2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வயபரர் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ்
இயக்கம் - அபிலாஷ் ஜோஷி
இசை - ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு - துல்கர் சல்மான், ஐஸ்வர்ய லட்சுமி, ஷபீர், பிரசன்னா
வெளியான தேதி - 24 ஆகஸ்ட் 2023
நேரம் - 2 மணி நேரம் 56 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

'கேஜிஎப்' படம் வந்து இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிறகு 'டார்க்' பின்னணியில் பல ரவுடியிசக் கதைகள் வர ஆரம்பித்துவிட்டன. மலையாளத்திலும் அதே பாணியில் ஒரு படத்தைக் கொடுக்க முயற்சித்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தின் 'கொத்தா' என்ற ஊரில் நடக்கும் கதை. அந்த ஊரையே ஆட்டிப் படைக்கும் தாதா ஷபீர். அந்த ஊருக்கு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக பணி மாறுதல் ஆகி வருகிறார் பிரசன்னா. ஊரில் உள்ள ரவுடியிசத்தை ஒழிக்க முயற்சிக்கிறார். ஷபீரை சந்தித்துப் பேச அது தோல்வியில் முடிகிறது. ஷபீரை ஒழித்துக் கட்ட, பத்து வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு வெளியேறிய, அவரது முன்னாள் நண்பரும், ரவுடியாகவும் இருந்த துல்கர் சல்மானை வரவழைக்கிறார். துல்கர், ஷபீர் இடையே மோதல் உருவாகிறது. அந்த மோதலுக்கு போலீசும் தூபம் போட என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி ஒரு பரபரப்பான க்ரைம் ஆக்ஷன் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். இது போன்று பல கதைகளைப் பார்த்திருந்தாலும் துல்கர் சல்மான், ஷபீர், பிரசன்னா ஆகியோரது நடிப்பு படத்தை ரசிக்க வைக்கிறது. நட்பு, துரோகம், ஏமாற்றம், பாசம், பரிவு என பல எமோஷன்களுடன் இருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது.

அந்தக் கால இளமையான மம்முட்டியை அப்படியே ஞாபகப்படுத்துகிறார் துல்கர் சல்மான். பல காட்சிகளில் மம்முட்டி தான் நடித்திருக்கிறாரோ என ஆச்சரியப்பட வைக்கிறார். இடைவேளை வரை இளமையான துல்கர் சல்மான் அதிரடியாக அசத்த, இடைவேளைக்குப் பின் கொஞ்சம் நடுத்தர வயது துல்கர் அமைதியாக அசத்துகிறார். படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் பலர் நடித்திருந்தாலும் படம் முடிந்து வெளியே வந்த பின் இது துல்கர் படம் மட்டுமே என ஞாபகப்படுத்துகிறது.

படத்தின் வில்லனாக ஷபீர். 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்சிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்தவர். துல்கர் கடுமையாக அடித்ததால் ஒரு கண் பாதிக்கப்பட்டு அந்த வலியுடனேயே இருப்பவர். அதற்கான உடல்மொழியுடனேயே படம் முழுவதும் பொறுப்பாக நடித்திருக்கிறார். கொத்தாவில் தன்னுடைய ராஜ்ஜியம்தான் நடக்கிறது என அவர் நினைத்தாலும், துல்கர் மீண்டும் வந்ததும் கொஞ்சம் பயப்பட ஆரம்பிக்கிறார். தனி வில்லனாக அசத்துபவர் தமிழிலும் வாய்ப்புகள் கிடைத்தால் தனி வில்லனாக அசத்துவார் என்று நம்பலாம்.

துல்கரின் காதலியாக ஐஸ்வர்ய லட்சுமி. அதிகமான வேலை இல்லை என்றாலும் வரும் சில காட்சிகளிலும் மனதில் நிற்கும்படியான நடிப்பு.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக பிரசன்னா, இன்ஸ்பெக்டர் ஆக கோகுல் சுரேஷ், துல்கரின் அப்பாவாக ஷம்மி திலகன், தங்கையாக அனிகா சுரேந்திரன், ஷபீர் ஜோடியாக நைலா உஷா ஆகியோருடைய நடிப்பும் படத்தில் குறிப்பிட வேண்டியவை.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை பல காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கான ஒளி அமைப்பு சிறப்பு. ஷியாம் சசிதரனின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தினாலும் மூன்று மணி நேரப் படம் என்பது சலிப்பைத் தருகிறது.

படம் முழுவதும் வன்முறைக் காட்சிகள் அதிகம். கொலைகளைக் கூட கொடூரமாகக் காட்டுகிறார்கள். புதிதாக எதுவும் இல்லை என்றாலும் போரடிக்காமல் நகர்கிறது படம்.

கிங் ஆப் கொத்தா - 'டான்' ஆப் கொத்தா

 

கிங் ஆப் கொத்தா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கிங் ஆப் கொத்தா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓