டெடி,Teddy

டெடி - பட காட்சிகள் ↓

டெடி - சினி விழா ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் - சக்தி சௌந்தர்ராஜன்
இசை - இமான்
நடிப்பு - ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி
வெளியான தேதி - 12 மார்ச் 2021 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் பேன்டஸி படங்களைக் கொடுக்கும் ஒரு இயக்குனராக சக்தி சௌந்தர்ராஜன் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். இதற்கு முன்பு, “மிருதன், டிக் டிக் டிக்” ஆகிய படங்களை அப்படித்தான் கொடுத்திருந்தார். அந்த விதத்தில் இந்த டெடி படத்தைக் கொடுத்திருக்கிறாரா என்பதுதான் டாலர் கேள்வி.

பேன்டஸி என்றாலே நம்ப முடியாத படங்கள் தான். கற்பனைக்கும் எட்டாத விஷயத்தில் கற்பனையைக் கலந்து கொடுப்பதுதான் பேன்டஸி. இந்தப் படத்தில் ஒரு டெடி பொம்மைக்குள் ஒரு உயிர், (கவனிக்க ஆவி அல்ல), புகுந்து கொண்டு தன் உடலை மீட்பதுதான் இந்தப் படத்தின் கதை.

முந்தைய படங்களில் சக்தி கொடுத்த சுவாரசியம் இந்தப் படத்தில் நிறையவே மிஸ்ஸிங். சுவாரசியம் மட்டுமல்ல படத்திற்குள் நாம் நுழைய ஒரு உணர்வு வர வேண்டும். அதை ஆரம்பத்திலேயே அழுத்தமாகக் கொடுக்கத் தவறிவிட்டார். அதுதான் தொடர்ச்சியான சுவாரசியக் குறைவுக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

டெடி பொம்மைக்குள் ஒரு உயிர் வந்து புகுந்து கொண்டபின் நாம் அதை வெறும் பொம்மையாக மட்டும் நினைத்துப் பார்க்காமல் ஒரு உயிருள்ள பொம்மையாகப் பார்த்து கொஞ்சமாவது உருக வேண்டும். அதை சரியாகச் சொல்லாமல் விட்டுவிட்டார் இயக்குனர்.

ஆர்யா ஒரு அதிபுத்திசாலி. எதையும் உடனுக்குடன் கற்றுக் கொள்ளும் திறன் படைத்தவர். கல்லூரிக்குச் சென்ற சாயிஷாவை ஒரு கும்பல் கடத்தி அவரை மருந்துகளைக் கொடுத்து கோமா நிலைக்குத் தள்ளிவிடுகிறது. சாயிஷாவின் உயிர் மட்டும் ஒரு டெடி பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது. அந்த பொம்மை ஆர்யாவைச் சந்தித்து தன் நிலையைச் சொல்கிறது. உடனே ஆர்யா அந்த டெடிக்கு உதவ முயல்கிறார். சாயிஷாவின் உடல் எங்கு உள்ளது என்பதை அந்த டெடி பொம்மையை வைத்தே கண்டுபிடிக்க முயல்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

அமைதியான முகம், கொஞ்சம் தாடி, ஒரு கண்ணாடி என அப்பாவி அதிபுத்திசாலியாக ஆர்யா. பார்ப்பதற்குத்தான் அப்பாவித் தோற்றம். ஆனால், எத்தனை பேர் வந்தாலும் அடித்து வீழ்த்தும் வீரம் கொண்டவர். ஆனால், படம் முழுவதும் அவரை அப்படியே விறைப்பாகவே இயக்குனர் நடிக்கச் சொன்னதன் காரணம்தான் புரியவில்லை. எந்தக் காட்சியிலும் ஆர்யாவின் முகத்தில் வேறு எந்த மாற்றமும் வரவில்லை, ஒரே மாதிரியாக நடிக்கிறார், பேசுகிறார். ஆக்ஷனில் மட்டும் வேறு ஆர்யாவாகத் தெரிகிறார்.

சாயிஷாவுக்கு படத்தில் வரவே சான்ஸ் இல்லை, அப்புறம் நடிக்க எங்கே சான்ஸ் இருக்கப் போகிறது. ஆரம்பத்தில் ஒரிரு காட்சி, அப்புறம் கடைசியில் நான்கு காட்சிகள். அவ்வளவுதான் அவருக்கு வேலை.

படத்தில் நகைச்சுவைக்கென சதீஷ், கருணாகரன். ஆர்யாவுக்கு உதவும் நண்பர்களாக வந்து போகிறார்கள். படத்தின் வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி. அவர்தான் படத்தின் வில்லன் என்பதை நம்மால் உள் வாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவருடைய முகத்தை கொஞ்சமாவது குளோசப்பில் காட்டியிருக்கலாமே.

இமான் இசையில் ஏமாற்றமே. டெடிக்கு என்ன பின்னணி வாசிப்பது என அவருக்கு ஒரு தவிப்பு வந்துவிட்டது போலத் தெரிகிறது. படம் முழுவதையும் ஏன் அவ்வளவு மங்கலாகக் காட்ட வேண்டும் எனத் தெரியவில்லை. இயக்குனர் கதைக்கு இப்படி இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும் என ஒளிப்பதிவாளர் யுவாவிடம் சொல்லியிருந்தால் அவராவது படத்தைப் பார்த்த பிறகு சரி செய்திருக்கலாமே.

என்னை அறிந்தால், காக்கி சட்டை படங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்ட ஆர்கன் கடத்தல் கதைதான் இந்தப் படமும். இதில் டெடியைச் சேர்த்து வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்கள், புதிதாக வேறொன்றுமில்லை. குழந்தைகள் வேண்டுமானால் படத்தைப் பார்த்து ரசிக்கலாம். இது குழந்தைகளுக்கான படம் என முன்னரே சொல்லியிருந்திருக்கலாம்.

டெடி - டெட்டி

 

டெடி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

டெடி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓