தினமலர் விமர்சனம்
வின்சென்ட் செல்வாவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜித்தனின் பகுதி இரண்டாக (பெயரில் மட்டும்...), "ஜித்தன் ரமேஷே நடிக்க, ஆர்.பி.எம். சினிமாஸ் ராகுல் தயாரித்து, வழங்கி, அவரே இயக்கியும் இருக்கும் திரைப்படம் தான் ஜித்தன் - 2.
கதைப்படி, ஜித்தன் படத்தின் க்ளைமாக்ஸில் இறந்து போன நாயகர் ரமேஷ், இதில் சூர்யா எனும் பெயரில் உயிருடன் வருகிறார். சற்றே, இன்னோசென்டாக காட்சியளிக்கும் அவர், தன் தந்தை சாகும் தருவாயில் சொன்னபடி, கொடைக்கானல் பகுதியில் சொந்தமாக ஒரு பங்களா வாங்குகிறார். எட்டாம் எண் உடைய அந்த வீடு ஒரு பேய் பங்களா. அந்த வீட்டில் பேயாக இருக்கும் சிருஷ்டி டாங்கே, ரமேஷையும், ரமேஷ் பேய் ஓட்ட கூட்டி வரும் ப்ரண்ட்ஸ், போலீஸ், பெண் மந்திரவாதி உள்ளிட்டோரையும், ஒரு கட்டத்தில் அந்த வீட்டை விற்க ஆசைப்படும் சூர்யா - ரமேஷிடமிருந்து அந்த வீட்டை வாங்க வரும் எல்லோரையும் படுத்தும் பாடுதான் ஜித்தன் - 2 படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாமும்!
ரமேஷ் - சூர்யாவாக செமயாய் பயந்து மிரட்டி பயங்காட்டியிருக்கிறார். நடிப்பு விஷயத்தில் ஜித்தன் ரமேஷ், ஜித்தன் என்பதை நிரூபித்திருப்பதற்காக பாராட்டலாம்.
பின்பாதியில், அழகான பேயாக சிருஷ்டி டாங்கே கச்சிதம். தான் பேயான கதையையும், தன் காதல் கதையையும் கூறும் இடம் சிலிர்ப்பு.
ரமேஷின் முறைப்பெண்ணாக, அஞ்சலியாக வரும் மெகாலி, மலையாள பெண் மந்திரவாதி, கருணாஸ், மயில்சாமி, அலட்டல் ஆந்திரா ரவுடியோகி பாபு, சோனா, ஜார்ஜ், லொள்ளு சபா சுவாமிநாதன், நெல்லை சிவா, வேல்முருகன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர், பேயுடன் போட்டி போட்டு ரசிகனை சாகடிக்கின்றனர்.
படத்தொகுப்பாளர் மாருதி க்ரீஷின் கத்தரி, படத்தில் வரும் பேயை பார்த்து மிரண்டு பல இடங்களில் கத்தரிக்க மறந்து ரசிகனை கொட்டாவி விட வைத்திருப்பது கொடுமை!
எஸ்.கே.மிட்செலின் ஒளிப்பதிவு ஓவியப் பதிவு! சில இடங்களில் மிரட்டல் பதிவு!
சின்னகுட்டி நாத்தனா சிம் கார்டை மாத்தினா.... பாடல் ஸ்ரீகாந்த் தேவா இசையில் செம குத்து. ரீ-ரெக்கார்டிங்கும் பேய் படங்களுக்கே உரிய மிரட்டல்!
மற்றபடி, வின்சென்ட் செல்வாவின் கதை, திரைக்கதை, வசனத்தில் ராகுலின் இயக்கத்தில் முன்பாதி ஜித்தன்-2 லாஜிக் இல்லாமல் பயமுறுத்தி இருந்தாலும், பின்பாதி படம் சென்டிமெண்ட், செட்டில்மெண்ட்! அதுவும் ஓவர் டோஸ் என்பது அபத்தம்! ப்ரியமுடன், ஜித்தன் படங்களை எழுதிய, இயக்கிய வின்சென்ட் செல்வாவின் எழுத்தில் வந்துள்ள படமா.? இது...? நம்ப முடியவில்லை!
ஆகமொத்ததில், ஜித்தன்-2 - செத்தான் ரசிகன்!
--------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
பத்து வருடத்துக்கு முன்னால் வந்த படம் The Invisible man கதையின் தழுவல், அதன் நீட்சியாக இந்தப் படம் இருக்குமோ என்ற ஆர்வத்தை ஆரம்பக் காட்சி ஏற்படுத்துகிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, இதுவும் பேய் வீடு, குடியிருப்பவர்களை மிரட்டுவது, பேயோட்ட வந்தவர்களையே ஓட்டுவது என்ற மாமூல் பேய்ப் படம்தான்.
ஆரம்பத்தில் பேய் வீட்டில் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் படம் தானாக விழுவது, கண்ணாடிச் சிதறல்கள் தரையில் இருந்து எழும்புவது என்று திகிலடிக்க வைக்கிறார்கள். நேரம் ஆக ஆகப் பேயின் சேட்டைகள் மிக அதிகமாகி நமக்குச் சோர்வூட்டுவதென்னவோ நிஜம்.
பேயைப் பிடிக்கப் போலீஸ் வரும் காட்சிகள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. அதையே டெவலப் செயதிருந்தால்கூடப் படம் தேறியிருக்கும். யோகிபாபுவின் காமெடியும், மலையாள மாந்த்ரீகி(?) பேயோட்ட முனைவதும் இழுவை.
சூப்பர் மார்க்கெட் காட்சியும் கருணாஸ் பேயை அடைய முயலும் இடங்களும் விரசம். சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் வேறு.
'பேய்க்கூடவே பீட்ஸா சாப்பிடுவேன்', 'நம்ம ஷேடோ நம்மள விடக் கருப்பா இருக்கே', 'நான் லோக்கல் ரவுடி, எஸ்.டி.டி. ரவுடி எல்லோரையும் சமாளிப்பேன்' என்பது போன்ற ஓரிரு வசனங்கள் சிரிப்பலையை உண்டாக்குகின்றன.
ஒரே ஒரு பாடல் 'சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே?' என்ற புகழ்பெற்ற இலங்கை மெட்டில், 'சின்னகுடி நாத்தனா, சிம் கார்டை மாத்தினா' என்று குத்துப்பாடலாக உருமாறிக் காதைக் கிழிக்கிறது.
கதாநாயகனின் கைகளும் கால்களும் இடம் மாறுவதுபோன்ற ஓரிரு கிராஃபிக்ஸ் காட்சிகள் தேவலாம். மற்றவையெல்லாம் மாயாபஜார் காலத்து சிஜி!
கதாநாயகின் காதலியாக ஓரிரு சீன்களில் நடிப்பவர் கையை ஆட்டி ஆட்டி வசனம் பேசுவது அமெச்சூர்த்தனம்.
பேயாக வரும் கன்னக்குழிக் கன்னுக்குட்டி ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு, வெண்ணிற ஆடை உடுத்திப் பதுமை போல வந்துபோவதைத் தவிர வேறு வேலை இல்லை.
பலவிதமான சாகசங்களைப் புரியும் பேய்க்குத் தான் குடியிருக்கும் வீட்டை இடிக்க வருபவர்களை விரட்ட ஏன் முடியவில்லை என்பது அந்தப் பேய்க்கே வெளிச்சம்! அநேகமாகப் பேயே அச்சப்படுவதும் அழுவதும் மட்டுமே புதுமை என்று சொல்லலாம். போதாக்குறைக்குப் படத்தின் முடிவு தெளிவில்லாமல் இருக்கிறது.
ஜித்தன் 2: சுத்தம்!
தியேட்டரில் திருநெல்வேலி ரோஷன் கருத்து: இடைவேளைக்கு முன்னே கொஞ்சம் காமெடியாட்டு கிடக்கு, பெறகு படம் முழுக்க செரியில்லல்லா, ஏ சிரிப்பும் இல்ல, பயமும் இல்லல்லா. ஏ ரெம்ப அலுப்பால்ல கெடக்கு!