால்தான் படம் பார்க்கும் போது நம்பும்படியாக இருக்கும். கிரிக்கெட் பயிற்சி பெற்று, பௌலிங் வீசுவதையும் நம்பும்படி செய்து நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. காக்கா முட்டையில் தவறிப் போன தேசிய விருது இந்தப் படத்தில் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்தால் அது மேலும் பொருத்தமாக இருக்கும்.

படத்தின் நாயகன் என்றால் அது சத்யராஜ் தான். பெற்ற மகளின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் ஒரு பாசமான அப்பா. தமிழ் சினிமாவில் ஒரு அப்பா கதாபாத்திரம் படம் முழுவதும் வருவதே ஒரு ஆச்சரியமான விஷயம். சத்யராஜைத் தவிர வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவருக்கே உரிய வசனங்கள் அதிகமில்லை என்றாலும் ஒரு யதார்த்தமான விவசாயி அப்பா கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருப்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை, அவருடைய அனுபவம் அதில் தெரிகிறது.

ஐஸ்வர்யாவை ஒருதலையாகக் காதலிப்பவராக தர்ஷன். ஐஸ்வர்யாவை அடுத்த கட்டத்திற்கு எப்படியாவது அழைத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறார். கடைசியில் அவருக்கு ஐஸ்வர்யா கொடுக்கும் ஷாக், நமக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. தர்ஷனின் உதவியாளர்களாக இருக்கும் அந்த இரண்டு பேர்தான் படத்தின் நகைச்சுவை நடிகர்கள்.

ஐஸ்வர்யாவின் அம்மாவாக ரமா, ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அடம் புடிக்கவும் தெரியணும்,” என பேசுவதைப் பார்க்கும் போது நமக்கே ஒரு உத்வேகம் வருகிறது. சத்யராஜின் நண்பராக இளவரசு, ஐஸ்வர்யாவின் அண்ணனாக ஆடை வடிவமைப்பாளர் சத்யா, ஐஸ்வர்யாவை கிரிக்கெட் விளையாட வைக்கும் அந்த அண்ணன்கள் அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பு.

சிவகார்த்திகேயன் கிளைமாக்சுக்கு முன்பாக வருகிறார். ஒரே ஒரு கிரிக்கெட் மேட்ச்சில் விளையாடி ஓய்வு பெற்றவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கோச்சாக நியமிக்கப்படுகிறார். வித்தியாசமான தோற்றத்தில் சிவகார்த்திகேயன், முதல் முறையாக சீரியசான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

திபு நைனன் தாமஸ் இசையில் வாயாடி பெத்த புள்ள பாடல் ஏற்கெனவே சூப்பர்ஹிட். பின்னணி இசையிலும் அவருடைய திறமையை வெளிப்படுத்த பல காட்சிகள். உணர்வுகளை அவருடைய இசையாலும் ரசிக்க வைக்கிறார்.

கனா படத்தைப் பார்க்கும் போது, சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல், ஷாரூக்கான் நடித்த சக்தே இந்தியா ஆகிய படங்களின் ஞாபகம் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. ஐஸ்வர்யா, தேசிய கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சி பெறச் சென்ற பிறகு அங்கு நடக்கும் அரசியல், சண்டைகள் ஆகியவை வழக்கமான ஒன்று தான். சில காட்சிகள் இப்படித்தான் முடியும் என்று நாம் எதிர்பார்த்தால் அவை அப்படியே முடிவது கொஞ்சம் மைனஸ் பாயின்ட். விவசாயக் கடனுக்காக சத்யராஜை பாங்க் மேனேஜர் அசிங்கப்படுத்துவது ரொம்பவே ஓவர்.

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஐஸ்வர்யா எப்படியும் இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பையை வாங்கிக் கொடுப்பார் என்று படத்தின் கதையோட்டம் படம் பார்க்கும் போதே புரிந்துவிடும். ஆனால், அதை எப்படி அடைகிறார் என்பதை உணர்ச்சிக் குவியலாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். அதை வார்த்தைகளால் சொல்லி உணர வைக்க முடியாது, படத்தைப் பார்த்தால்தான் புரியும். பல காட்சிகளில் நம்மை மீறி கண்களில் வரும் கண்ணீர்தான் இந்தப் படத்திற்கான வெற்றி.

விளையாட்டை மட்டும் சொல்லாமல் விவசாயத்தையும் சேர்த்து, நாட்டு நடப்புகளையும் பொருத்தமாகச் சேர்த்து சொன்னதற்காக ரசிகர்கள் வெற்றிக் கோப்பையை பரிசாக அளிக்கலாம்.

கனா - காண வேண்டும்

 

கனா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கனா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓