தினமலர் விமர்சனம்
தல அஜித்தின் தீவிர ரசிகராக இருந்த எஸ்டிஆர் - சிம்புவை, தளபதி விஜய்யின் விசுவாசியாக மாற்றி, பல பிரச்னைகளை கடந்து ஒருவழியாக வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் வாலு.
கதைப்படி, ஷார்ப் எனும் வாலு சிம்புவிற்கு, முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் மாதிரி, மழையில் சிக்கிய முயல் குட்டிக்கு அடைக்கலம் தந்த ஹன்சிகாவை கண்டவுடன் காதல். அவர்களது காதலுக்கு உரமிட்டு வலுசேர்க்கும் விதமாக அடுத்தடுத்த சந்திப்புகளும் நிகழ்கின்றன. ஹன்சிகாவிற்கு தெரிந்தும், தெரியாமலும் ஒருசில உதவிகளை அவருக்கு, உளப்பூர்வமாக செய்துவிட்டு, ஒருநாள் நண்பர் சந்தானம், விடிவி கணேஷ், உள்ளிட்டவர்கள் கொடுத்த தைரியத்தில் தன் காதலை சொல்கிறார் எஸ்டிஆர்., ஆனால் அம்மணி, ஹன்சிகாவோ தனக்கு ஒரு முறைமாமன் இருப்பதாகவும், அவருடன் ஏற்கனவே தன் திருமணம் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முறைமாமாவுடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறுகிறார்.
ஆனால் அதையும் தாண்டி ஹன்ஸ் உடன் ப்ரெண்ட்ஷி்ப்பாகாவே இருக்க விரும்புகிறார் எஸ்டிஆர். காரணம், தாலிகட்டுவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பு கூட மணமகள், காதலுடன் ஓடிப்போகும் காலம் இது. அதுமாதிரி தன் காதலில் ஏதாவது திருப்பம் ஏற்படாதா? எனும் எஸ்டிஆரின் எதிர்பார்ப்பு தான். எஸ்டிஆரின் எதிர்பார்ப்பு எந்தளவிற்கு நிறைவேறியது.?, ஹன்ஸ், முறைமாமனின் தாலிக்கு கழுத்து நீட்டினாரா.? எஸ்டிஆரின் காதலை ஏற்றுக்கொண்டாரா...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு சிரிப்பும், சிலேகிப்புமாக, ரசிகனுக்கு வெகு சினேகமாய் பதில் சொல்லுகிறது வாலு படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை.
ஷார்ப் எனும் வாலுவாக எஸ்டிஆர்., - சிம்பு எக்கச்சக்க எஃபோர்ட் போட்டு நடித்து, தன் பாத்திரத்திற்கு பக்காவாக பலம் சேர்த்திருக்கிறார். ஹன்சிகாவிடமிருந்து மிஸ்ஸாகும் அவரது அப்பா சென்ட்டிமென்ட் ஐ-போன், அதிர்ஷ்டவசமாக சிம்புவின் கையில் கிடைப்பதும், அதை அடகு வைத்தே விபத்தில் சிக்கும் ஹன்சிகாவிற்கு, சிம்பு வைத்தியம் பார்ப்பதும், தான் தான் ஹன்ஸ் விபத்தில் சிக்கியபோது காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்தேன் என்று சொல்லாமல், அவரை காதலிப்பதும் சுவாரஸ்யம். டயர் - சந்தானம், குட்டிபையா - விடிவி கணேஷ் உள்ளிட்டவர்களுடனான சிம்புவின் காமெடி கலாட்டாக்களும் வாலு படத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன.
மேலும் எஸ்டிஆர்., தன் ஆஸ்தான தல நடிகரை வார்த்தைக்கு வார்த்தை வசனங்களிலும், காட்சிகளிலும் தூக்கி வைத்து கொண்டாடுவதும், ஒரு சில பசங்களை பார்க்க பார்க்க தான் பிடிக்கும், இல்லை பார்த்ததுமே பிடிக்கும்.., ஆமாம் இவரு பெரிய தனுஷ்... என்பது உள்ளிட்ட டயலாக்குகள் மூலம் சமகால நடிகர், தனுஷை இலைமறை காயாக சாடுவதும் கூட வாலுவை வாழ வைக்கும் விதமாகவே காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கவனம் ஈர்க்கிறது!
ஹன்சிகா, ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் மாதிரி சில்லென்று வந்து போவதும், சிம்புவை கலாய்ப்பதும், காதலிப்பதும் கலர்புல் லவ் எபிசோடு. சிம்புவை பார்த்து, நீங்க சின்னவயதில் துறுதுறு என்று இருந்திருந்தால் அதற்கு பெயர் ஷார்ப் அல்ல... வாலு என்பதாகும் என இப்படத்திற்கு டைட்டில் கொடுத்திருப்பதும் சபாஷ் சொல்ல வைக்கும் நடிப்பு எனலாம். மேலும் உன்கிட்ட இருக்கிற ப்ளஸே உடனக்குடன் நீ கொடுக்கிற டயலாக் டெலிவரி தாண்டா... என்பது உள்ளிட்ட டயலாக்குகளை சிம்புவை தூக்கி நிறுத்தும் விதமாக அடிக்கடி பிரயோகித்து பேசுவதும் பிரமாதமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் வாலுவின் பெரிய ப்ளஸ்.
ஹன்சிகா மாதிரியே சிம்புவும், ஹன்சிகாவை பார்த்து, ஒருநாளைக்கு எத்தனை பேருங்க உங்கள இடிப்பாங்க... என கலாய்ப்பதும், காதலி சொன்ன ஒரே காரணத்திற்காக விடிவி கணேஷின் தங்க சங்கிலியை கோவில் உண்டியலில் போடுவதும், பின்பு அதை விடிவி கணேஷிடம் திரும்ப கொடுக்க வேண்டி பிள்ளையார் கோவில் உண்டியலை உடைப்பதும், அது ஹன்சிகாவுக்கு தெரிய வருவதும் ஹாஸ்யம். அதேமாதிரி ஹன்சின் ஹேண்ட்பேக்கை திருடி செல்லும் திருடனை விரட்டி பிடித்து ஹன்சிகாவிடம் மொக்கை வாங்குவதும் தியேட்டரில் விசில் சத்தத்தை கிளப்பும் ஹைலைட் காமெடி, காதல்நெடி!
சந்தானம், மற்ற படங்களை காட்டிலும் தன்னை அறிமுகப்படுத்திய சிம்புவின் படம் என்பதாலோ என்னவோ, காமெடியில் ஒரு பங்கு ஜாஸ்தி கவனம் செலுத்தி ரசிகனை அடிக்கடி வயிறு குலுங்க வைக்கிறார்.
மந்த்ரா, விடிவி கணேஷ், ஆடுகளம் நரேன், மகாதேவன், ஸ்ரீரஞ்சனி, சென்ட்ராயன், உள்ளிட்டவர்களும், அவர்கள் ஏற்று நடித்திருக்கும் பாத்திரங்களும் வாலுவிற்கு வலு சேர்க்கின்றன. அதிலும், அறிமுக இளம் வில்லனாக அன்பு பாத்திரத்தில் வரும் புதியவரின் மிரட்டும் நடிப்பும் நச் என்று இருப்பது மேலும் பலம் சேர்க்கிறது. ஆனாலும், விஸ்வரூபம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படும் அன்பு, க்ளைமாக்ஸில் சிம்புவின் பேச்சில் மயங்கி எடுக்கும் முடிவு சப்பென்று இருப்பது கொஞ்சம் பலவீனம்.
ஒரு சிக்னலில் இருந்து அடுத்த சிக்னலில் நிற்கும் டிராபிக் போலீசிடம் அவர்களது பாஸ்வேர்டான குருவி, கோழி, கழுகு, காடை... போன்ற பன்ச்களை சொல்லி எஸ்கேப்பாகும் எஸ்டிஆரும், சந்தானமும், ஒருக்கட்டத்தில், நடிகர் ஜெய்யுடன்(கெஸ்ட் அப்பியரன்ஸ்!) சேர்ந்து மாட்டிக்கொண்டு முழிக்கும் இடத்தில், மேலும் ரசிகர்களை வாலு படத்துடன் ஒன்ற வைக்கின்றனர்.
எஸ்.எஸ்.தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் மனதில் பச்சக்கென ஒட்டிக்கொள்கிறது. சக்தியின் ஔிப்பதிவு, ஓவியப்பதிவு. இதுமாதிரி ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், வில்லன், வில்லங்கம் செய்யாமல் இறுதியில் நாயகியை, நாயகருக்கு விட்டு கொடுப்பது, ஆனால் வில்லனின் கையாள் தேவைக்கு அதிகமாக துள்ளுவது உள்ளிட்ட ஒருசில லாஜிக் குறைகள் இருந்தாலும், விஜய்சந்தரின் எழுத்து-இயக்கத்தில், வாலு சிம்புவின் சினிமா கேரியரில் எக்கச்சக்க வலு சேர்க்கும் படமாகவே அமையும் என எதிர்பார்க்கலாம்!
மொத்தத்தில், வாலு, எஸ்டிஆருக்கு மட்டுமல்ல எல்லாதரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வலு! - எஸ்டிஆர் மெய்யாலுமே தூக்கியிருக்கிறார் எக்கச்சக்க பளு!! - வாலு - வசூலு!!!
கல்கி திரை விமர்சனம்
மூன்று வருடப் போராட்டத்துக்குப் பிறகு வந்திருக்கும் "வாலு, சிம்புவுக்கு கைகொடுத்திருக்கிறது. காரணம், ஆபாசம் அரங்கேற்றாத இன்றைய யதார்த்தமான காதல் கதை. குறிப்பாக சிம்புவின் கேரக்டரை போகஸ் செய்து எடுக்கப்பட்டிருப்பது.
ரயில் ஓட்டுநரின் மகன் சிம்பு, தினமும் அப்பா கொடுக்கும் நூறு ரூபாயை செலவுக்கு வைத்துக் கொண்டு சந்தானத்துடன் ஊர் சுற்றும் விட்டேத்தி. தன் அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்கப் போகும்போது ஹன்சிகாவைச் சந்திக்கிறார். அவரின் அழகில் மயங்கி காதலிக்கிறார். அவரிடம் காதலைச் சொல்கிறார். ஹன்சிகாவுக்கு ஏற்கெனவே முறை பையனுடன் திருமணம் பிக்ஸ் ஆனதைச் சொல்ல, மனந்தளராத சிம்பு நட்புடன் பழகுவதாகச் சொல்லி காதலை டெவலப் செய்கிறார். இன்னொரு பக்கம் ஹன்சிகா முறை பையன் அடியாள் பலத்தோடு ரஃப் அண்ட் டப் வில்லன். இதற்கிடையில் ஹன்சிகா - சிம்பு காதல் எப்படி கைகூடியது என்பதே மீதிக்கதை.
ஒரு இளைஞன் எந்நேரமும் காதலே கதியென்று இருப்பதும், புகைப்பதும் தண்ணி அடிக்கலாமா என்று கூறுவதையும் தவிர்த்திருக்கலாம். சிம்புவுக்கு நடிக்க வாய்ப்பிருக்கிறது. சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ஹன்சிகா அழகுப் பதுமை, வந்துபோனாலும் நெஞ்சைத் தொடும் கதாபாத்திரம், சந்தானம் தான் சிரிப்புக்கு ஒரே ஸ்கோப். முடிந்தளவு காட்சியை நகர்த்தப் பயன்பட்டிருக்கிறார். கதையின் போக்கு எப்படிப்போகும் என்று தெரியாமல் மிக நேர்த்தியாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் விஜய்சந்தர்.
வாலு - பாஸ்!