நந்தன்
விமர்சனம்
தயாரிப்பு - ரா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ரா. சரவணன்
இசை - ஜிப்ரான் வைபோதா
நடிப்பு - சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி
வெளியான தேதி - 20 செப்டம்பர் 2024
நேரம் - 1 மணி நேரம் 50 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
சாதிய பாகுபாட்டை விமர்சித்து எடுக்கப்படும் படங்களின் வரிசையில் மற்றுமொரு படம். இம்மாதிரியான படங்களில் அந்த ஊரில் உள்ள தலித் மக்களின் நிலையைப் பற்றிய படங்களைத்தான் கதைகளாக வைத்திருப்பார்கள். இந்தப் படத்தில் அந்த ஊரின் தலித் கிராமத்துத் தலைவரின் நிலை எப்படி இருக்கிறது என்ற அரசியலைப் பேசியிருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.
பத்திரிகைகளில் நாம் படித்த சில பல செய்திகளை வைத்து அதையே படத்தின் காட்சிகளாக அமைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். ஒரு பிரச்சனை வரும் போதே அது அடுத்து இப்படித்தான் போகப் போகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிவதால் அப்படியான காட்சிகளை வைத்தற்கான அழுத்தம் மனதில் பதியாமல் கடந்து போகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வணங்கான்குடி என்ற ஊரில் பரம்பரை பரம்பரையாக ஊராட்சித் தலைவராக இருப்பது பாலாஜி சக்திவேலின் குடும்பம். அடுத்த நடைபெற உள்ள தேர்தலிலும் அவரே போட்டியிடுவது என ஊரார் முன்னிலையில் முடிவெடுக்கப்படுகிறது. ஆனால், அத்தொகுதியை 'ரிசர்வ்' தொகுதியாக அறிவித்து தலித் மக்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் என நிலை வருகிறது. இதனால், தங்கள் ஊரில் உள்ளவர்களில் தன் பேச்சைக் கேட்பவர்களை நிறுத்த வைக்க வேண்டும் என முடிவெடுக்கிறார் பாலாஜி சக்திவேல். அவரது வீட்டில் வேலை பார்க்கும் சசிகுமாரைத் தலைவர் ஆக்குகிறார். தலைவரான பின் சசிகுமார் எடுக்கும் ஒரு முடிவு இருவருக்கும் தகராறை வரவைக்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தில் சில பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் சசிகுமார், பாலாஜி சக்திவேல் இடையிலான காட்சிகள் தான் படம் முழுவதும் நிறைந்திருக்கிறது. வெற்றிலை, பாக்கு போட்ட வாய், கலைந்த எண்ணெய் வைத்த தலைமுடி, அழுக்கான லுங்கி, சட்டை என தோற்றத்தில் தன்னை நிறையவே மாற்றிக் கொண்டிருக்கிறார் சசிகுமார். அப்பாவியான அம்பேத்குமார் கதாபாத்திரத்தில் அவர் மீது பரிதாபம் ஏற்படும் அளவிற்கு நடித்திருக்கிறார்.
மேல் சாதியைச் சேர்ந்தவராக, சாதியத் திமிர் கொண்டவராக பாலாஜி சக்திவேல். இதற்கு முன்பு நடித்த படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர், இந்தப் படத்தில் நாடகத்தனத்துடன் நடித்தது ஆச்சரியமளிக்கிறது.
சசிகுமாரின் மனைவியாக ஸ்ருதி பெரியசாமி. கிராமத்துப் பெண்ணை, அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். அழுத்தமான காட்சிகள் இல்லை என்றாலும் ஒரு சில காட்சிகளில் அவரது நடிப்பு யதார்த்தமாக அமைந்து பாராட்ட வைக்கிறது. பாலாஜி சக்திவேல் கூடவே சுற்றி வருபவர்களுக்கு நடிப்பு என்பது சுத்தமாக வரவில்லை. கிடைத்த வாய்ப்பிற்கு வசனத்தை ஒப்புவித்துப் போய் இருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசை, ஆர்வி சரண் ஒளிப்பதிவு, நெல்சன் ஆண்டனியின் படத்தொகுப்பு எல்லாமே சுமார் ரகத்தில்தான் அமைந்துள்ளன.
'ரிசர்வ்' தொகுதிகள் என அழைக்கப்படும் தனித் தொகுதிகளில் ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களால் அந்தப் பதவிக்குரிய இருக்கையில் கூட அமர முடியவில்லை என்ற அரசியலை அழுத்தமாய் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள 'டாகுமென்டரி பட' உணர்வு அதைக் குறைத்துவிட்டது. சில காட்சிகள் சீரியல் போல உள்ளதெல்லாம் பெரும் குறை.
சில அரசியல் வசனங்கள், இன்றைய நாட்டு நடப்புக்கள் சிலவற்றை வெளிப்படையாய் வைத்திருப்பது பாராட்ட வைக்கிறது. 'ஜெய் பீம்' படம் போன்ற தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து தடுமாறி இருக்கிறார்கள்.
நந்தன் - நடுக்கத்துடன்…