நடிப்பு - ஜித்தன் ரமேஷ், கல்லூரி வினோத்
தயாரிப்பு - சிக்மா பிலிம்ஸ்
இயக்கம் - ஆர்எல் ரவி, ஸ்ரீஜித் விஜயன்
இசை - ரெஜிமோன்
வெளியான தேதி - 13 செப்டம்பர் 2019
நேரம் - 1 மணி நேரம் 56 நிமிடம்
ரேட்டிங் - எதுக்கு ரேட்டிங் ?
தமிழ் சினிமா எப்படி தாழ்ந்து கொண்டு போகிறது என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம். சில ஆபாசப் படங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அது போல ஒரு படத்தைக் கொடுத்தால் ரசிகர்கள் வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் காட்சிகளுடன், இரட்டை அர்த்த வசனங்களுடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் மேக்கிங், காட்சிகள் என அனைத்திலும் நாடகத்தனம் அதிகம் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை மனதில் வைத்து அதைக் கிண்டலடிப்பதாக நினைத்துக் கொண்டு, பேய், பழி வாங்கல் என என்னென்னமோ சொல்லி கதை சுற்றுகிறார்கள்.
ஒரு தனியார் டிவியில் 'ஒரு பேய் ஒரு கோடி' என்ற நிகழ்ச்சியை, பேய் இருக்கிறது என்று சொல்லப்படும் ஒரு பங்களாவில் நடத்துகிறார்கள். நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வீட்டில் திடீரென பேய் வந்து பயமுறுத்துகிறது. அதே சமயம், நான்கு ஆண்களில் ஒருவரான ஜித்தன் ரமேஷ், பெண் வேடம் போட்டு மூவரைக் கொலை செய்கிறார். அதன் பின் காவல்துறை அவரைக் கைது செய்கிறது. அவர் ஏன் கொன்றார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சாதாரண சிசிடிவி காமிராவை அந்த பங்களாவில் வைத்துவிட்டு அதன் மூலம் படம் பிடித்து நேரடியாக வேறு ஒளிபரப்புகிறார்களாம். அந்த டிவி நிகழ்ச்சியையே அப்படித்தான் எடுக்கிறார்கள் என நினைத்து படமாக்குகிறார்கள் என்றால், அதை வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தை எப்படி எடுப்பார்கள் என யோசித்துக் கொள்ளுங்கள்.
படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் கார்டு போடுவதிலிருந்து கடைசி என்ட்கார்டு போடுவது வரை இசையமைப்பாளர் கீ போர்டு மீது ஏறி ஓடிக் கொண்டே இருந்திருப்பார் போலிருக்கிறது. காதைக் கிழிக்கும் அதிக ஓசையுடன் வாத்தியங்களை இசைத்து (?) காதில் ரத்தம் வர வைக்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் அந்த பத்து பேரில் ஜித்தன் ரமேஷ், கல்லூரி வினோத், மனோபாலா ஆகியோர்தான் தெரிந்த முகங்கள். நடிப்பு என்ற பெயரில் ஒவ்வொருவரும் நம் பொறுமையை சோதிக்கிறார்கள்.
தமிழ் சினிமா ஏதோ தட்டுத் தடுமாறி தவழ்ந்து கொண்டிருக்கிறது. இது போன்ற படங்களைக் கொடுத்து மேலும் தள்ளிவிட்டு விடாதீர்கள்.
ஒங்கள போடணும் சார் - ஒங்கள என்ன பண்றது சார்