Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

இவன் வேற மாதிரி

இவன் வேற மாதிரி,Ivan Vera Mathiri
26 டிச, 2013 - 15:44 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இவன் வேற மாதிரி

தினமலர் விமர்சனம்


பெரும் சினிமா பின்னணி கொண்ட விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம்.., "எங்கேயும் எப்போதும் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் எம். சரவணனின் இரண்டாவது படம்.. என ஏகப்பட்ட "இரண்டாவது.. எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும் இந்த வாரத்திலும், இன்னும் சில வாரங்களிலும் முதல் இடத்தைப் பெற "முத்தாய்ப்பாய் வந்திருக்கும் திரைப்படம் தான் "இவன் வேற மாதிரி.

கதைப்படி சென்னை சட்டக்கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் போலீஸ் கண் எதிரே அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க நடந்தேறிய கொலை வெறி மாணவர் அடிதடி தான் "இவன் வேற மாதிரி படத்திற்கான அடி நாதம்! அந்த வன்முறை சம்பவத்தில் வெகுண்டெழும் விக்ரம் பிரபு, அந்த அடிதடிக்கு காரணமான பதவி வெறிபிடித்த சட்ட அமைச்சர் உள்ளிட்ட சகலமானவர்களையும் புரட்டி எடுத்து சட்டத்தின் முன் நிறுத்துவதும், சாட்சியே இல்லாமல் கொல்வதும் தான் இவன் வேற மாதிரி படத்தின் மொத்த கதையும்!

இத்தனைக்கும் விக்ரம் பிரபு, சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவரா என்று கேட்டால் அதுதான் இல்லை. அப்புறம் பின்னே..?! அவர் "விஸ்காம் முடித்து சின்ன சின்ன போட்டோ கிராபி வேலைகள் செய்யும் புகைப்பட கலைஞர். அவருக்கு சட்டக்கல்லூரி அடிதடியில் ஆக்ரோஷம் பீறிடுவதற்கான காரணம் என்ன? எனும் கதையுடன், கதாநாயகி சுரபி, விக்ரம் பிரபுவின் காதலையும் (அப்போ நாயகி சுரபி சட்டக்கல்லூரி மாணவியாக்கும்... என நீங்கள் நினைத்தால்... அதுவும் இல்லை..என்பது தான் ஸ்கிரீன்பிளே மேஜிக்!) கலந்து கட்டி கலர்புல்லாக அதே நேரம் லவ், ஆக்ஷன், சென்டிமென்ட் திரில்லராக இவன் வேற மாதிரி திரைப்படத்தை புதுமாதிரியாக தந்திருக்கிறார் இயக்குநர் எம். சரவணன். அதற்காக அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!

இயக்குநர் எம். சரவணனின் எதிர்பார்ப்பை அவர் கற்பனையில் உருவாக்கிய குணா "அலைஸ் குணசேகரன் பாத்திரமாகவே மாறி நடித்து, அடித்து உடைத்து தூள் பரத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. "கும்கியில் ஒரு மாதிரி விக்ம் பிரபு என்றால் இதில் "வேற மாதிரி விக்ரம்! பிரபு (இளைய திலகத்தை சொன்னோம்..!) கவலையை விடுங்கள் குட்டி 16 அடி அல்ல தாத்தா நடிகர் திலகத்திற்கும் சேர்த்து 64 அடி பாயும்!

புதுமுகம் சுரபி டில்லி பொண்ணாம்! செவத்த சேலத்து பக்கம் பொண்ணு மாதிரி மாலினியாகவே மாறி நடிப்பில் பொளந்து கட்டியிருக்கிறார். அதுவும் விக்ரம் பிரபு தந்த மீன்களும் தொட்டியும் கையுமாக முன்பாதியில் கடும் காதல் தவம் புரியும் அம்மணி, பின் பாதியில் தன் காதலன் ஒரு நல்ல விஷயத்திற்காக அமைச்சர் தம்பி அண்ட் கோவினரை அடித்து, அடைத்து உதைத்திருக்கிறார் என தெரிந்ததும் அதை காட்டிக்கொள்ளாமல் விக்ரமை தொடர்ந்து காதலித்து வில்லனின் கைகளில் சிக்கி உண்மையை சொல்ல மறுத்து திருஷ்டி பொம்மையாகும் இடங்கள் கண்ணீர் இல்லாதோர் கண்களையும் கரைத்து விடும்!.

அரவிந்தன் ஐ.பி.எஸ்., ஆக கணேஷ் வெங்கட்ராமன், சட்டத்துக்கு புறம்பான சட்ட அமைச்சராக வள்ளி ஹரிராஜன், அவரது தம்பியாக வம்சி கிருஷ்ணா, அம்மா சார்மிளா, புதிய அப்பாக்கள், நாயகியின் புதுமுக தங்கை எல்லோரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள்.

சி. சத்யாவின் இசையில் லவ்வுல... லவ்வுல விழுந்துட்டேன்... என்னை மறந்தேன் இது தான் உள்ளிட்ட ஆறு பாடல்களும் எங்கேயும் எப்போதும் பட சாயலிலேயே இருந்தாலும் அதுவும் இவன் வேற மாதிரி படத்துக்கு ப்ளஸ் தான்! சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சக்தி கூட்டுகிறது. சண்டை பயிற்சியாளர் ராஜசேகரின் அதிரடியும் அசத்தம்!

நாயகி சுரபியை காணோம் என போலீஸ் ஸ்டேஷன் வரும் இரு வீட்டு பெற்றோரிடமும், போலீசார் இந்த காதலன் இல்லாமல் பொண்ணுக்கு வேறு காதலர் யாரும் உண்டா? எனக் கேட்டு விட்டு, இப்படி கேட்கறதால எங்களை மாதிரி போலீஸை தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணை தேட இதுமாதிரி டீடெயில் எல்லாம் உதவியா இருக்கும் எனும் வசனத்தில் ஆகட்டும், விக்ரம் பிரபு - சுரபி வீட்டினர் இவர்கள் காதல் தெரிந்து முதன் முதலில் சந்திக்கும் காட்சியில், இவர் வீட்டினருக்கு அவரும், அவர் வீட்டினருக்கு இவரும் குடிக்க ஏதோ பானம் எடுத்து செல்லுகின்ற காட்சியில் ஆகட்டும் புரட்சி படைத்திருக்கிறார் இயக்குநர்.

அதேநேரம் முன்பாதியில் தெரியும் சற்றே குறைவான வேகம், வாட்ச் மேன் கொலையை தாமதமாக துப்பு துலக்குவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும் "இவன் வேற மாதிரி - ரொம்ப புது மாதிரி.!


------------------------------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com



வில்லன் சட்டத்துறை அமைச்சர் . அவர் தம்பி ஒரு கொலைக்குற்றவாளி. அதுக்காக ஒரு கொலை தான் செஞ்சான்னு அர்த்தம் இல்லை, பல கொலை, கொள்ளை,
ரேப் செஞ்சவன் தான். காலம் பூரா தன் தம்பி ஜெயில்ல தான் களி சாப்பிடப்போறான்னு தெரிஞ்சுக்கிட்ட அமைச்சர் அட்லீஸ்ட் 15 நாளாவது ஜாலியா இருக்கட்டும்னு அவனை பரோல்ல கொண்டு வர்றாரு.

ஹீரோ ஒரு சாதாரண ஆள் தான். தன் கண் முன்னே நடக்கும் சட்டக்கல்லூரியில் மாணவர்களை ரவுடிகள் அடிப்பதைப்பார்த்து அதுக்குக்காரணமான அமைச்சரின்
தம்பியை கிட்நாப் பண்ணி ஒரு கட்டிடத்தில் அடைச்சு வெச்சுடறாரு. கெடு முடிஞ்சதும் ஜெயில்ல அமைச்சரோட தம்பி இல்லாத மேட்டரை ஹீரோவே ஃபோன் பண்ணி
தகவல் தெரிவிக்கறார். நாடே பத்திக்குது , அமைச்சருக்கு பதவி போகுது. ஹீரோ வில்லனின் தம்பியை ரிலீஸ் பண்ணிடறார். வெளில வந்த தம்பி ஹீரோயினை
கடத்தி அதே போல் ஒரு பில்டிங்க்ல வெச்சுடறார். இருவருக்கும் நடக்கும் சேசிங்க் தான் பின் பாதி பர பர திரைக்கதை .

எங்கேயும் எப்போதும் இயக்குநரிடம் எனக்குப்பிடிச்சதே சமூக அக்கறையுடன் கூடிய ஒரு மெசேஜை எப்படி கமர்ஷியலா சொல்லனும் என்ற வித்தை தெரிந்த
ஷங்கர் தனம் தான். அபாரமான திரைக்கதை. சீட் நுனியில் உட்கார வைக்கும் சம்பவங்கள் என கலக்குகிறார். பொதுவா முதல் படம் ஹிட் கொடுத்தவங்க 2 வது
படத்தில் சறுக்கிடுவாங்க என்ற கோடம்பாக்க ஜோசியர்கள் கூற்றை சறுக்க வெச்சுட்டார். வெல்டன் சார்.

ஹீரோவா கும்கி ஹீரோ விக்ரம் பிரபு. ஆக்சன் ஹீரோவா இவர் செஞ்ச முதல் படமே வெற்றி என்பது நல்ல விஷயம் . அதுக்காக அவர் ஓப்பனிங்க் பில்டப்,
நம்ப முடியாத ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் நடிக்கலை. ஒரு இயக்குநரின் நடிகரா அளவா செஞ்சிருக்கார்.

புதுமுகம் சுரபி முகத்தில் அமுத சுரபி. பால் மனம் மாறா பாலகி. தேகத்தில் இளமை சுரபி. இவர் கொஞ்சல் லைலாத்தனமாய், ஜெனீலியாத்தனமாய் லூஸாக வந்தாலும் ரசிக்க வைக்கிறார். இவர் அணிந்து வரும் உடைகள் கன கச்சிதம் . மிக கண்ணியமான உடைகள். ஓப்பனிங்க் ஷாட்டில் ஸ்கிப்பிங்க் ஆடும்போது கூட கேமரா கண்ணீயம் காட்டி இருக்கிறது.

ஹீரோயினுக்கு தங்கையா மாளவிகா மேனன். இவர் ஒரு அக்மார்க் ஃபிகர். அதென்ன அக்மார்க்? மார்க் போடும் லெவலைத்தாண்டிய ஃபிகர் எல்லாம் அக்மார்க் ஃபிகரே . இவர் செய்யும் குறும்புத்தனங்கள் , முக பாவனைகள் நிச்சயம் அடுத்த படம் ஹீரோயினாகத்தான் செய்வார் என்பதை உறுதிப்படுத்துது.

ஹீரோயினின் அம்மாவாக வரும் ஷர்மிளியும் வெரிகுட். 2 வில்லன்களும் சரி ஆக்டிங்க். அதுவும் அமைச்சரின் தம்பியாக வருபவர் போடும் சண்டைக்காட்சிகள் அபாரம் . ஸ்டண்ட் மாஸ்டர், ஆக்ஷன் சீக்வன்ஸ் மேனேஜர் எல்லாருக்கும் ஒரு ஷொட்டு.

சி.பி.கமெண்ட் : எல்லா செண்ட்டர் ரசிகர்களுக்கும் பிடிக்கும். பி.சி. செண்ட்டர்களில் பொங்கல் வரை, ஏ செண்ட்டர்களில் அதைத்தாண்டியும் ஓடும்.

இவன் வேற மாதிரி - பரபர பட்டாசு, அரங்கம் அதிரும் கைதட்டலுடன் கமர்ஷியல் ஆக்சன்!


--------------------------------------------------------------------

குமுதம் விமர்சனம்


பக்கா ஆக்ஷன் பேக் ஸ்டோரியுடன் களத்தில் குதித்து கலக்கியிருக்கிறார்கள் "எங்கேயும் எப்போதும் சரவணனும், சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவும்.

கதை?
அராஜகம் செய்யும் மந்திரியை ஓர் அப்பாவி இளைஞன் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாக திட்டம் போட்டு தண்டிக்கிறான் என்ற ஒருவரிக் கதையை இத்தனை சுவாரஸ்யமாக தர முடியுமா?

ஜெயிலில் இருக்கும் மந்திரியின் தம்பி பரோலில் 15 நாள் ஜாமினில் வெளிவர, அவனைக் கடத்திவைத்து, அதனால் மந்திரியின் பதவியும் போய், சிறைக்கும் அனுப்பும் ஹீரோ, கொலைகார மந்திரி தம்பியினால் என்ன ஆனான்? என்பதை வழக்கம் போல் இல்லாமல் வேறு மாதிரி செய்திருக்கிறார்கள்.

"கும்கியில் யானையில் பயணித்த விக்ரம் பிரபு, இதில் முழுக்க முழுக்க மோட்டா பைக் சவாரி! தாத்தா, அப்பா வாசனை எல்லாம் இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் அடக்கி வாசித்து அப்ளால் வாங்குகிறார். வில்லான், தன் காதலியைக் கடத்திவிட்டான் என்று தெரிந்ததும் பித்துப்பிடித்தது போல் புலம்பியபடி அலைவது வெகு இயல்பு.

எங்கிருந்து பிடித்தார்கள் சுரபியை? எம்மாம் பெரிய கண்ணு! தமிழ் சினிமாவை சுலமாய் ஒரு வட்டம் வருவார் என்று பட்சி சாஸ்திரம் சொல்கிறது. லைலா, ஜெனிலியா டைப் பாத்திரம்தான் என்றாலும் காதலை அமுதசுரபியாய் அள்ளி அள்ளித் தருகிறார். மீன், குழந்தை என்று ஒவ்வொரு தடவையும் அப்பாவியாய் ஹீரோவிடம் மாட்டித் தவிக்கும் காட்சிகள் கலகலக்க வைக்கின்றன. அந்தப் பெண்ணைப் போய் திருஷ்டி பொம்மையாய்த் தொங்கவிட்டிருப்பது அராஜகம்யா!

டாய்லெட்டில் தண்ணீர் குடிக்கும் வம்சி கிருஷ்ணா, தெனாவெட்டும் கொடூரமும் காட்டியே ஸ்கோர் செய்கிறார்.

"மறந்தேன் பாடலை மறக்க முடியவில்லை. "லவ்வுல லவ்வுல வும் லவ்! இசை சத்யா. ஆனால் ஆர்.ஆர்.ரில் துப்பாக்கி முதல் இளையராஜா வரை சுட்டிருப்பது ஏனோ?
படத்தின் பெரிய பலம் திரைக்கதை. தன்னை அடைத்து வைத்தவன் யார் என்றே தெரியா நிலையில் அந்த வில்லன் ஒவ்வொரு விஷயமாய் ஆராயந்து விக்ரமை நெருங்குவது விறுவிறு. சுரபியின் வங்கி எண்ணை அத்தனை சத்தமாக வில்லன் காதில் விழும்படி ஹீரோ சொல்வாரா என்று சின்னச் சின்ன இடங்களில் கோ(ஓ)ட்டை விட்டாலும் திரைக்கதையின் வேகம் அதையெல்லாம் மறக்கவைத்துவிடுகிறது.

"ஒரு பெண்ணுக்கும் 20 நிமிஷம் செல்ஃபோன்ல காலோ, மெசேஜோ வரலைன்னா அவ நல்ல பொண்ணுதான் சார்! என்று ஆட்டோகாரர் சொல்லும்போது தியேட்டரில் சிரிப்பலை. (நாட்ல இவ்ளோ பேரா பாதிக்கப்பட்டிருக்காய்ங்க!)

ஸ்டைலிஷான சண்டைக்காட்சிகள் யார்யா ஸ்டண்ட் மாஸ்டர்? என்று ஆவலை ஏற்படுத்துகிறது. ராஜசேகருக்கு ஒரு பூங்"குத்து!

ஒரு துணை நடிகர் போல் கணேஷ் வெங்கட்ராமை வேஸ்ட் செய்திருக்கவேண்டாள். கடைசியில் "இவ்வளவு விஷயம் செய்திருக்கிற நீ மீசையைக் கொஞ்சம் பெரிசா வச்சிருக்கலாம் என்று சொல்லிவிட்டுப்போவது அழகு..

இ.வே.மா. - பிரில்லியண்ட்!

ஆஹா! திரைக்கதை, விக்ரம்பிரபு, சுரபி.
ஹிஹி! யூகிக்க முடியும் சில காட்சிகள்

குமுதம் ரேட்டிங்! - நன்று



வாசகர் கருத்து (77)

mkp - snlur  ( Posted via: Dinamalar Windows App )
31 டிச, 2013 - 08:06 Report Abuse
mkp அந்த அழகு தெய்வத்தின் பேரனா இவன்
Rate this:
saminathan - namakkal  ( Posted via: Dinamalar Android App )
29 டிச, 2013 - 22:46 Report Abuse
saminathan namakkal ku peruma sathuta Saravana
Rate this:
krishna - chennai,இந்தியா
28 டிச, 2013 - 12:27 Report Abuse
krishna விஜயின் தலைவாவை விட நன்றாகவே இருக்கிறது
Rate this:
Thala Gopi - Sivakasi  ( Posted via: Dinamalar Android App )
28 டிச, 2013 - 11:55 Report Abuse
Thala Gopi படத்தை குற்றம் சொல்பவர்கள் நிச்சயமாக தி்ரையரங்கில் பார்த்தி்ருக்க மாட்டார்கள்
Rate this:
Thala Gopi - sivakasi  ( Posted via: Dinamalar Android App )
28 டிச, 2013 - 11:48 Report Abuse
Thala Gopi After a long time good movie which is best to watch with family. we watched the movie three times in theatre with our whole family.நல்ல கதையம்சம் கொண்ட சிறந்த தி்ரைப்படம் குடும்பத்துடன் காணத்தகுந்த படம்
Rate this:
மேலும் 72 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in