
அயோத்தி
விமர்சனம்
தயாரிப்பு - டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் - மந்திரமூர்த்தி
இசை - என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு - சசிகுமார், பிரியா அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா, புகழ்
வெளியான தேதி - 3 மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
தமிழ் சினிமாவில் இதுவரையில் ஆயிரக்கணக்கான கதைகள் வந்துள்ளன. ஆனால், இந்த மாதிரியான ஒரு கதை இதுவரை வந்ததில்லை என தாராளமாகச் சொல்லலாம்.
ஊர் விட்டு ஊர் வந்து இறந்து போன ஒரு பெண்ணின் உடலை, அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி மிகுந்த சிரமங்களுக்கு இடையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஒரு உதவிகரமான மனிதனின் கதைதான் இந்த 'அயோத்தி'.
அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தனது மகள் பிரியா அஸ்ரானி, மகன், மனைவி ஆகியோருடன் வருகிறார் யஷ்பால் சர்மா. முரட்டுத்தனமான, பாசமற்ற மனிதரான யஷ்பால் செய்த பிரச்சனையால், மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகிறது. விபத்தில் பலத்த காயமடைந்து மரமணடைகிறார் யஷ்பாலின் மனைவி. அன்று இரவு மட்டுமே ஒரு விமானம் காசிக்குச் செல்ல உள்ள நிலையில் தனது மனைவியை போஸ்ட் மார்டம் கூட செய்யக் கூடாது என தகராறு செய்கிறார் யஷ்பால். கார் டிரைவரின் நண்பனான சசிகுமார் இறந்து போன பெண்ணின் உடலை காசிக்கு அனுப்பி வைக்க களத்தில் இறங்குகிறார். அதற்காக பல சிக்கல்களை அவர் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவை என்ன, இறந்த பெண்ணின் உடல் அயோத்திக்குச் சென்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தனது மனைவியின் மரணத்தால் பாசமற்ற, முரட்டுத்தனமான, கோபக்காரரான யஷ்பால் சர்மா எப்படி மாறுகிறார் என்பதும், ஒரு மனிதன் மதங்களைக் கடந்து எப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய முடியும் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள இரண்டு அருமையான பாடங்கள். இயக்குனர் மந்திரமூர்த்தி ஒரு நெகிழ்வான, இன்றைய சமூகத்திற்குத் தேவையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் நாயகன் என்று சொல்வதைவிட, கதையின் நாயகன் என்றுதான் சசிகுமாரை சொல்ல வேண்டும். ஜோடி இல்லாமல் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஒரு தைரியும் வேண்டும். படத்தின் மீதும், கதையின் மீதும், கதாபாத்திரத்தின் மீதும் நம்பிக்கை வைத்து நடித்திருக்கிறார் சசிகுமார். அவரது நம்பிக்கை சிறிதும் வீண் போகவில்லை. கடந்த சில படங்களாக தடுமாற்றத்தைச் சந்தித்த சசிகுமாருக்கு இந்த அயோத்தி, 'தீயான' ஒரு திருப்புமுனையை நிச்சயம் தரும்.
ஒரு தமிழ்ப் படத்தில் ஹிந்தி பேசும் சில கதாபாத்திரங்களை படம் முழுவதும் வைத்து அதை தமிழ் ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என இயக்குனர் எப்படி நம்பினாரோ தெரியவில்லை. மொழிகளைக் கடந்து அந்தக் கதாபாத்திரங்களை ரசிக்க முடிக்கிறது. யஷ்பால் சர்மாவின் முரட்டுத்தனமான, யதார்த்தமான நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவரது மகளான பிரியா அஸ்ரானின் உணர்வுபூர்வமான நடிப்பு மற்றொரு பக்கம் படத்தை சுமக்கிறது. ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து அவரது அப்பாவைத் தாறுமாறாகத் திட்டி தனது அத்தனை வருட கோபத்தை வெளிப்படுத்தும் போது அவர் ஹிந்தியில் பேசினால் கூட 'வாரேவா' என சொல்ல வைக்கிறார்.
சசிகுமாரின் நண்பனாக புகழ், படம் முழுவதும் வரும் குணச்சித்திரக் கதாபாத்திரம். சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் போஸ் வெங்கட், கல்லூரி வினோத், வின்னர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட நெகிழ வைக்கிறார்கள்.
என்ஆர் ரகுநந்தனின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. படத்தில் பாடல்களை வைக்காமலேயே இருந்திருக்கலாம். அதிலும் அந்த போலீஸ் ஸ்டேஷன் பாட்டு தேவையற்ற ஒன்று. ஒரு நாளில் நடக்கும் கதையை விறுவிறுப்பாகவும், நெகிழ்வாகவும் சொல்லியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
அயோத்தி - மதம் கடந்த மனிதம்…