லக்கி பாஸ்கர்
விமர்சனம்
தயாரிப்பு - சாய் சித்தாரா என்டர்டெயின்மென்ட், போர்ச்சூன் போர் சினிமாஸ்
இயக்கம் - வெங்கி அட்லூரி
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - துல்கல் சல்மான், மீனாட்சி சவுத்ரி
வெளியான தேதி - 31 அக்டோபர் 2024
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
சினிமாவில் கதை, திரைக்கதை, அதற்கான காட்சிகள் எந்த அளவிற்கு அழுத்தமாக, விவரமாக அமைய வேண்டும் என்பதற்கு இந்தப் படம் மற்றுமொரு உதாரணம். 1990களில் நடக்கும் கதை, அதற்கான களம், பின்னணி அதுவும் மும்பை மாநகரம் என்றால் இயக்குனர் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் எவ்வளவு வேலை என்பது படம் பார்க்கும் போது புரியும். ஒட்டுமொத்த குழுவுக்கும் அந்த பாராட்டு போய்ச் சேர வேண்டும்.
1989ல் மும்பையில் வங்கி ஒன்றில் கேஷியர் ஆக வேலை பார்க்கிறார் துல்கர் சல்மான். கல்லூரியில் படித்த போது காதலித்த மீனாட்சி சவுத்ரியைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு ஐந்து வயதில் மகன். உடல்நிலை சரியில்லாத அப்பா, கல்லூரியில் படிக்கும் தங்கை, தம்பி. சொந்த வீடு இருந்தாலும் அதிக வருமானம் இல்லாத சராசரி நடுத்தர குடும்பம். வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க வேண்டும், வசதியாக வாழ வேண்டும் என நினைக்கிறார் துல்கர் சல்மான். ஒரு சந்தர்ப்பத்தில் வங்கியில் உள்ள பணத்தை வார இறுதிநாட்களில் திருட்டுத்தனமாக எடுத்து வந்து 'பிஸினஸ் ரொட்டேஷன்' செய்கிறார். அடுத்து ஷேர் மார்க்கெட் மூலமும் அதிகம் சம்பாதிக்கிறார். அப்படிப்பட்டவரை ஒரு நாள் சுற்றி வளைக்கிறது சிபிஐ. அதிலிருந்து துல்கர் தப்பிக்கிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
90களில் வங்கிகளின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பங்குச் சந்தையில் பெரும் ஊழல் புரிந்த ஹர்ஷத் மேத்தா பற்றிய பின்னணிதான் இந்தப் படத்தின் முக்கிய மையக் கதை. அதைச் சுற்றி நடக்கும் வங்கிகளின் பணப்பரிவர்த்தனை, பங்கு மார்க்கெட்டில் பங்குகளை எப்படி முறைகேடாக விலையேற்றி வர்த்தகம் செய்தார்கள் உள்ளிட்ட ஒரு 'மெகா ஸ்கேம்'ஐ அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் அட்லூரி. அதற்காக அவர் தேடிய எடுத்துக் கொண்ட தரவுகள் என பெரிய 'ஹோம் வொர்க்' செய்துள்ளார். ஹாட்ஸ் ஆப் அட்லூரி.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் ஏற்று நடித்த அதே பாணியிலான கதாபாத்திரம்தான் துல்கர் சல்மானுக்கு. இந்தப் படத்தில் திருமணமாகி ஒரு மகனுக்கு அப்பாவாக இருக்கிறார் என்பது மட்டும்தான் கொஞ்சம் வித்தியாசம். மற்றபடி அதே ஏமாற்று வேலை. பார்க்க பிரில்லியண்ட் ஆக, நல்லவனாக, அப்பாவியாக இருப்பவர்களை இந்த உலகம் எளிதில் நம்பிவிடும். அவர்கள் கெட்டது செய்தாலும், கொடுமை செய்தாலும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு பெரும் பிராடுத்தனத்தை இந்தப் படத்தில் செய்கிறார் துல்கர். எந்தவிதமான 'செக்' வைத்தாலும் அதிலிருந்து தனது திறமையால் தப்பிக்கும் ஒரு கதாபாத்திரம். துல்கரைப் பொறுத்தவரையில் மற்றுமொரு மைல் கல் படம்.
துல்கரின் காதல் மனைவியாக மீனாட்சி சவுத்ரி. அதிகமான வேலை இல்லை என்றாலும் ஓரிரு காட்சிகளில் அவரும் ஸ்கோர் செய்கிறார். தனது கணவன் ஏதோ ஒரு பிராடுத்தனம் செய்கிறார் என்பதை லேசாக யோசிக்கிறார். பணத்தை விட வாழ்க்கைதான் முக்கியம் என்று பேசும் போது மனதில் நிற்கிறார்.
ஆரம்ப காலங்களில் துல்கரை தன் பக்கம் இழுக்கும் வியாபாரி ஆக ராம்கி. அவரிடமிருந்துதான் துல்கரின் திருட்டு முதலீடு ஆரம்பமாகிறது. சிபிஐ அதிகாரியாக சாய்குமார், வங்கியின் ஜெனரல் மேனஜகர் ஆக சச்சின் கடேகர் மற்ற கதாபாத்திரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளார்கள்.
90களின் மும்பையை அரங்க அமைப்பில் கொண்டு வந்திருக்கிறார் கலை இயக்குனர் பங்கலான். துல்கரின் வங்கி, 'துணிவு' படத்தில் பார்த்த அதே வங்கி. ஜிவி பிரகாஷ்குமாரின் பின்னணி இசை படத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போய் உள்ளது. பரபரப்பான காட்சிகளில் தன் இசையாலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார். நவீன் நூலியின் படத்தொகுப்பு கச்சிதமாக அமைந்துள்ளது.
வங்கி, பணப் பரிவர்த்தனை, ஷேர் மார்க்கெட், கமிஷன் என அது சார்ந்த வியாபார வட்டம் பற்றி தெரிந்தவர்களுக்கு இந்தப் படம் வியக்க வைக்கும். அது தெரியாதவர்களுக்கு இந்தப் படம் புரியாமல் போகவும் வாய்ப்புண்டு. இருந்தாலும் ஒரு காலத்தில் உலகமே அதிர்ச்சியாகிப் பார்த்த சுமார் 5000 கோடி ஊழல் பற்றி இவ்வளவு தெளிவாக இந்தத் தலைமுறையினருக்கும் புரிய வைத்துள்ளார்கள்.
லக்கி பாஸ்கர் - மூளைக்காரன்…
லக்கி பாஸ்கர் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
லக்கி பாஸ்கர்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்