3

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் - விஜய் குமார், சுதாகர், விஸ்மயா, சங்கர் தாஸ், அப்பாஸ் மற்றும் பலர்
இயக்கம் - விஜய் குமார்
இசை - கோவிந்த் வசந்தா
தயாரிப்பு - சூர்யா, 2டி என்டர்டெயின்ட்மென்ட்
வெளியான தேதி - 4 ஏப்ரல் 2019
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 3/5

நாட்டில் நடக்கும் நிகழ்கால அரசியலை மையமாக வைத்து அடிக்கடி சில அரசியல் படங்கள் வெளிவருவது உண்டு. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் தூத்துக்குடி ஸ்டெர்லெட் ஆலையைப் போன்ற ஒரு கெமிக்கல் ஆலை தான் படத்தின் கதைக்களம்.

அவற்றோடு ஆளும் கட்சி எம்.பி., சாதிக் கட்சித் தலைவர், அரசு அதிகாரிகள், கம்பெனி அதிகாரிகள் என தவறுக்கு உடந்தையாக இருக்கும் அனைவரின் அரசியலையும் இந்த உறியடி 2 படத்தில் தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குனர் விஜய் குமார். அவரே படத்தின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

கெமிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு தன் சொந்த ஊரான செங்கதிர் மலை என்ற ஊரில் இருக்கும் விஜய் குமார் வேலை தேடிக் கொண்டிருக்கிறார். குடும்ப நண்பரின் சிபாரிசால் தன் நண்பர்களுடன் அந்த ஊரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கெமிக்கல் கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்கிறார். அடிக்கடி விபத்து ஏற்படும் அந்த கம்பெனியில், விஜய் குமாரின் நண்பர் ஒருவர் ஆபத்தான கெமிக்கல் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார். இதனால், அந்த கம்பெனியில் உள்ள ஆபத்தான விஷயங்கள் குறித்து தெரிந்து கொண்டு, அந்த கம்பெனியை எதிர்த்து போராட களத்தில் குதிக்கிறார். ஒரு பெரும் கசிவால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க போராட்டம் தீவிரமடைகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

யதார்த்தமான தோற்றம், யதார்த்தமான நடிப்பு என தன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறார் நடிகர் விஜய் குமார். ஆனால், இயக்குனர் விஜய் குமார் கிளைமாக்சில் காணாமல் போய்விடுகிறார். ஆரம்பத்திலிருந்தே படத்தை யதார்த்தமாக நகர்த்துபவர், கிளைமாக்சுக்கு முன்பாக அப்படியே வழக்கமான கமர்ஷியல் மசாலாபட பாணிக்கு மாறிவிட்டார். அதையும் மக்களின் போராட்டம் மூலம் உயிர்ப்பாகக் காட்டி முடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இருப்பினும் ஒரு கெமிக்கல் கம்பெனி எப்படி செயல்படுகிறது, எப்படி செல்பட வேண்டும், எப்படி பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் மூலம் டாகுமென்டரி மாதிரி இல்லாமல் சாதாரண பாமர ரசிகருக்கும் புரிய விதத்தில் கொடுத்ததற்காக இயக்குனர் விஜய் குமாரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.

படத்தின் கதாநாயகியாக விஸ்மயா. மலையாளத்திலிருந்து புதுவரவு. அவர் பேசுவதில் மலையாள வாடை அடித்தாலும் கண்களில் காதலை அதிகம் காட்டி ரசிக்க வைக்கிறார். இடைவேளை வரை இவருக்கும் நாயகனுக்குமான காதல் பார்வை பரிமாற்றங்கள் கொஞ்சம் சுவாரசியம்.

கெமிக்கல் கம்பெனி ஓனர்தான் படத்தின் வில்லன். ஆனால், அவரைப் பார்த்தால் மல்டி மில்லியனர் போலத் தெரியவில்லை. இருப்பினும் ஒரு கார்ப்பரேட் முதலாளியின் பணத்தாசை இப்படித்தான் இருக்கும் என நமக்கு உணர்த்துகிறார்.

ஆளும் கட்சி எம்.பி., சாதி கட்சித் தலைவர் இருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். படத்தில் நாயகனைத் தவிர மற்றவர்கள் சினிமாவுக்குப் புதியவர்கள் போல இருக்கிறார்கள். அதுவே பிளஸ் ஆகவும் இருக்கிறது. மைனசாகவும் இருக்கிறது.

செங்கதிர்மலை என்ற ஊர் தான் படத்தின் கதைக்களம். ஊர், அதன் மக்கள், அந்த கம்பெனி, பின்னணியில் மலை என படத்தின் தாக்கத்திற்கு அவையும் உதவி புரிகின்றன.

கெமிக்கல் கசிவால் காற்று பெருமளவில் மாசுபட, அதனால் ஊருக்குள் இருக்கும் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறார்கள். அந்த சமயத்தில் தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, தங்கள் குழந்தைகள் பிழைக்கட்டும் என மக்கள் அவர்களை ஒரு டிராக்டரில் ஏற்றிவிட்டு அனுப்பும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும்.

அடுத்து அந்த கம்பெனிக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி அளிக்கும் அரசாங்க ஆடிட்டர், உயிருக்குப் போராடும் அவரது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வர, அப்போது பார்த்து மருந்து காலியாகிப் போவது விதியின் வலிமையைக் காட்டுகிறது. இப்படி சில நெகிழ்ச்சியான உதாரணங்களைச் சொல்லலாம்.

அந்த யதார்த்தம் கிளைமாக்ஸ் வரை நீடித்திருந்தால் படத்திற்கு இன்னும் சிறப்பு சேர்த்திருக்கும். ஆனால், பழைய பார்முலாபடி ஹீரோவே பழி வாங்குவது படத்தின் யதார்த்தத்தைக் குறைத்துவிடுகிறது.

கோவிந்த் வசந்தா இசையில் காதல் பாடல் அருமையாக உள்ளது. வயலின் காதலர் போலிருக்கிறது. பின்னணி இசையில் ஆங்காங்கே வயலின் தனித்து தெரிகிறது. முக்கிய வசனங்களை நாயகன் பேசும் போது பின்னணி இசையின் சத்தத்தை குறைத்திருக்கலாம். குறிப்பாக ஹீரோ டிவி பேட்டி கொடுக்கும் காட்சியில் அவர் பேசும் வசனமே கேட்கவில்லை.

மக்களுக்குத் தேவையான ஒரு படம். சினிமாத்தனம் இல்லாமல் முடித்திருந்தால் இந்த உறியடி 2வை ஊரே கொண்டாடியிருக்கும்.

உறியடி 2 - ஊர்ப்பாசம்

 

உறியடி 2 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

உறியடி 2

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓