டிக் டிக் டிக்
விமர்சனம்
நடிப்பு - ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுனன், ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர்
இயக்கம் - சக்தி சௌந்தர்ராஜன்
இசை - டி. இமான்
தயாரிப்பு - நேமிசந்த் ஜபக்
தமிழ் சினிமாவில் அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் வருவது மிகவும் அபூர்வமானது. அப்படிப்பட்ட கதைகளை உருவாக்க பல கோடி ரூபாய் பட்ஜெட் தேவைப்படும். ஹாலிவுட்டில் ஆயிரம் கோடிகளைச் செலவு செய்து கூட படம் எடுத்து உலகம் முழுவதும் வெளியிட்டு பல ஆயிரம் கோடிகளை வசூல் செய்வார்கள். ஆனால், தமிழ் சினிமாவுக்கென இருக்கும் வியாபார எல்லையில் அப்படி எல்லாம் செலவு செய்ய முடியாது.
இந்த டிக் டிக் டிக் படத்தைப் பொருத்தவரை மிகக் குறைந்த பட்ஜெட்டில் ராக்கெட், விண்வெளி மையம், தரைக் கட்டுப்பாட்டு அமையம் ஆகியவற்றை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். ஆனால், கதையாக, காட்சிகளாக சொல்லிய விதத்தில் வழக்கமான மசாலா சினிமாப் படங்களை விட காதில் மட்டும் பூமாலையைச் சுற்றாமல், முகம் முழுவதும் சுற்றியிருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.
கதாநாயகன் ஜெயம் ரவி செய்யும் நம்ப முடியாத ஹீரோயிசத்துக்கு அவர் கதாபாத்திரத்தை ஒரு மேஜிக் நிபுணர் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முயற்சித்திருக்கிறார். அதற்காக சர்வ சாதாரணமாக ஒரு அணு ஏவுகணையை விண்வெளியில் உள்ள வேறு நாட்டு விண்வெளி மையத்திலிருந்து சர்வ சாதாரணமாக கடத்தி வந்துவிட முடியுமா என்ன ?. ஜெயம் ரவி அங்கு திருடுவதை கண்காணிக்க அங்கு ஒரு காமிரா கூட பொருத்தப்பட்டிருக்காதா ? இல்லை, அதை அந்த நாட்டு தரைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து யாரும் பார்க்க மாட்டார்களா ?. ஏதோ, பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து பால்கோவாவைத் திருடுவது போல் ஏவுகணையைத் திருடி விட முடியுமா ?.
விண்வெளியிலிருந்து ஒரு எரிகல் சென்னையை வந்து தாக்குகிறது. அதன் பின் மிகப் பெரும் எரிகல் ஒன்று இந்தியாவைத் தாக்கும் என்றும், அதனால் சுமார் 4 கோடி பேர் உயிரிழப்பார்கள் என்றும் இந்திய பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடிக்கிறார்கள். அந்த எரிகல்லை விண்வெளியிலிலேயே அணு ஏவுகணையைக் கொண்டு அழித்தால், அது பூமியைத் தாக்காது என்பது தெரிய வருகிறது. ஆனால், அந்த அணு ஏவுகணை அந்நிய நாட்டிடம் இருக்கிறது. அதுவும் விண்வெளியில் உள்ள அவர்களது ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. அதை மிகப் பெரும் திருடனால் தான் (?) கொண்டு வர முடியும் என முடிவெடுக்கிறார்கள். அப்படி தேடிக் கண்டுபிடிக்கப்படும் ஜெயம் ரவி மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோர் ராணுவத்தைச் சேர்ந்த வின்சென்ட் அசோகன், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் தலைமையில் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் அந்நிய நாட்டு மையத்திலிருந்து அதைத் திருடி, அந்த எரிகல்லை அழித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
பாதுகாப்புத் துறையில் விண்வெளி ஆராய்ச்சியும், ஆராய்ச்சி மையமும், விண்வெளிக்கு செல்லும் ராணுவ வீரர்களும், குழுவும் இருக்கிறதா ?.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்தில் ஒரு காவல் நிலையம், பின்னர் மூணாரில் உள்ள இந்திய பாதுகாப்புத் துறை தரைக் கட்டுப்பாட்டு மையம், ஜெயம் ரவி குழுவினர் செல்லும் துருவா ராக்கெட், அந்நிய நாட்டு விண்வெளி மையம் என நான்கு தளங்களில் மட்டுமே கதை நகர்கிறது. அதில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு நாடகத்தனமாக இருக்கிறது. பதட்டமான காட்சிகளில் கூட யார் முகத்திலும் பதட்டம் இல்லை.
ராக்கெட் எரிபொருளான திரவ ஹைட்ரஜன் கசிந்ததைக் கூட டூ வீலரில் பெட்ரோல் தீர்ந்து போனது போல சொல்கிறார்கள். விண்வெளியில் ஜெயம் ரவியின் சாகசம் மொட்டை மாடியில் செய்வது போன்ற உணர்வே ஏற்படுகிறது. அந்நிய நாட்டு விண்வெளி மைய கம்ப்யூட்டர்களையே ரிச்சி ஸ்ட்ரீட் ஹேக்கர் ஈசியாக ஹேக் செய்கிறார். அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், அவர்களது பின்னணி என்ன, ஏன் திருட்டுத் தொழிலில் இறங்கினார்கள் என்பதற்கான பின்னணியை சொல்லியிருந்தால் படம் பார்க்கும் போது அவர்கள செய்வது அனைத்தும் நம்பும்படியாக இருந்திருக்கும்.
ஜெயம் ரவி ஹைடெக் திருடன். அவருக்கு உதவியாளர்களாக ஹேக்கர் அர்ஜுனன், சிறு பெட்டிக்குள்ளும் அடங்கும் ரமேஷ் திலக். ஆரம்பத்தில் இவர்கள் யார் என்பதை ஒரே ஒரு காட்சியில் காட்டிவிட்டு, அதை அப்படியே விண்வெளியில் செய்து சாதிக்கிறார்களாம். ஜெயம் ரவி கண்ணாடிகளை வைத்து ஏவுகணைத் திருட்டை ஏமாற்றுவது, ரமேஷ் திலக் பெட்டிக்குள் அடங்கி எதிரியின் சர்வர் அறைக்குள் நுழைவது, ஹேக் டேப்பை வைத்து அர்ஜுனன் விண்வெளி மையத்தையே ஆட்டுவிப்பது என காமெடி செய்கிறார்கள். மகன் பாசக் காட்சிகளில் மட்டுமே ஜெயம் ரவி நடிக்கிறார். ரமேஷ், அர்ஜுனன் இருவரும் மொக்கை காமெடி செய்கிறார்கள்.
நிவேதா பெத்துராஜ் ராணுவ அதிகாரி, அவரையும் ஒரு காட்சியில் அவ்வளவு கிளாமராக காட்டுகிறார்கள். வின்சென்ட் அசோகன் ஓவராக நடித்துத் தள்ளுகிறார். அவருக்குப் போட்டியாக ஜெயப்பிரகாஷ்.
ராக்கெட், விண்வெளி மையம், விண்வெளி சாகசக் காட்சிகள் ஆகியவற்றை உருவாக்கிய கிராபிக்ஸ் டீம் மட்டும்தான் படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறது. அவர்களை நம்பி நல்ல கதையம்சம் கொண்ட சயின்ஸ் பிக்ஷ்ன் படங்களை ஒப்படைக்கலாம். இந்தப் படத்தில் அவர்களது உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கிறது.
இமான் டைட்டில் இசையிலேயே வாசித்துத் தள்ள ஆரம்பித்தவர், கடைசி வரை வாசித்துக் கொண்டேயிருக்கிறார். குறும்பா... பாடல் மட்டும் இனிய ஆண் குரலால் தாலாட்ட வைக்கிறது. யுவன்சங்கர் ராஜா பாடியுள்ள உன் செவிகளில்... பாடல் வித்தியாசமாக அமைந்து ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், கலை இயக்குனர் மூர்த்தி கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
சக்தி சௌந்தர்ராஜன் எடுத்துக் கொண்ட முயற்சி மிகச் சிறப்பு, ஆனால் சொல்லிய விதம் சறுக்கல்.
டிக் டிக் டிக் - மிஷன் பிலோ ஆவரேஜ்
பட குழுவினர்
டிக் டிக் டிக்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
ஜெயம் ரவி
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. அப்படம் வெற்றி அடையவே ஜெயம் ரவி ஆனார். 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தவர். எடிட்டர் மோகனின் வாரிசான இவர், தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் ஜெயம் ராஜா இவரது அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது