ஆக்ஷன்,Action

ஆக்ஷன் - பட காட்சிகள் ↓

ஆக்ஷன் - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, அகன்ஷா பூரி
தயாரிப்பு - டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் - சுந்தர். சி
இசை - ஹிப்ஹாப் தமிழா
நேரம் - 2 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஆக்ஷன் என படப் பெயரை வைத்து விட்டதாலோ என்னவோ படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளாகவே நிறைந்திருக்கிறது. ஒன்று ஓடுகிறார்கள் இல்லை துரத்துகிறார்கள் அதுவும் இல்லை என்றால் சண்டை போடுகிறார்கள்.

2 மணி நேரம் 38 நிமிடங்கள் ஓடும படத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெறும் ஆக்ஷன் மட்டும் தான் இருக்கிறது. மீதி 38 நிமிடத்தில் 3 பாடல்களுக்காக ஒரு 15 நிமிடத்தை கழித்துவிட்டால், மீதி 23 நிமிடத்தில் தான் படத்தின் வசனக் காட்சிகள் இருக்கின்றன.

சுந்தர்.சி படம் என்றாலே நகைச்சுவைப் படமாக இருக்கும். படத்தில் இருக்கும் நாயகனிலிருந்து ஒரு நிமிடக் கதாபாத்திரம் வரை ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் மொத்தமாக பத்து பக்கங்களுக்கு வசனம் எழுதியிருந்தால் ஆச்சரியம்தான்.

நாட்டின் பெரிய தலைவரின் குண்டு வெடிப்புக் கொலை, தன் அண்ணன் தற்கொலை, தன் காதலி மர்ம மரணம், என ஒரே நாளில் நடக்கும் இறப்புகளுக்குக் காரணமாக பின்னணியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவனை, கர்னல் ஆன விஷால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

துருக்கி, லண்டன் கரிபீயன் தீவு, பாகிஸ்தான் என சில பல நாடுகளில் படத்தைப் பறந்து பறந்து படமாக்கி இருக்கிறார்கள். வெளிநாட்டில் படமாக்கப்பட்ட அந்தக் காட்சிகளில் விஷால் ஓடுகிறார், அவர் பின்னால் தமன்னா ஓடுகிறார். அவர்களை போலீஸ் துரத்துகிறது, ராணுவம் துரத்துகிறது, இன்னும் யார் யாரோ துரத்துகிறார்கள். யார் கையிலும் சிக்காமல், எந்த சிசிடிவி பார்வையிலும் சிக்காமல் தப்பித்துக் கொண்டே வருகிறார்கள்.

அதிக கட்டுப்பாட்டுடன் இருக்கும் இஸ்தான்புல் வங்கிக்குள் நுழைந்து சர்வசாதாரணமாக சர்வர் ரூமுக்குள் நுழைந்து அங்கிருக்கும் தகவல்களைத் திருடி, 4000 கோடி பணத்தை நாசூக்காக (?) டிரான்ஸ்பர் செய்து என அங்கு நம்ப முடியாத காட்சி ஒன்று. அதன் பின் பாகிஸ்தானில் மறைந்திருக்கும் முக்கியத் தீவிரவாதத் தலைவன் கபீர் துகான் சிங்கை, அலேக்காகத் தூக்கி வருகிறார்கள். இப்படி எத்தனை எத்தனையோ நம்பமுடியாத காட்சிகளை நீங்கள் பார்த்தாலும் அதில் எந்த கேள்வியையும் கேட்க முடியாது. சமயத்தில் தெலுங்குப் படத்தைப் பார்க்கிறோமோ என்றெல்லாம் கூட தோன்றுகிறது.

இருந்தாலும் படத்திற்கு ஆக்ஷன் இயக்குனர்களாகப் பணிபுரிந்த அன்பறிவ் இரட்டையர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அவர்களின் வேகத்திற்கு இணையாக ஒளிப்பதிவாளர் டுட்லி கேமிராவைத் தூக்கிக் கொண்டு எப்படி ஓடினாரோ பாவம். இந்த இருவர் இல்லை என்றால் இந்த ஆக்ஷன் படமில்லை. அதனால்தான் படத்தில் நடித்திருப்பவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் இவர்களைப் பற்றிச் சொல்கிறோம்.

ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் கர்னல் என்று சொன்னால் நம்பும்படியான தோற்றத்தில் விஷால். மிலிட்டரியில் இருந்தால் கூட நம் ஹீரோக்கள் தலைமுடியை வெட்ட மாட்டார்கள். ஆனால், இந்தப் படத்தில் விஷால் அதை பக்காவாக செய்திருக்கிறார். ஹேர்ஸ்டைலில் அவர் செலுத்திய கவனத்தை படம் முழுவதும் ஆக்ஷனிலும் செய்திருக்கிறார். கரணம் தப்பினால் மரணம் என்று பல காட்சிகள் படத்தில் உள்ளன. டூப் போடாமலேயே நடித்திருக்கிறார் என்கிறார்கள். கிரீன் மேட் காட்சிகள் இருந்தால் கூட அவற்றில் நடிக்க ஒரு தைரியம் வேண்டும். அதை அசால்ட்டாக செய்திருக்கிறார். காதலிக்கும் போது கொஞ்சம் காதல், காதலி இறந்ததும் கொஞ்சம் சோகம், கோபம் அத்துடன் அவருடைய ஆக்டிங் முடிந்துவிட்டது, மீதமெல்லாம் ஆக்ஷன், ஆக்ஷன் ஒன்லி தான். இப்படி ஒரு ஹீரோ இல்லை என்றால் இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர் .சியால் எடுத்திருக்கக் கூட முடியாது.

விஷாலின் காதலியாக ஐஸ்வர்ய லட்சுமி. லேசாகக் கொஞ்சி, லேசாகச் சிரித்து, அழகாகப் பார்த்து என நாம் அவரை ரசிப்பதற்குள் அநியாயமாய் கொன்றுவிடுகிறார்கள். கொஞ்சம் சதை போட்ட சாய் பல்லவி போல இருக்கிறார்.

விஷாலுடன் மிலிட்டரியில் அதிகாரியாக இருக்கும் தமன்னா. பாகுபலி படத்தைப் பார்த்து அவரை ஆக்ஷன் நாயகியாக இந்தப் படத்திலும் கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அந்த நம்பிக்கையை தமன்னா வீணாக்கவில்லை. இறங்கி நடித்திருக்கிறார், சாரி, அடித்திருக்கிறார்.

விஷால் அண்ணனாக ராம்கி, அண்ணியாக சாயா சிங், அப்பாவாக பழ கருப்பையா ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார்கள். படத்தின் வில்லனாக கபீர் துகான் சிங். பாகிஸ்தானில் ஒரு பிரம்மாண்ட வீட்டுக்குள் இருந்து கொண்டு, நான் யார் தெரியுமா, நான் யார் தெரியுமா என்று மிலிட்டரி அதிகாரியை மிரட்டுவதுடன் அவரது வில்லத்தனம் முடிவுக்கு வருகிறது. நகைச்சுவை என்ற பெயரில் ஷாரா கொஞ்சம் மொக்கை போடுகிறார். இன்டர்நேஷனல் கில்லராக அகன்ஷா பூரி. அற்புதமாக கிளாமர் காட்டிவிட்டு, அநியாயமாக கொலையும் செய்கிறார். லண்டனில் ஒரு காட்சியில் ஹேக்கராக வந்து விஷாலுக்கு உதவி செய்துவிட்டு அப்படியே காணாமல் போய்விடுகிறார் யோகிபாபு.

படத்திற்கு இசை ஹிப்ஹாப் தமிழா. சண்டை போட்டு இந்தப் படத்தை வாங்கியதாக சுந்தர் .சி சொன்னார். அதற்காகவாவது கொஞ்சம் உழைத்திருக்கலாம்.

விஷால், தமன்னா, படத்தில் வரும் சில போலீஸ் அதிகாரிகள் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங்கும் முடித்திருப்பார்கள் போலிருக்கிறது. கீ போர்டில் இரண்டு தட்டு தட்டி பயங்கரமாக ஹேக் செய்கிறார்கள். எந்த நாட்டுக்குப் போனாலும் எதையும் செய்து முடிக்கிறார்கள். இப்படி நான்கு பேர் இருந்தால் இந்த நாட்டை எந்த தீவிரவாதிகிட்டயிருந்தும் காப்பாற்றிவிடலாம்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி என சில கோடீஸ்வரர்கள் வங்கிகளை ஏமாற்றி பல கோடிகள் மோசடி செய்து நாட்டை விட்டு ஓடியது, தமிழ் சினிமாவில் விஜயகாந்த் காலத்திற்குப் பிறகும் அழிக்க முடியாத பாகிஸ்தான் தீவிரவாதம், உள்கட்சி மற்றும் உள்குத்து அரசியல் ஆகியவற்றை வைத்து ஒரு கதை செய்து அதை ஆக்ஷன் முலாம் பூசி ரசிகர்களைக் கவர முயற்சித்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் - நோ நோ லாஜிக், ஒன்லி மேஜிக்.

 

ஆக்ஷன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஆக்ஷன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓