வாத்தி,Vaathi

வாத்தி - வீடியோ ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சிதாரா என்டர்டெயின்மென்ட், போர்ச்சூன் போர் சினிமாஸ்
இயக்கம் - வெங்கி அட்லூரி
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு - தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி
வெளியான தேதி - 17 பிப்ரவரி 2023
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்திருக்கும் படம். கல்வியை வியாபாரமாகப் பார்த்து கோடிகளில் சம்பாதிக்க நினைக்கும் கல்வி நிறுவன முதலாளிக்கும், பலருக்கும் கல்வி கொடுத்த நல்ல பெயரை மட்டும் சம்பாதிக்க நினைக்கும் வாத்தியாருக்கும் இடையிலான போராட்டமே இந்த 'வாத்தி'.

கல்வியின் முக்கியத்துவம் எவ்வளவு, கற்றால் வாழ்க்கையில் எந்த அளவிற்கு உயரலாம் என்ற உயரிய கருத்தை சொல்லியிருக்கும் படம். சாதி வித்தியாசம் இல்லாமல் ஒருவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது கல்வி மட்டுமே என்பதை அழுத்தமாய் சொல்லியிருக்கிறார் தெலுங்கிலிருந்து வந்துள்ள இயக்குனர் வெங்கி அட்லூரி.

தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவதில் எந்த தவறுமில்லை. ஆனால், அவர்கள் தெலுங்கு ரசனையுடன் மட்டுமே தமிழ்ப் படங்களைத் தருவதுதான் அவர்களுக்குள் இருக்கும் தடுமாற்றம். படத்தில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் கூட தெலுங்கு நடிகர்களே ஆக்கிரமித்திருப்பதால் ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்த உணர்வு மட்டுமே வருகிறது. அவ்வளவு அற்புதமான கருத்தை, கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் தமிழ் ரசிகர்களையும் படத்துடன் ஒன்றி ரசிக்கும் கலை எது என்பதை கற்க மறந்துவிட்டார்.


சமுத்திரக்கனி நடத்தும் பள்ளி ஒன்றில் உதவி ஆசிரியராக வேலை பார்ப்பவர் தனுஷ். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் முடிவெடுக்கிறது. அதன்படி தங்களிடமிருந்து திறமையற்ற சில ஆசிரியர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறது. அப்படி சென்னை, ஆந்திரா பார்டரில் உள்ள சோழவரம் கிராமத்திற்கு ஆசிரியராக வருகிறார் தனுஷ். அவருடைய தீவிர முயற்சியால் அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவ, மாணவிகளை உருவாக்குகிறார். அவர்களை டாக்டராக, இன்ஜினியராக ஆக்க முயற்சிக்கிறார். ஆனால், அப்படி நடந்து அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்தால் தங்களது கல்வி வியாபாரத்திற்கு பாதிப்பு வரும் என நினைக்கும் சமுத்திரக்கனி, அதற்கு பெரும் தடையாக இருக்கிறார். அதையும் மீறி தனது லட்சியத்தில் தனுஷ் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தனுஷும் படத்தில் சீருடை அணிந்திருப்பதால் சில நேரங்களில் அவர் வாத்தியாரா அல்லது மாணவரா என்ற சந்தேகம் வருகிறது. அந்த அளவிற்கு இன்னமும் இளமையாகவே இருக்கிறார். சமுத்திரக்கனியின் சவாலை ஏற்றுக் கொண்டு எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று போராடுகிறார். அவருடைய போராட்டமும், முயற்சியும் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வு நமக்கும் படம் முழுவதும் வர வேண்டும். ஆனால், அதை நமக்குள் பெரும் தாக்கமாக ஏற்படுத்தத் தவறிவிட்டார் இயக்குனர். எப்படியும் தனுஷ் வெற்றி பெறுவார் என்ற கிளைமாக்சை நாமே யூகித்துவிடுவோம் என்பதே அதற்குக் காரணம்.


தனுஷின் நல்ல குணத்தைக் கண்டு அவரைக் காதலிக்கும் சக ஆசிரியையாக சம்யுக்தா. டீச்சர் கதாபாத்திரத்திற்கேற்ற பாந்தமான தோற்றத்தையும், நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கல்வி தாளாளர், தந்தை என தற்காலத்தில் பெருமையாக அழைக்கப்படும் கல்வி வியாபாரியாக சமுத்திரக்கனி. தனியார் கல்வி நிறுவனங்கள், கோச்சிங் சென்டர்களின் 'டார்கெட்' மிடில் கிளாஸ் மக்கள்தான் என்று அவர் பேசும் வசனம் நூற்றுக்கு நூறு உண்மை. மற்ற கதாபாத்திரங்களில் ஊர் தலைவராக சாய்குமார், மாணவர் கென் கருணாஸ் ஆகியோர் மட்டுமே குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ்குமார் இசையில் 'வா வாத்தி' பாடல் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கிறது. 1999, 2000 கால கட்டங்களில் நடக்கும் கதை. அந்த காலகட்டத்தைக் கண்முன் கொண்டு வந்திருந்தாலும் நம் மண்ணுக்குரிய வாசம் எங்குமில்லை.

தெலுங்குப் படங்களில் மட்டுமே பார்த்த பல 'க்ளிஷே'வான காட்சிகள் ஆங்காங்கே வந்து போகிறது. படிப்பு, படிப்பு என படம் முழுவதும் இருப்பதால் 'போதனை' மட்டுமே நிறைந்திருக்கிறது, 'ரசனை' காணாமல் போய்விட்டது.


வாத்தி - 55/100

 

வாத்தி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வாத்தி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

தனுஷ்

டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1983, ஜூலை 28ம் தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இரண்டு தேசிய விருது வென்றுள்ள தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமா, ஹாலிவுட் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் விமர்சனம் ↓