சங்கத்தமிழன்
விமர்சனம்
நடிப்பு - விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ்
தயாரிப்பு - விஜயா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - விஜய் சந்தர்
இசை - விவேக் மெர்வின்
வெளியான தேதி - 15 நவம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 2/5
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில், விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியையும், பன்ச் டயலாக் பேச வைத்து கமர்ஷியல் ஹீரோவாக மாற்ற முயற்சித்து அரைத்த மாவை மீண்டும் அரைத்து வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்சந்தர்.
தரணி இயக்கத்தில், விக்ரம், ஜோதிகா நடித்து 2003ம் ஆண்டில் வெளிவந்த தூள் படத்தையே கொஞ்சம், அப்படி, இப்படி மாற்றி சங்கத்தமிழன் ஆகக் கொடுத்து அட்லி வழியை பாலோ பண்ண முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
தேனி மாவட்டம் மருதமங்கலம் என்ற கிராமத்தில் காப்பர் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என களத்தில் இறங்குகிறார் கார்பரேட் முதலாளியான ரவி கிஷன். ஆனால், அந்த ஊர் மக்கள் நாசர் தலைமையில் அதை எதிர்க்கிறார்கள். தன் நண்பன் அஷுதோஷ் ராணாவை எதிர்த்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகிறார் நாசர். அதனால் ஏமாற்றமடையும் அஷுதோஷ் மற்றும் ரவி கிஷன் இருவரும் நாசர் குடும்பத்தினரையே கொல்கின்றனர். அப்பாவுக்கு துணையாய் நிற்கும் விஜய் சேதுபதியும் கொல்லப்படுகிறார்.
சென்னையில் தன் மகள் ராஷி கண்ணாவைக் காதலிப்பவரும் மருதமங்கலம் விஜய் சேதுபதி போலவே இருப்பதால், அவரை ஊருக்கு அனுப்பி மீண்டும் தொழிற்சாலையை ஆரம்பிக்க திட்டம் தீட்டுகிறார் ரவி கிஷன். மருதமங்கலம் செல்லும் சென்னை விஜய் சேதுபதி மக்களின் ஆதரவுடன் மீண்டும் தொழிற்சாலையை எதிர்த்து போராட்டம் நடத்த ஆரம்பிக்கிறார். அந்த விஜய் சேதுபதிதான் இந்த விஜய் சேதுபதி என்பதை படம் பார்க்கும் சிறு குழந்தை கூட சொல்லிவிடும். அதன்பின் என்ன என்பதுதான்.... அதே தான்... நீங்கள் நினைப்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
படத்தின் தலைப்பு சங்கத்தமிழன் சார், உங்களை எல்லாரும் ஊர்ல தமிழ், தமிழ் என கூப்பிடுவார்கள் என விஜய் சேதுபதியை உசுப்பேற்றிவிட்டு இந்தப் படத்தில் இயக்குனர் விஜய் சந்தர் நடிக்க வைத்திருப்பார் போலிருக்கிறது. அவரும் வழக்கம் போலவே இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடுகிறார். கூடவே அவரை மக்கள் செல்வன் என படத்தில் போற்றிப் பாடுகிறார்கள்.
படத்தில் ஹீரோ அறிமுகப் பாடலை அவர் பாடும் போதே யூ டூ விஜய் சேதுபதி என அவரிடம் கேட்கத் தோன்றுகிறது. அதை அடுத்தடுத்த காட்சிகளிலும், கிளைமாக்ஸ் வரையும் கேட்க வைக்கிறார். எந்த இடத்திலும் விஜய் சேதுபதியின் வழக்கமான அந்த வசீகரிக்கும் நடிப்பு இல்லை என்பது பெரும் குறை. இந்த ஆக்ஷன், கமர்ஷியல், மசாலா, பன்ச், மாஸ் படமெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது மிஸ்டர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவை கொஞ்சமாவது மாற்ற வந்த நாயகன் என உங்களை மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அந்த எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டு விடாதீர்கள் மக்கள் செல்வனே.
கார்ப்பரேட் முதலாளி ரவி கிஷன் மகள் ராஷி கண்ணா. அவருடைய அப்பா கம்பெனியை எதிர்த்துப் போராட தன் காதலன் விஜய் சேதுபதி போயிருக்கிறார் என்று தெரிந்தும் அவரைத் தொடர்ந்து காதலிக்கிறார். ஓராயிரம் சினிமாக்களில் பார்த்த அதே அபத்தமான காதல் தான் இந்தப் படத்திலும்.
பிளாஷ்பேக்கில் விஜய் சேதுபதியின் தைரியமான முறைப் பெண்ணாக நிவேதா பெத்துராஜ். கடை முன்பு இருக்கும் மரத்தை வெட்டக் கூடாது என்று போராட்டம் நடத்துகிறார். இப்படி போராட்டம் நடத்தறியே உன் பின்னாடி யார் இருக்கிறார் என அடியாள் ஒருவர் கேட்கிறார், சங்கத்தமிழன் என்ட்ரி ஆகிறார். போங்கப்பா, இன்னும் எத்தனை படத்துலதான்பா இப்படி சீன் வைப்பீங்க என தியேட்டரில் நொந்து கொள்கிறார்கள். நியாயத்திற்குப் போராடுபவர் என்று காட்டும் போதே அநியாயமாக இறந்து போகப் போகிறார் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது.
விஜய் சேதுபதியின் நண்பனாக சூரி. நம்ம காம்பினேஷன் சக்சஸ்புல் காம்பினேஷன் என கிளைமாக்சில் விஜய் சேதுபதி வசனம் பேசுகிறார். எந்த இடத்தில் இவர்கள் நம்மை ரசிக்க வைத்தார்கள் என படத்தை திரும்ப ஓட்டிப் பார்த்தாலும் ஞாபகம் வரவில்லை.
தமிழ் முகமில்லாத இரண்டு வில்லன்கன் கார்ப்பரேட் முதலாளி ரவி கிஷன், உள்ளூர் அரசியல்வாதி அஷுதோஷ் ராணா. மக்கள் என்ன சொல்றீங்களோ அதுதான் என ஆயிரத்தி ஒன்றாவது முறையாக வசனம் பேசும் ஊர் தலைவராக நாசர்.
விவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். பார்க்கும் போதே ஈர்க்காத பாடல்கள் வெளியில் வந்து எப்படி ஞாபகத்தில் இருக்கும். நடனம் ஆட வராது என சொல்லும் விஜய் சேதுபதியை வலுக்கட்டாயமாக நடனமாட வைத்திருக்கிறார்கள்.
வழக்கமான க்ளிஷேவான காட்சிகள், டெம்ப்ளேட் திருப்புமுனைகள், அடுத்து என்ன நடக்கப் போகுது என எளிதாகச் சொல்லும் காட்சிகள் என பார்த்துப் பார்த்து சலித்துப் போன பல காட்சிகளால் இந்த சங்கத்தமிழன் சங்க கால தமிழ் சினிமாவுக்கே நம்மை அழைத்துச் செல்கிறார்.
படத்தில் எதையாவது பாராட்டலாம் என்று யோசித்தால் அப்படி எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை. தெலுங்கில் ரீமேக் செய்தால் வேண்டுமானால் ஓடலாம். ஆனால், அங்கும் டப்பிங் செய்து வெளியிட்டுவிட்டார்கள், என்ன செய்ய....
சங்கத்தமிழன் - சங்கடம்
பட குழுவினர்
சங்கத்தமிழன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்