எலக்சன்,Election

எலக்சன் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ரீல் குட் பிலிம்ஸ்
இயக்கம் - தமிழ்
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - விஜயகுமார், பிரீத்தி அஸ்ரானி, ஜார்ஜ் மரியான்
வெளியான தேதி - 17 மே 2024
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த முழுமையான படங்கள் அதிகம் வருவதில்லை. வரும் ஒரு சில கமர்ஷியல் மசாலா படங்களில் அரசியல் ஒரு பகுதியாக இருக்கும். இந்தப் படம் முழுக்க, முழுக்க அரசியல் சார்ந்த, அதுவும் உள்ளாட்சி அரசியல் சார்ந்த ஒரு படமாக வந்துள்ளது.

உள்ளாட்சிகள் என்றாலே கிராமங்கள்தான் முதன்மையாக இருக்கும். அந்த அளவுக்கு கிராமங்கள் அதிகம் நிறைந்த நாடு இது. அங்குதான் மக்கள் இன்னும் கூட சில அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. சாதி சார்ந்த ஒரு அரசியலாகத்தான் உள்ளாட்சி அரசியல் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு துரோக அரசியலை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தமிழ்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் ஜார்ஜ் மரியான். ஒரு அரசியல் கட்சியின் நாற்பது ஆண்டு கால அடிமட்டத் தொண்டர். பதவிகளுக்கு ஆசைப்படாமல் தீவிர அரசியலில் இருப்பவர். அவருடைய நண்பர் பதவிக்காக கட்சியை விட்டு விலகி சுயேச்சையாக நின்று தோற்றுப் போகிறார். அந்த வெறுப்பில் நண்பர்கள் பிரிகிறார்கள். அடுத்து நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஜார்ஜ் மரியான் மகனான விஜயகுமார் தலைவர் பதவிக்கு நிற்கிறார். ஆனால், வெறும் 5 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போகிறார். அந்த தோல்வி அரசியல் மீது அவருக்கு வெறுப்பை வரவழைக்கிறது. இருந்தாலும் அரசியல் அவரை விடாமல் துரத்துகிறது. அந்த துரத்தல்களில் அவர் எப்படிப்பட்ட துரோகங்களை சந்திக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

2006, 2011, 2016 ஆகிய கால கட்டங்களில் நடக்கும் கதை. அப்பா தீவிர அரசியலில் இருந்தாலும் அரசியல் ஆர்வம் இல்லாத மகன், எப்படி அந்த அரசியல் வளையத்தில் வந்து சூழ்ச்சியில் சிக்கி எதையெல்லாம் இழக்கிறார் என்பதை படிப்படியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தின் முதல் பாதியை விட, இரண்டாம் பாதியில்தான் அந்த அரசியல் சூழ்ச்சி, துரோகங்களை அதிகம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அடிப்படை அரசியல், அதுவும் உள்ளாட்சி அரசியல் பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்களுக்குத்தான் இந்தப் படம் புரியும்.

அப்பாவின் அரசியல் நிலைப்பாட்டால் காதலியைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் தவிக்கிறார் விஜயகுமார். பின் ப்ரீத்தி அஸ்ரானியைத் திருமணம் செய்து, பழைய காதலை மறந்து? அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுகிறார். ஆனாலும், ஒரு தோல்வி அவரை பாதிப்படைய வைக்கிறது. அரசியல் ஆசை இல்லாமல் அப்பாவிற்காக அரசியலில் வந்தவர் ஒதுங்கியே இருக்க ஆசைப்படுகிறார். ஆனாலும, அவரை அரசியல் விட மறுக்கிறது. இளம் அரசியல்வாதியாய் கோபக்காரனாய் நடராஜன் கதாபாத்திரத்தில் நச்சென்று நடித்திருக்கிறார் விஜயகுமார்.

விஜயகுமார் மனைவியாக ப்ரீத்தி அஸ்ரானி. கணவனின் ஆசைகளுக்கு உறுதுணையாய் இருப்பவர். அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் கிராமத்துப் பெண்ணாய் இயல்பாய் நடித்திருக்கிறார். ஓரிரு காட்சிகளுடன் போய்விடுகிறார் மற்றொரு கதாநாயகி ரிச்சா ஜோஷி.

விஜயகுமார் அரசியலுக்கு தூபம் போடுபவராக அவரது தாய்மாமன் ஆக பாவல் நவகீதன். எப்படியாவது விஜயகுமார் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என கடுமையாக உழைக்கிறார். இரண்டாவது பாதியில் நம்பிக்கை துரோகியாய், சூழ்ச்சிகளின் மொத்த உருவமாய் வருகிறார் திலீபன். இவரது கதாபாத்திர டுவிஸ்ட் எதிர்பாராத ஒன்று. ஜார்ஜ் மரியான் போன்ற அப்பாவி அரசியல் கட்சித் தொண்டர்கள் பல லட்சம் பேர் இன்னமும் இருக்கிறார்கள்.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கலாம். பின்னணி இசையில் சமாளித்திருக்கிறார். வேலூர் மாவட்டக் கிராமங்கள் சினிமாவிற்கு புதியது. அவற்றை கள யதார்த்தத்துடன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மகேந்திரன் ஜெயராஜு.

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அரசியல் படங்கள் மிகக் குறைவுதான். இப்போதும் கூட 'அமைதிப் படை' படத்தைப் பற்றித்தான் பலரும் பேசுவார்கள். அந்தப் படம் ஏற்படுத்தி வைத்த ஒரு அளவுகோலை வேறு எந்தப் படமும் இதுவரை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

இந்தப் படத்தில் அரசியல், நட்பு, குடும்பம், காதல் என ஒரு கிராமத்து அரசியலை சுவாரசியமாய் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். இருந்தாலும் இடைவேளைக்கு முன்பாக இன்னமும் அழுத்தமாய் கொடுத்திருந்தால் கலெக்சனுக்கு கரெக்டாக இருந்திருக்கும்.

எலக்சன் - மார்ஜின் வெற்றியில்…

 

எலக்சன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

எலக்சன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓