கேப்டன்
விமர்சனம்
தயாரிப்பு - தின்க் ஸ்டுடியோஸ், த ஷோ பிபிள்
இயக்கம் - சக்தி சௌந்தர்ராஜன்
இசை - இமான்
நடிப்பு - ஆர்யா, ஐஸ்வர்ய லட்சுமி, சிம்ரன்
வெளியான தேதி - 8 செப்டம்பர் 2022
நேரம் - 1 மணி நேரம் 56 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
'மிருதன், டிக் டிக் டிக், டெடி' ஆகிய சயின்ஸ் பிக்ஷன் படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததால் அதே வகையிலேயே தொடருவோம் என இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இந்த 'கேப்டன்' படத்தை இயக்கியிருக்கிறார்.
வழக்கம் போல ஒரு தீய சக்திக்கும், நல்ல சக்திக்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதை. தீய சக்தி எது என்பதை காலம் காலமாக ஒவ்வொரு இயக்குனரும் அவர்களின் கற்பனைக்கேற்ப கதாபாத்திர வடிவமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
இந்தப் படத்தில் அதை ஆங்கிலத்தில் 'கிரியேச்சர், மினோட்டர்' என பெயரிட்டு அழைத்துக் கொள்கிறார்கள். தமிழில் சொல்ல வேண்டுமென்றால் 'வினோதப் பிராணி, வினோத மிருகன், வினோத விலங்கு' என அழைத்துக் கொள்ளலாம்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலப் பகுதி ஒன்றில் ராணுவத்தில் கேப்டன் ஆக இருப்பவர் ஆர்யா. அவரது தலைமையில் உள்ள குழுவினர் மிகவும் திறமைசாலிகள். சீனா, நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள 'செக்டர் 42' என்ற இடத்தை பொதுமக்களுக்காக திறந்துவிட அரசு முடிவு செய்கிறது. அதற்காக ராணுவத்தின் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அது பற்றி ஆராயச் செல்லும் ராணுவத்தினர் கொல்லப்படுகிறார்கள். அதனால், ஆர்யா தலைமையில் ஒரு குழு அங்கு செல்கிறது. அவரது குழுவில் உள்ள ஹரிஷ் உத்தமன் தன் சக குழுவினரையே தாக்கிவிட்டு அவரும் தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு வருடத்திற்குப் பிறகு சிம்ரன் தலைமையிலான மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக் குழுவுக்கு அந்த 'செக்டர் 42' பற்றி மேலும் ஆராய ஆர்யா குழுவினரை அழைக்கிறது. அவர்களும் அங்கு செல்கிறார்கள். ஏதோ ஒரு உயிரினம் தான் கொலைகளைச் செய்கிறது என கண்டுபிடிக்கிறார்கள். அதை அழித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ராணுவப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதை. அதற்கான 'டீடெய்லிங்'கை படத்தில் கவனத்துடன் செய்திருக்கிறார்கள். ஒரு ராணுவத் தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என நாமும் யூகிக்கும்படியான 'மேக்கிங்' படத்தில் உள்ளது. ஆனால், திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாமல் இப்படித்தான் படம் நகரும் என சின்னக் குழந்தை கூட யூகிக்கும்படியான திரைக்கதை படத்தின் பெரிய மைனஸ் பாயின்ட். அந்த வினோத மிருகத்தை பிடித்து வந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது இரவு நேரத்தில் ஒரே ஒரு ராணுவ வீரர் மட்டும் காவல் காப்பதெல்லாம் பெரிய லாஜிக் ஓட்டை. இது போல இன்னும் சிலவற்றைச் சொல்லலாம். தன் முந்தைய படங்களின் சில கருத்தாக்கத்தை இந்தப் படத்திலும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சக்தி.
'கேப்டன்' வெற்றிச் செல்வன் ஆக விறைப்பாக நடித்திருக்கிறார் ஆர்யா. இறந்து போன தங்கள் குழுவைச் சேர்ந்த ஹரிஷ் உத்தமன் நாட்டுக்காக எந்த துரோகத்தையும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க 'செக்டர் 42'க்கு மீண்டும் சென்று துணிச்சலுடன் போராடுகிறார். வழக்கமான ஹீரோயிசக் காட்சிகள் படத்தில் உண்டு. ஆனால், எல்லாமே 'க்ளிஷே'வாக இருக்கிறது.
ஆர்யாவுக்கு ஜோடி வேண்டும் என்பதற்காக இரண்டே இரண்டு காட்சிகளில் வந்து போகிறார் ஐஸ்வர்ய லட்சுமி. ஆர்யா குழுவில் உள்ளவர்களாக ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல், பரத் ராஜ் நடித்துள்ளனர். ஹரிஷ் தவிர மற்றவர்கள் படம் முழுவதும் வருகிறார்கள். மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக் குழு தலைவி ஆக சிம்ரன்.
சென்னையில் மட்டுமே இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகள் முழுவதும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது பாராட்டுக்குரியதுதான்.
அந்த வினோத மிருகத்தின் தோற்றம், வடிவமும் மிரட்டல்தான். ஆனால், மற்ற காட்சிகள் சுமார் ரகம். கிளைமாக்சில் மழையையும் சேர்த்துவிட்டு ஒப்பேற்றி இருக்கிறார்கள்.
இமான் பின்னணி இசை பரவாயில்லை. படத்தின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து இரண்டு பாடல்கள், தேவையில்லாத இடைச் செருகல். காட்டைச் சுற்றிச் சுற்றி வித வித கோணங்களில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் யுவா.
படத்தில் ஈர்க்கக்கூடிய விதத்திலும், அழுத்தமான காட்சிகள் இல்லாததும் குறை. குழந்தைகளுக்கு படம் பிடிக்கலாம். ஓடிடிக்கு உகந்த ஒரு படம்.
கேப்டன் - ஆபரேஷன் மிஸ்டு
கேப்டன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கேப்டன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்