ஸ்கெட்ச்
விமர்சனம்
நடிப்பு - விக்ரம், தமன்னா, சூரி, பாபுராஜ் மற்றும் பலர்.
இயக்கம் - விஜய் சந்தர்
இசை - தமன்
தயாரிப்பு - மூவீங் பிரேம்
பிரிக்க முடியாதது எது என திருவிளையாடல் நாகேஷ் கேள்வி தான் இந்தப் படத்தைப் பார்த்ததும் ஞாபகத்திற்கு வருகிறது.
இன்னும் எத்தனை படத்தில் தான் ரவுடியைப் பார்த்து காதலிக்கும் குடும்பப் பெண்களின் கதைகளைப் பார்ப்பது. அதிலும், விக்ரமும், தமன்னாவும் இந்தப் படத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா, சிம்பு, த்ரிஷா அளவிற்கு காதலிக்கிறார்கள். அதற்காக காதலிக்க ஒரு பாட்டு, காதல் பிரிந்ததற்கு ஒரு பாட்டு, 2018-லும் இப்படிப் பார்க்க வேண்டிய கட்டாயம் தமிழ் ரசிகர்களுக்கு.
வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் விக்ரம், தமன்னா என பெரிய நட்சத்திரங்கள், படத்தைத் தாராளமாகச் செலவு செய்ய தயாரிப்பாளர் கிடைத்திருந்தும் புதுமையாக எதுவும் இல்லாமல், பலர் திரும்பத் திரும்பக் கிழித்த, அதே கோட்டை ஸ்கெட்ச் வைத்து மீண்டும் வரைந்திருக்கிறார்.
சேட்டிடம் தவணைப் பணம் கட்டாதவர்களிடமிருந்து வண்டியை ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவதில் கில்லாடி விக்ரம். ஒரு வண்டியைத் தூக்கப் போன இடத்தில் பிராமணப் பெண்ணான தமன்னாவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அவரது முதலாளி சேட் ஒரு காரைப் பறி கொடுத்த பழைய பிளாஷ்பேக் ஒன்றைச் சொல்கிறார். வட சென்னையை மிரள வைத்துக் கொண்டிருக்கும் தாதா பாபுராஜாவிடமிருக்கும் அந்த காரை நண்பர்கள் உதவியுடன் தூக்குகிறார் விக்ரம். இதனால் ஆத்திரமடையும் பாபுராஜா, விக்ரம் மற்றும் அவரது நண்பர்களைக் கொலை செய்யத் துடிக்கிறார். இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
விக்ரமுக்கு வயதாகி வருவது திரையில் நன்றாகவே தெரிகிறது. அவரிடம் இருக்கும் துடிப்பும், சுறுசுறுப்பும் படத்தில் காணவில்லை. பல காட்சிகளில் அவர் பேசுவது கூட சரியாகப் புரியவில்லை. டப்பிங்கில் பல நடிகர்களுக்கு உயிர் கொடுத்த விக்ரம் அவருக்கே இப்படி ஏன் பேசினார் என்பது புரியவில்லை. ஸ்கெட்ச் எனப் பெயர் வைத்திருக்கும் நாயகன் கடைசியில் யார் ஸ்கெட்ச் போட்டது என்று தெரியாமல் வீழ்ந்து போவதற்கு படத்திற்கு எதற்கு ஸ்கெட்ச் என்று பெயர். அதிலும் அவர் யாரால் வீழ்த்தப்படுகிறார் என்ற சஸ்பென்ஸ் தெரிய வரும் போது அதிர்ச்சியோ அதிர்ச்சி.
மைதா மாவிலும், வெண்ணெயிலும் செய்து வைத்த வெள்ளை கொழுக்கட்டை போல இருக்கிறார் தமன்னா. படம் முழுவதிலும் துளி கூட கிளாமர் காட்டாமல் புடவையில் பாந்தமாய் வருகிறார். விக்ரமின் நல்ல குணத்தைப் பார்த்து தமன்னாவிற்கு காதல் வருவதெல்லாம் டூ டூ டூ மச். அதிலும் மணமேடையில் புடவை மாற்றி வரும் சமயத்தில் கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொல்வதெல்லாம், எத்தனை டூ மச் என்று சொல்வது.
படத்தின் வில்லனாக பாபு ராஜா. பல தமிழ் சினிமாவில் பார்த்து சலித்துப் போன அதே வில்லன். சேட்டாக ஹரீஷ் பெராடி, விக்ரமின் நண்பர்களாக ஸ்ரீமன், விஷ்வாந்த், கல்லூரி வினோத். படத்தில் சூரியும் அவ்வப்போது வந்து எட்டிப் பார்க்கிறார்.
கதாநாயகியாக நடித்து வந்த பிரியங்கா டி-பிரமோட் ஆகி, நாயகி தமன்னாவின் தோழியாக நடித்திருக்கிறார். இப்படி நடித்தால் இனி யார் நாயகியாக நடிக்கக் கூப்பிடுவார்கள்.
எஸ்.எஸ்.தமன், இன்னும் எத்தனை தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தால் பாடல்களை ஹிட்டாகக் கொடுப்பார் என்று தெரியவில்லை. இன்னும் எத்தனை முறைதான் கிடைக்கும் வாய்ப்பை வீணடிப்பாரோ ?.
படத்தின் ஒரே ஆறுதல் சுகுமார் ஒளிப்பதிவு, இரவுக் காட்சிகளைக் கூட ரசனையாக படமாக்கியிருக்கிறார்.
ஸ்கெட்ச் என படத்திற்கு தலைப்பு வைத்து, நாயகனுக்கும் அதே பெயரை வைத்து விட்டு ஒரு பென்சில் எடுத்து பத்து முறை அழித்து, அழித்து கதை, திரைக்கதை எழுதியிருந்தால் கூட ஒரு சிறந்த படத்தை எடுத்திருக்கலாம்.
ஸ்கெட்ச் - மிஸ் ஆகிடுச்சி...!
பட குழுவினர்
ஸ்கெட்ச்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
விக்ரம்
நடிகர் விக்ரமின் இயற்பெயர் ஜான் கென்னடி. 1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம்தேதி பரமக்குடியில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். விக்ரமின் ரசிகர்கள் அவரை சீயான் என்ற பட்டப் பெயருடன் அழைக்கிறார்கள். பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். ராவணன் படத்தின் மூலம் இந்தியிலும் நடிக்கத் தொட்ங்கிய விக்ரம், தனது தனிப்பட்ட வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தவர்.