தினமலர் விமர்சனம் » எத்தன்
தினமலர் விமர்சனம்
திருடன் கையிலேயே கல்லாபெட்டியின் சாவியை கொடுத்த கதையாக, ஊரைச்சுற்றி கடனை வாங்கிவிட்டு எத்தனாகவும், எமகாதகனாகவும், எகத்தாளமாகவும் பேசித்திரியும் ஹீரோ விமல் கையில், அந்த ஊர் வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்களை வலை வீசி பிடிக்கும் வேலை வந்து சேருகிறது!
விமலுக்கு கடன் கொடுத்துவிட்டு அவரை மிரட்டி திரிந்தவர்களையெல்லாம், விமல் மிரட்டியும், விரட்டியும் பிடிக்க வேண்டிய சூழல்! அதனூடே தாதா மாமனுக்கு தாரமாக வேண்டிய சனுஷாவுடன் காதல்!! இரண்டிலும் எத்தன் விமல் எப்படி வெற்றி பெறுகிறார்...? என்பது மீதிக்கதை!
எத்தனாக விமல் செம ஜித்தன் என சொல்லும் வகையில் நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். காலை 4 மணிக்கு கடன்காரர்களுக்கு பயந்து எழுந்து ஓடுவதும், ஒவ்வொரு இந்தியனும் 30ஆயிரம் கடனில் தான் இருக்கிறான். இந்தியாவே கடனில்தான் இருக்கிறது..., டாடா - அம்பானி கூட கடன் வாங்கிதான் பிஸினஸ் செய்கிறார்கள் என்று லாஜிக் பேசுவதுமாக படம் முழுக்க பட்டையை கிளப்பி இருக்கிறார் மனிதர்!
நாயகி சனுஷா செல்வி பாத்திரத்தில், தந்தையை கொன்ற தாத மாமனின் தாலிக்கு தலை கொடுக்க பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகளில் நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார்.
வில்லன் சரோஜித் தாதா பாண்டியன் பாத்திரத்தில் சக்கைபோடு போட்டிருக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு என எண்ணும்படியாக அமைந்துள்ளது இவர் பாத்திரம். விமலின் அப்பாவாக ஜெயபிரகாஷ், அம்மாவாக மாஜி நாயகி பிரகதி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, சிங்கம்புலி நந்தா சரவணன் எல்லோரும் பாத்திரம் உணர்ந்து பளிச்சிட்டிருக்கிறார்கள்.
தாஜ்நூரின் தன்னிகரில்லா இசையும், கே.பி.ஆர்.ரமேஷின் ஒப்பற்ற ஒளிப்பதிவும், ராஜா முகமதுவின் பக்குவமான படத்தொகுப்பும், எல்.சுரேஷின் வாள்முனை போன்ற வீரிய வசனங்களும், இயல்பான இயக்கமும் எத்தனின் ப்ளஸ் பாயிண்டுகள்!
மொத்தத்தில் "எத்தன்" - "ஜித்தன்", நிச்சயம் ரசிகர்களை ஆக்குவான் "பித்தன்".
---------------------------
குமுதம் விமர்சனம்
ஊர் முழுக்க கடன் வாங்கி ஓடி ஒளியும் இளைஞனின் கதை.
"யாருதான் கடன் வாங்கலை... உலக வங்கியில ஒவ்வொரு இந்தியனுக்கும் முப்பதாயிரம் கடன் இருக்க ... அம்பானி, பில்கேட்சுக்கு கூட கடன் இருக்கு... என படம் முழுக்க கடன்... கடன்... என கடன் வாங்குவதை ஏதோ லட்டு சாப்பிடுவது போல அநியாயத்திற்கு நியாயப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ். விமல்தான் இதற்கு சரிப்படுவார் என விமலை பலிகடா ஆக்கியிருக்கிறார்கள்.
நல்லாசிரியர் விருது பெற்ற தன் அப்பாவைப் போல இல்லாமல், பிசினஸ் செய்வதுதான் நாயகனின் லட்சியமாம். அதுவும் கடன் வாங்கி பிசினஸ் செய்வதாக பாட்டில் சொல்கிறார்கள். ஆனால், பிசினஸ் பண்ணுவதாக மருந்துக்குக்கூட படத்தில் ஒரு காட்சி இல்லை. கடன் வாங்கிய பணத்தில் ஊதாரித்தனமாக செலவு செய்யும் மைனர் கேரக்டரா என்றால் அதுவும் இல்லை.
"அப்போ என்னதான்டா சொல்ல வர்றீங்க என ஆடியன்ஸை புலம்ப வைத்திருக்கிறார்கள்.
கொத்துக் கொத்தாக வாங்கிய பணத்தை விமல் என்ன செய்கிறார் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, படம் முழுக்க கடன் தந்தவர்கள் கோஷ்டி கோஷ்டியாக அவரை துரத்துகிறார்கள். வீட்டைப் பூட்டியபடி உள்ளே ஒளிந்துகொள்கிறார். ஏதோ நகைச்சுவை காட்டுகிறேன் பேர்வழி என நமக்கு எரிச்சலைக் கொடுக்குறாங்கப்பா...
லூஸுப் பெண் போல அறிமுகமாகும் சனூஷா அவ்ளோ அழகு. ஆனால், அந்தப் பெண்ணின் முழு அழகையும் ரசிக்கவிடாமல் செய்கிறது அவரது கதாபாத்திரம். "கில்லி பிரகாஷ்ராஜ் மாதிரி ஒரு மாமா கேரக்டர் சனூஷாவை கல்யாணம் பண்ணிக்குவேன் என அடம்பிடிப்பதும் "அடேய்... அடேய் என சத்தம் போடுவதும் செம கடி.
நடு இரவில் திருட்டுத்தனமாக சாப்பிடும் மகனிடம் "முழுசா தெரிஞ்ச தொழிலை பண்ணுப்பா என சாப்பாடு போட்டுக் கொண்டே அறிவுரை சொல்லும் காட்சியில் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷின் கேரக்டர் நம்மை ரசிக்க வைக்கிறது.
போலீஸ் கதாபாத்திரம், மயில்சாமி, சிங்கமாக வரும் சிங்கம் புலி கேரக்டர், சம்பத் என படத்தில் நிறையப் பேர் வருகிறார்கள். மயில்சாமியும் மனோபாலாவும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.
யதார்த்தமான க்ளைமாக்ஸ் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. தாஜ்நூரின் இசையில் பாடங்கள் ஓ.கே. ரகம்தான். ஆனால், பின்னணி இசை மகா எரிச்சல்.
எத்தன் : ரசிகர்களை ஏமாற்றிவிட்டான், குமுதம் ரேட்டிங் : சுமார்.