பைட் கிளப்,Fight club

பைட் கிளப் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ரீல் குட் பிலிம்ஸ்
இயக்கம் - அப்பாஸ் எ ரகமத்
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - விஜயகுமார், மோனிஷா மோகன், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன்
வெளியான தேதி - 15 டிசம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 18 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
குறிப்பு - ஏ சான்றிதழ் படம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்..

வட சென்னை, ரவுடியிசம், அடிதடி, போதைப் பொருள் என மீண்டும் ரத்தம் தெறிக்கும் ஒரு படத்தைக் கொடுத்திருப்பார்கள் என்பதை படத்தின் தலைப்பு புரிய வைத்துவிடும். இந்த முறை வட சென்னையைத் தாண்டி பழவேற்காடு ஊரைக் கதைக்களமாக வைத்தது மட்டும்தான் கொஞ்சம் மாற்றம்.

அறிமுக இயக்குனர் அப்பாஸ் எ ரகமத் தலைப்பைத் தேர்வு செய்து, கதையைத் தேர்வு செய்தாரா, அல்லது கதையைத் தேர்வு செய்து தலைப்பைத் தேர்வு செய்தாரா என பிரித்துப் பார்க்க முடியாதபடி படம் முழுவதும் யாரோ, யாரையோ அடித்துக் கொண்டும், துரத்திக் கொண்டும் இருக்கிறார்கள். பக்காவான ஒரு லோக்கல் அரசியல் படத்தில் இருக்கிறது. ஆனால், அதைவிட சண்டைகளே முன்னிறுத்தி அந்த அரசியலை கவனிக்கவிடாமல் செய்திருக்கிறது.

புட் பால் பிளேயராக ஆக வேண்டும் என்பது விஜயகுமாருக்கு சிறு வயதில் இருந்தே ஆசை. அவருக்கு கோச் ஆக இருப்பவர் கார்த்திகேயன் சந்தானம். கஞ்சா கடத்தல் பிரச்சனையில் கார்த்திகேயனை அவரது தம்பி அவினாஷ் ரகுதேவன், கூட்டாளி சங்கர் தாஸ் சேர்ந்து கொலை செய்துவிடுகிறார்கள். சங்கரின் சூழ்ச்சியால் அவினாஷ் சிறைக்குச் சென்று தண்டனை அனுபவித்துவிட்டு திரும்பி வருகிறார். சங்கர் தாஸ் அரசியலில் இறங்கி கவுன்சிலர் ஆகிறார். சங்கரை பழி வாங்க அவினாஷ் துடிக்கிறார். விஜயகுமாரை பேசிப் பேசி சங்கருக்கு எதிராக சண்டையிட வைக்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சங்கர் தாஸின் மச்சானுக்கும் விஜயகுமாருக்கும் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சண்டை இருக்கிறது. பல வருடங்களாகத் தொடரும் அந்த சண்டை ஒரு பக்கம் அவினாஷ், சங்கர் இடையிலான சண்டை இன்னொரு பக்கம் என இரண்டு கதைகளும் ஒரே முடிச்சில் சென்று சேர்கிறது. இதில் லோக்கல் அரசியலை வேறு கலந்ததால் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகவும் ஆகிவிட்டது.

படத்தில் நடிப்பதற்கு இருக்கும் காட்சிகளை விட சண்டை போடுவதற்கும், ஓடுவதற்குமான காட்சிகள்தான் அதிகம். அதை விஜயகுமார் சரியாகவே செய்திருக்கிறார். சில பல பழைய படங்களின் காட்சிகளும், கதாபாத்திரங்களும் ஞாபகத்திற்கு வந்து போனாலும் முடிந்தவரை தன் கதாபாத்திரத்தை புதிதாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் விஜயகுமார்.

பரிச்சயமான முகங்கள் படத்தில் இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது. இருந்தாலும் விஜயகுமாரைத் தூண்டிவிட்டு காரியத்தை சாதிக்க நினைக்கும் அவினாஷ் ரகுதேவன் ஒரு நல்ல பாம்பின் குணத்துடனேயே திரிகிறார். லோக்கல் அரசியல்வாதி எப்படி இருப்பார் என்பதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் சங்கர் தாஸ். இவரது மச்சானாக நடித்திருக்கும் சரவணவேல் தான் விஜயகுமாரின் நேரடி எதிரி. சிறு வயதிலிருந்தே சண்டை போட்டுக் கொள்பவர்கள். நன்றாகவே 'டப்' கொடுக்கிறார். படத்தில் கதாநாயகி என ஓரிரு காட்சிகளில் மட்டுமே காணாமலே போய்விடுகிறார் மோனிஷா மோகன். கொஞ்ச நேரமே வந்தாலும் யார் இவர் எனக் கேட்க வைக்கிறார் கார்த்திகேயன் சந்தானம்.

படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ, படத் தொகுப்பாளர் கிருபாகரன், சண்டைப் பயிற்சியாளர்கள், விக்கி, அம்ரின் அபுபக்கர் ஆகியோரை இயக்குனர் நிறையவே வேலை வாங்கியிருக்க வேண்டும். சலிக்காமல் வேலை செய்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் போதைப் பொருள், கஞ்சா, புகை, குடி என 'பர்மனென்ட்' ஆக எச்சரிக்கை வாசகங்களை வைத்திருக்க வேண்டும். அவை இல்லாத காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேக்கிங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்திவிட்டு, கதையைச் சொல்ல வந்த விதத்தில் தெளிவில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். சென்னை வட்டாரத்தைத் தாண்டிய மக்களுக்கு இந்தப் படம் எப்படி புரியப் போகிறது என்பது கேள்விக்குறி ?

பைட் கிளப் - அடிதடி சண்டை, கூத்து, கும்மாளம் மட்டுமே..

 

பைட் கிளப் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பைட் கிளப்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓