கஜினிகாந்த்
விமர்சனம்
நடிப்பு - ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், ஆடுகளம் நரேன், சம்பத் மற்றும் பலர்
இயக்கம் - சன்தோஷ் பி ஜெயகுமார்
தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
இசை - பாலமுரளி பாலு
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறதென்றால் அதில் மிகவும் குறைவான நகைச்சுவைப் படங்கள்தான் வருகிறது. மற்ற எந்தப் படங்களையும் கூட இயக்குனர்கள் எடுத்துவிடலாம். ஆனால், நகைச்சுவைப் படங்களை எடுக்க தனித்திறமை வேண்டும்.
தற்போதைய புதிய இயக்குனர்களில் தன்னுடைய முதல் இரண்டு படங்களின் மூலம் ஆபாச நகைச்சுவையை அள்ளித் தெளித்து பலரின் விமர்சனங்களை வாங்கிய இயக்குனர் சன்தோஷ் பி ஜெயகுமார், இந்த 'கஜினிகாந்த்' மூலம் தன்னால் குடும்பத்துடன் பார்க்கும்படியான நகைச்சுவைப் படத்தையும் கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.
படம் முடிந்த பின் 'ஏ பிலிம் பை' என்பதைக் கூட 'யு' பிலிம் பை' என மாற்றி அவருக்குள் இருந்த ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார். 'யு' பிலிம் என்றால் குடும்பத்தினர் கூட எப்படி மகிழ்ந்து சிரிக்கிறார்கள் என்பதை கண்டு நிச்சயம் பார்த்து சந்தோஷப்படுவார் சந்தோஷ்குமார்.
ஒரு சாதாரண கதைதான் ஆனால், அதை ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பாக நகர்த்திக் கொண்டு அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள். அதற்கு இயக்குனர் தான் முக்கிய காரணம் என்றாலும், அவருடைய எண்ணத்திற்கும், வேகத்திற்கும் ஈடு கொடுத்து நடித்துள்ள ஆர்யா, சாயிஷா, ஆடுகளம் நரேன், உமா பத்மநாபன், சம்பத், கருணாகரன், சதீஷ் ஆகியோரையும் தனித் தனியே பாராட்ட வேண்டும்.
ரஜினி ரசிகரான ஆடுகளம் நரேன் மகனான ஆர்யாவுக்கு சிறு வயது முதலே ஞாபக மறதி அதிகம். ஒரு விஷயத்தைச் செய்து கொண்டிருக்கும் போது, வேறு ஒரு விஷயம் மீது கவனம் சென்றால் முதலில் செய்த விஷயத்தை சுத்தமாக மறந்துவிடுவார். அந்த 'டைவர்ஷன்' மறதியால் அவருக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். அப்படித்தான் ஒரு முறை கதாநயாகி சாயிஷாவின் அப்பா, ஆர்யாவை தன் மகளுக்காக மாப்பிள்ளை பார்க்க வந்த போது மறதியால் அவரைக் காக்க வைத்து அவமானப்படுத்துகிறார். இதனால், ஆத்திரமடையும் சம்பத், ஆர்யாவைக் கண்டபடி திட்டி அனுப்பி விடுகிறார். பின்னர் சம்பத்தின் மகள்தான் சாயிஷா என்று தெரியாமலேயே அவரைக் காதலிக்கிறார் ஆர்யா. ஒரு சந்தரப்பத்தில் சம்பத்தின் மகள் தான் சாயிஷா என்ற உண்மை ஆர்யாவுக்குத் தெரிய வர, காதலில் வெற்றி பெறுவதற்காக ஆர்யா என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்குப் பிறகு ஆர்யா இந்தப் படத்தில்தான் மிகவும் ரசித்து, லயித்து நடித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அப்பாவித்தனமும், நகைச்சுவையும் அவருக்கு நன்றாகவே வருகிறது. தனக்கான படங்கள் எவை, கதாபாத்திரங்கள் எவை என்பதை இந்தப் படத்தின் வெற்றி ஆர்யாவுக்கு நன்றாகவே புரிய வைக்கும். காதல் நடிப்பில் கேட்கவே வேண்டாம், இந்தப் படத்தில் சாயிஷாவுடனான காதலில் காதல் நடிப்பு கரை புரளுகிறது. அவமானங்களைத் தாங்கிக் கொள்பவர்களுக்கு ஒரு நாள் நல்ல வெற்றி கிடைக்கும் என்பதற்கு இந்தப் படத்தின் கதாபாத்திரம் சிறந்த உதாரணம்.
சாயிஷா 'என்னம்மா இவ்வளவு அழகா இருக்கிறீங்களேம்மா' என காட்சிக்குக் காட்சி ஆச்சரியப்பட வைக்கிறார். அது போலவே, 'இவ்வளவு நல்லா நடிச்சி அசத்திட்டீங்களேம்மா' என்று சொல்லவும் வைப்பார் என அடுத்து வரும் படங்களிலாவது எதிர்பார்க்கலாம். எதற்காக சிரிக்கிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே அவருடைய முகபாவத்திற்கும், பேச்சுக்கும் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. தமிழை சீக்கிரம் கற்றுக் கொண்டால் அவருக்கும் நல்லது. இருந்தாலும் தொடர்ந்து மூன்றாவது வெற்றிப் படத்திலும் இடம் பிடித்து விட்டார். இதற்குப் பெயர்தான் அதிர்ஷ்டம் போலிருக்கிறது.
படத்தில் கருணாகரன், சதீஷ் ஆகியோர் தான் நாயகன் ஆர்யாவின் நண்பர்கள். ஆனால், அவர்கள் இருவரும் நகைச்சுவையில் கலக்கியதை விட ஆர்யாவின் அப்பா ஆடுகளம் நரேன், அம்மா உமா பத்மாநாபன் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்கள். நரேனுக்கு நகைச்சுவை நடிப்பும் நன்றாக வரும் என்பதை இந்தப் படத்தில் புரிய வைத்திருக்கிறார்.
சாயிஷாவின் அப்பாவாக சம்பத், படத்துக்குப் படம் ஆவேசமாக கத்திக் கொண்டிருப்பவரை இந்தப் படத்தில் ஒரு சராசரியான அப்பாவாக பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. தன் கதாபாத்திரத்தில் அவ்வளவு பொருத்தமாக நடித்திருக்கிறார். சாயிஷாவைத் திருமணம் செய்து கொள்ளத் துடிக்கும் இன்ஸ்பெக்டராக லிஜிஷ். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களைப் பார்த்து சலித்துவிட்டது.
பாலமுரளி பாலு இசையில் 'ஆரியனே...' பாடல் இனிமை. மற்ற பாடல்களையும் ரசிக்க வைத்திருந்தால் படத்திற்கு பலமாக இருந்திருக்கும்.
இடைவேளைக்குப் பின் தனக்குப் பதிலாக சதீஷை ஆள்மாறாட்டம் செய்வதெல்லாம் 90களின் 'உள்ளத்தை அள்ளித்தா'வை ஞாபகப்படுத்துகிறது. அந்தக் காட்சிகளில் படத்தில் சிறிது தொய்வு ஏற்படுகிறது. சில இடங்களில் விட்டகுறை தொட்ட குறையாக சில டபுள் மீனிங் வசனங்கள் வந்து போகின்றன. சிலபல குறைகளை 'மறந்துவிட்டு' பார்த்தால் இரண்டரை மணி நேரம் போவதே தெரியவில்லை.
'பலே பலே மகாதிவோய்' என்ற பெரிய வெற்றி பெற்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். தமிழுக்குத் தகுந்தபடியே கொடுத்திருக்கிறார்கள்.
கஜினிகாந்த் - காப்பாற்றிவிடுவார்