பர்ஹானா,Farhana

பர்ஹானா - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன்
வெளியான தேதி - 12 மே 2023
நேரம் - 2 மணி நேரம் 21 நிமிடம்
ரேட்டிங் - 2.75

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் முஸ்லிம் குடும்பத்து வாழ்க்கையைப் பற்றிய கதையோ, அதைச் சுற்றிய கதைக்களங்களோ அதிகம் வந்ததில்லை. இந்து குடும்பம், கிறிஸ்துவ குடும்பம் பற்றிய கதைகள் தான் அதிகம் வந்துள்ளன. ஆனால், இந்தப் படம் பலருக்கும் அதிகம் தெரிந்திராத ஒரு சராசரி முஸ்லிம் குடும்பத்து வாழ்வியலைப் பதிவு செய்திருக்கிறது.

முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குழந்தைகளுக்காக அவர்கள் தன்னைப் போல வறுமையில் சிக்கித் தவிக்கக் கூடாது என்பதற்காக வேலைக்குச் செல்கிறார். வேலைக்குச் சென்ற இடத்தில் அவர் சந்திக்கும் சிக்கல்கள், அதை அவர் எதிர் கொள்ளும் விதம், அவரது குடும்பத்தினர் அவரை எதிர்கொள்ளும் விதம், அதிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்.

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கணவர் ஜித்தன் ரமேஷ், மூன்று குழந்தைகள் என அருகருகே மற்ற உறவினர்களுடன் கூட்டுக் குடும்பமாக இருக்கிறது. தனது குழந்தைகளின் எதிர்காலம் கருதி புதிதாக வேலைக்குச் செல்கிறார். வேலைக்குச் சென்ற இடம் ஒரு கால் சென்டர். கூடுதல் சம்பளம், இன்க்ரிமென்ட் கிடைக்கும் என்பதற்காக 'பிரண்ட் ஷிப் சாட்' என்ற பிரிவுக்குச் செல்கிறார். அங்கு வரும் 'டெலிபோன் கால்'கள் அனைத்துமே ஆபாசமானவைதான். தங்கள் அடையாளத்தைச் சொல்லாமல் பணி செய்பவர்கள் வரும் போன்கால்களில் பேச வேண்டும். இப்படியெல்லாம் கூட 'கால் சென்டர்' இருக்கிறதா ?. ஒரு வாரம் அதில் வேலை பார்க்கலாம், பிடிக்கவில்லை என்றால் விலகலாம் என அப்பணியைத் தொடர்கிறார் ஐஸ்வர்யா. அப்படி வரும் ஒரு போன்காலில் ஒருவரிடம் அன்பாகப் பேச ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா. ஆனால், ஒரு கட்டத்தில் அவர், ஐஸ்வர்யா யார் என்பதைத் தெரிந்து கொண்டு அவரை மிரட்ட ஆரம்பிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எந்த மதப் பெண்களாக இருந்தாலும் பல பெண்கள் அவர்களது விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாத ஒரு கட்டமைப்புதான் நம்மிடம் உள்ளது. தங்கள் கனவுகளை, ஆசைகளை, லட்சியங்களைத் துறந்து ஏதோ ஒரு சூழலில் அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தள்ளப்படுகிறார்கள். அப்படியான ஒரு கதாபாத்திரமாகத்தான் 'பர்ஹானா' கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்படிப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சினைகளைச் சமாளிக்க வேலைக்கு வந்தால் அவர்கள் சில தரம் கெட்ட மனிதர்களால் எவ்வளவு தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் இப்படம் சொல்ல முயல்கிறது.

முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர், மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான 'பர்ஹானா' கதாபாத்திரம், 'கால் சென்டர்' வேலையில் அதுவும் ஆபாசமான ஒரு வேலையில் இருக்கிறார் என்பது படத்தில் பெரும் முரணாக அமைந்திருக்கிறது. அது அக்கதாபாத்திரம் மீது அனுதாபத்தை வரவழைப்பதற்குப் பதிலாக எதற்கு இப்படிப்பட்ட வேலை, நாட்டில் வேறு வேலையே இல்லையா என யோசிக்க வைக்கிறது.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் ஐக்கியப்படுத்துக் கொள்ளும் நடிகைகளில் படத்திற்குப் படம் தன்னை மெருகேற்றி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த 'பர்ஹானா' கதாபாத்திரத்திலும் அப்படியே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். யாரென்றே தெரியாத ஒருவன் தன்னை மிரட்டுவதைக் கண்டு ஆரம்பத்தில் பயந்தாலும் ஒரு கட்டத்தில் அதைத் துணிச்சலாய் எதிர்த்துப் போராடும் போது, பெண்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வரவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

நடிகர்கள் அனைவருக்கும் திருப்புமுனையான ஒரு கதாபாத்திரம் ஒரு நாள் வந்தே தீரும். அப்படி ஒரு கதாபாத்திரம் 'ஜித்தன்' ரமேஷுக்கு இப்படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. படிக்காதவராக இருந்தாலும் வேலைக்குச் செல்லும் மனைவி ஐஸ்வர்யாவுக்காக உறுதுணையாக இருக்கும் ஒரு நிறைவான கதாபாத்திரம். நல்ல கதாபாத்திரங்கள் கொடுங்கள், நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என ஜித்தன் ரமேஷ் உணர்த்தியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் வேலை செய்பவராக அனு மோள். இப்படியான ஒரு ஆதரவு பணியிடத்தில் கிடைத்தால் அவ்வளவு ஆறுதலாக இருக்கும். தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பெண்கள் கொஞ்சம் தடம் மாறினால் எப்படியான பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என ஐஸ்வர்யா தத்தா கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். சில காட்சிகள்தான் என்றாலும் அழுத்தமான நடிப்பைப் பதிவு செய்திருக்கிறார் கிட்டி. செல்வராகவன் கதாபாத்திரம் படத்தின் சர்ப்ரைஸ்.

சென்னையின் மற்றுமொரு நெருக்கடியான பகுதியை இயல்பு மாறாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய். ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையில் சிறப்பிக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன் இடையிலான தொலைபேசி உரையாடல்களை அவ்வளவு நீளமான காட்சிகளாக அமைத்திருப்பது ஆரம்பத்தில் தொய்வைத் தருகிறது, பொறுமையையும் சோதிக்கிறது. அதன்பிறகே படம் அதன் இலக்கை நோக்கி நகர்கிறது.

சில கருத்துப் பரிமாற்றங்களை, கருத்து மோதல்களை, ஏன் சர்ச்சைகளைக் கூட இப்படம் உருவாக்கலாம்.

பர்ஹானா - பதட்டத்துடன்...

 

பர்ஹானா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பர்ஹானா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓