தினமலர் விமர்சனம்
தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதைகளில் இருந்து சற்றே வித்தியாசப்படுத்தப்பட் காதல்... அதுவும் கிராமத்து காதல் கதைதான் நந்தி திரைப்படத்தினுடையது. ஆனால் அதே வித்தியாசத்தை க்ளைமாக்ஸிலும் காட்டுகிறேன் பேர்வழி என சுபமாக முடிய வேண்டிய படத்தை சொதப்பலாக முடித்திருப்பது மட்டும் மைனஸ்!
கதைப்படி, எட்டாவது படித்து விட்டு ரைஸ்மில்லில் டிரைவராக வேலை பார்க்கும் அகிலுக்கு, பக்கத்து ஊர் பிரஸிடெண்ட் மகள் சனுஷா மீது காதல். அதுவும் தான் ஆசை ஆசையாய் வளர்க்கும் பசு மாட்டை அதன் பேறுகாலத்தில் தன் அப்பா தனக்கு தெரியாமல் பக்கத்து ஊர் பிரஸிடெண்டிடம் விற்றுவிட, அந்த மாட்டின் பிரிவை தாங்க முடியாமல் அடிக்கடி அவர் வீட்டுக்கு போக.... அகிலுக்கு அவரது மகள் சனுஷாவை பார்த்ததும் காதல் தீப்பற்றிக் கொள்கிறது. சனுஷாவிற்கும் அப்படியே! இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோர் சைடிலும் எதிர்ப்பில்லை., உற்றார், உறவினர் பக்கத்தில் எதிர்ப்பு இல்லை! ஆனால் உள்ளூரில் வேலை வெட்டி இல்லாமல் உதார் விட்டுக் கொண்டு திரியும் ஒரு இளைஞனாலும், அவரது சகாக்களாலும் எக்கச்சக்கமான எதிர்ப்பு வருகிறது. தங்களது காதலுக்கும் கல்யாணத்திற்கும் நந்தியாக இருக்கும் அந்த உதார் வில்லனை ஹீரோ அகில் ஒழித்துக் கட்டினாரா? அல்லது அவனால் இவர்களது காதல் அழிந்து போனதா என்பதை சொல்லுகிறது நந்தி படத்தின் மீதிக்கதை!
ஹீரோ வளர்க்கும் மாடு ஹீரோயின் வீட்டிற்கு விற்பனை, அதன் மூலம் காய்த்து குலுங்கும் காதல் என வம்சம் படத்தின் சாயலில் நந்தி படம் ஆரம்பமானாலும், அது தெரியாமல் அழகாக பூசி மெழுகி கதையை நகர்த்தி இருக்கும் இயக்குனர் தமிழ்வாணனுக்கு ஒரு சபாஷ் சொல்லியே தீர வேண்டும்!
மாவு மிஷின் டிரைவர் பழனியாக கல்லூரி அகில் கலக்கலாகவே நடித்து இருக்கிறார். நடிக்க தெரிந்த இளம் நடிகர்கள் வரிசையில் அகிலுக்கு ஓர் இடம் அவசியம் தரலாம்.
பிரஸிடெண்ட் மகள் கார்த்தியாக ரேணிகுண்டா சனுஷா, ரேகா, ரோகிணி, சங்கீதா வரிசையில் நல்ல நடிகையாக கூடிய விரைவில் பெயர் எடுப்பார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார். அதுவும் காதலை அவர் அகிலிடம் வெளிப்படுத்தும் இடங்களிலும், அப்பாவிடம் மறைக்கும் இடங்களிலும் மனதை கொள்ளை கொள்வது அழகு!
சிங்கப்பூர் ரிட்டர்னாக சிங்கம்புலி, அகிலின் அப்பா சித்தன் கே.ஜி.யுடன் சேர்ந்து கொண்டு பண்ணும் அலப்பறை தியேட்டரில் செவிப்பறையை கிழிக்கும் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. பேஷ, பேஷ்!
வில்லன் குணசிங்கமாக வெட்டி உதார் நிதிஷை, தமிழ் கிராமங்களில் தற்போதும் காண முடிகிறது என்பதால் நன்றாகவே ரசிக்க முடிகிறது! ஆனால் அவர் க்ளைமாக்ஸில் செய்யும் கொடூரம் எதிர்பாராதது. ஏனோ நெகட்டிவ் க்ளைமாக்ஸ் வேண்டுமென இயக்குனர் வலிய புகுத்தியதுபோன்று தெரிவதை டைரக்டர் தமிழ்வாணன் தவிர்த்திருக்கலாம்.
அம்மா இல்லாத வீடுகளில் அப்பாவுக்கும், பையனுக்குமான பாசத்தை அழகாக படம்பிடித்துக் காட்டி இருக்கும் இயக்குனர், கிராமத்து காதலையும் க்ளைமாக்ஸ் வரை மட்டும் அழகாகவே சொல்ல பரத்வாஜின் இசையும் எம்.பி.ரத்தீஷின் ஒளிப்பதிவும் படம் முழுக்க பக்க பலமாக இருப்பது நந்தி படத்தின் பெரிய ப்ளஸ்!
நந்தி - ஒரு முறை பார்க்கலாம் குந்தி!
-----------------------------------------
கல்கி சினிமா விமர்சனம்
* வறட்டு கிராமத்தில் முகிழ்க்கும் முரட்டுக் காதல் - நந்தி.
* காதலுக்குப் பாலமாவது பசுமாடு - வம்சம் படத்தின் சாயலில்!
* காதலுக்கு எதிரி பெற்றோர் இல்லை; உறவினர் இல்லை! வேலை வெட்டி இல்லா கிராமத்து இளைஞன் என்பது மட்டும் புதுசு!
* ஹீரோ அகில், ஹீரோயின் சனுஷா... காதல் காட்சிகளில் நடிப்பில் ஒளிர்வதும், மற்றநேரங்களில் ஃப்யூஸ் ஆவதும் எதிர்பாராதது அல்ல!
* "ரேணிகுண்டாவில் இருந்த சனுஷாவின் அழகு, "நந்தியில் கொஞ்சம் குந்தி(குறைந்து) போயிருப்பது மேக்-அப் மேனின் கைங்கர்யமோ?
* சிங்கப்பூர் ரிட்டனர் சிங்கம் புலி, - அகிலின் அப்பா கே.ஜி. இருவரும் காமெடியில் கொடியேற்றிக் கலக்குகின்றனர். "அவர்களே ஒரு கலரு, அவங்களுக்கு ஏன் கலர் (கூல்டிரிங்க்) என்பது போன்ற அலட்டல் வசனங்களில் தியேட்டர் குலுங்குகிறது.
* "வில்லன் குணசிங்கம் நிதிஷ் போல உதார் விட்டு உதைவாங்கும் கேரக்டர்களில் கிராமத்துக் கச்சிதம்!
* "என் பொறுமையை சோதிக்காதே என்று காட்சிக்குக் காட்சி பேசி, அகில் நம் பொறுமையை சோதிப்பதேன்?
* ஓப்பனிங் சாங் "சங்கு சக்கர சாமி வந்து சிங்குசிங்குன்னு ஆடுச்சாம்- குத்துப்பாட்டு நமக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கும் புதுசு. "கண்ணுக்குள் தீப்பிடிச்ச மெலடி பாட்டில் மனம் தள்ளாடுவது உண்மை!
* ரத்தீஷின் ஒளிப்பதிவில் கேரக்டர் டல் அடிப்பதும் பின்புலம் ஒளிர்வதும் ஏனோ?
* காதலைத் தவிர வேறெதுவும் அந்தக் கிராமத்தில் கிடைக்கலையா தமிழ்வாணன்(இயக்குனர்)ஸார்?
* இடுக்கு - முடுக்கில், குறுக்கு நெடுக்குமென ஓடும் திரைக்கதையை இழுத்து வந்து ஆன்டி-க்ளைமாக்ஸில் தைத்திருப்பது அனுதாபம் பெறத்தான் என்பது துருத்திக்கொண்டு தெரிகிறது.
* ஆமா, படத்துக்க பெயர் எதற்கு "நந்தி
நந்தி -சற்று நகர்ந்து கொடுத்திருக்கலாம்!