தினமலர் விமர்சனம் » கலகலப்பு
தினமலர் விமர்சனம்
கதாநாயகி குஷ்புவே மாஜி கதாநாயகி ஆன பின்பு, அவரை காதலித்து கரம்பிடித்த சுந்தர்.சி, இனியும் கதாநாயகராக காலம் தள்ள முடியாது எனும் நிலையில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் "கலகலப்பு". சுந்தர்.சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது! இந்தப்படத்திற்கு டைட்டிலேயே கலகலப்பு என வைத்தவர் காமெடிக்கு பஞ்சம் வைப்பாரா என்ன...? படம் மொத்தமும் சிரிப்பும், களிப்புமாய் கலக்குதப்பு! என சொல்ல வைக்கும் விதத்தில் இருக்கிறது! பேஷ், பேஷ்!!
கதைப்படி பரம்பரை பரம்பரையாக தங்கள் வசம் இருந்து வரும் ஹோட்டலை இந்தகாலத்திலும் காப்பாற்றி கரை சேர்க்க போராடும் அண்ணன் - தம்பிகள் "களவாணி" விமலும், "தமிழ்படம்" சிவாவும்! அண்ணன் விமலுக்கு சுகாதார அதிகாரி அஞ்சலியுடன் காதல். தம்பி சிவாவுக்கு, விமல் படிக்க வைத்து காப்பாற்றி வரும் ஓவியா மீது காதல்! அஞ்சலி மீதான காதலால் விமல் ஒரு கட்டத்தில் ஹோட்டலை விட்டு தூர தேசம் செல்ல வேண்டிய சூழல்! அந்த சூழலில் ஹோட்டலை அபகரிக்க நினைக்கும் நயவஞ்சகர்களிடம் சிவா, ஹோட்டலை வைத்து சூதாடுகிறார்! தோற்றுபோகிறார்! அஞ்சலியின் தாய்மாமன் சந்தானத்திடமிருந்து அஞ்சலியையும், தம்பியை ஏமாற்றி சூதாட்டத்தில் ஹோட்டலை அபகரித்தவர்களிடமிருந்து ஹோட்டலையும் விமல் எவ்வாறு மீட்கிறார்? சிவா அதற்கு எப்படி துணை நிற்கிறார்? என்பது தான் கலகலப்பு படத்தின் மொத்த கதையும். இந்த கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை கலக்கலாக, கம்ர்ஷியலாக சொல்லி இருக்கும் சுந்தர்.சிக்கு சொல்லியே ஆக வேண்டும் ஒரு பெரிய ஹேட்ஸ் ஆப்!
ஹோட்டலை டெவெலப் பண்ணுகிறேன் பேர்வழி, என அங்கே இங்கே வட்டிக்கு வாங்கி, ஒவ்வொரு முறையும் பெரிய நஷ்டமாகி கடன்காரர்களை கண்டு ஓடி ஓளியும் அப்பாவி பாத்திரத்தில் விமல் வெளுத்து வாங்கியிருக்கிறார். சுகாதார அதிகாரி அஞ்சலிதான் என தெரியாமல் அவரிடம் எக்குதப்பாய் மாட்டிக் கொண்டு பின் எஸ்கேப் ஆகும் இடங்களில் விமல் பிரமாதம்!
சிவா திருடனாக ஜெயிலுக்கு போனதை மறைக்க துபாய்க்கு போய் திரும்பியதாக ஓவியாவுக்கு ரூட் விடுவதும், உண்மை தெரிந்ததும் அசடு வழிவதுமாக அலட்டி கொள்ளாத நடிப்பில் ஆங்காங்கே விமலையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார். சிவா, அண்ணன் காதலி அஞ்சலிக்காக ஹேண்ட்பேக்கும், தன் காதலி ஓவியாவிற்காக பலவிதமான பொருட்களையும் ஒரு ஷாப்பிங் காம்பளக்ஸீக்குள் மாறுவேடத்தில் புகுந்து திருடி கொண்டு வரும் இடங்களில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.
அஞ்சலி, ஓவியா என இரண்டு கதாநாயகிகள் இருவருமே தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். நடிப்பில் மட்டுமல்ல, கவர்ச்சி விருந்து படைப்பதிலும் இருவரும் போட்டிபோட்டு கலகலப்பை கவர்ச்சியாய் ஆக்கியிருப்பது படத்தின் பெரும்பலம்!
அஞ்சலியின் முறைமாப்பிள்ளை வெட்டுப்புலியாக வரும் சந்தானம், கிட்டத்தட்ட படத்தின் மூன்று நாயகர்களில் ஒருவர் எனும் அளவிற்கு காமெடி ப்ளஸ் காமநெடியில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
பஞ்சு சுப்பு பத்துகோடி வைரத்தை செல்போனில் மறைத்து வைத்து தெரிந்தவரிடம் கொடுத்து வைத்து இன்சூரன்ஸ் பெற முயற்சிப்பது, அந்த வைரங்கள் விபச்சார அழகிகள், புரோக்கர், போலீஸ், ரவுடி என கைமாறி விமல் - சிவா கைகளில் சிக்குவது, அதை திரும்பபெற விமலின் நண்பர் கம் வில்லன் போலீஸ் ஜான் விஜய்யும் பஞ்சு சுப்புவும் பண்ணும் காமெடி கலாட்டக்கள், அஞ்சுவட்டி அழகேசனாக வரும் இளவரசு, காமெடி போலீஸ் ஜார்ஜ் உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பங்கிற்கு ரசிகர்களே தரையில் விழுந்து, எழுந்து, தவழ்ந்து சிரிக்க வைக்கிறார்கள்.
அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில குறைகள் இருந்தாலும் யு.கே.செந்தில்குமாரின் இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவும், விஜய் எபினேசரின் இதமான இசை, சுந்தர்.சியின் காமெடி கலாட்டாவான எழுத்து - இயக்கம் உள்ளிட்டவைகள் கலகலப்பு படத்தை லாஜிக் பார்க்காமல் ரசிக்க வரும் ரசிகர்களுக்கு காமெடி மேஜிக் எனலாம்.
மொத்தத்தில் கலகலப்பு - கலக்குதப்பு!---------------------------------------------------
கல்கி திரைவிமர்சனம்
சிரிக்கவைக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது என்பது தமிழ் சினிமாவின் சிறப்பு விதி. “கலகலப்பு’. அதற்கு விதிவிலக்கல்ல. இது காமெடி அஃப் எர்ரர்ஸ் வகை சினிமா. பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க முடிகிறது என்பதே பெரிய வெற்றிதான்.
கும்பகோனத்தில் இருக்கும் தமது குடும்ப ஹோட்டலான மசாலா கஃபேயை மீண்டும் ஓஹோவென்று நடத்தவேண்டும் என்பது விமலின் ஆசை. அதற்கு அவர் தலைகீழாக நின்றுகூட பார்க்கிறார். கடன் மேல் கடன் ஏறுகிறதே அன்றி, ஹோட்டல் சரியாக நடத்தவில்லை. இது நடுவே சுப்பு, வைரங்களை ஒளித்துவைக்க திட்டம் தீட்டி, சொந்தக்காரப் பையன் மூலம் கும்பகோணம் அனுப்பி, அங்கே மற்றொரு சொதப்பல். இதுதான் கதை என்று ஒன்றைச் சொல்லிவிட முடியாதபடி ஏகப்பட்ட துண்டு துணுக்குகள்.
விமலும், சிவாவும் உடம்பை அலட்டிக்கொள்ளாமல் டைமிங் காமெடியில் ஸ்கோர் பண்ணுகிறார்கள். வித்தியாசமான பஞ்ச் டயலாக் பேசி, கொஞ்சமாகச் சிரிக்க வைக்கிறார் சந்தானம். அஞ்சலியின் நடிப்பும், அழகும் படத்துக்குப் படம் பொலிவு கூடிக்கொண்டே போகிறது. ஓவியாவை மிதமிஞ்சிய கிளாமர் சாயல் பூசிப் பார்த்திருக்கிறார்கள். ஒட்டவில்லை.
கலகலப்பின் ஹைலைட்டே, அதில் வரும் சின்ன சின்ன பாத்திரங்களும் சம்பவங்களும்தான். இளவரசு, வேறு வேறு கெட்-அப்களில் தோன்றுவதும், கழுத்தைத் திருப்பிவைத்துக் கொண்டு திண்டாடுவதுமென படம்நெடுக பின்னியெடுக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான், புதிய பாணி வில்லன் சுப்பு, நாய் பிரியனான அவருடைய உறவினர் பையன், சந்தானத்தோடு வரும் மூன்று கைத்தடிகள் எல்லோருமே நகைச்சுவை கிராஃபை உயர்த்திக்கொண்டே போகிறார்கள். கிராமத்துக்குள் நடக்கும் காமெடி கார் சேஸிங், புதிய பாணி. படத்தில் வரும் ஒரு நாய் கூட அசத்துகிறது.
பாடல்கள் கேட்கும்போது இனிக்கின்றன; ஞாபகத்தில் நிற்கவில்லை. தண்ணீர் அடித்துவிட்டு ஆட்டம்போடும் அரத பழசு சீனை இன்னும் எத்தனை படங்களில்தான் பார்ப்பதோ? முன்பாதி ஸ்லோ; பின்பாதி ஸ்பீட்.
கலகலப்பு - சிரிப்பு கேரண்டி.
-------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
முன்னோர்களால் நடத்தப்பட்ட ஹோட்டலைத் தூக்கி நிறுத்தப் போராடும் இரு பேரன்கள், அந்த இடத்தை விற்றுக் கொடுத்து கமிஷன் அடிக்கத் துடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்த வைரங்களைப் பறிகொடுத்துவிட்டுத் தேடும் வியாபாரி... இவர்களுக்கிடையே நடக்கும் தள்ளுமுள்ளு ரேஸ்தான் கலகலப்பு.
பேரன்களின் சின்சியர் பேர்வழியாக விமல். சில்லறைத் திருடனாக சிவா. அலட்டல், மிரட்டல் இன்றி சமர்த்தாக வந்துவிட்டு போய்விடும் விமல் இந்த முறையும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். புதிதாக பாக்யராஜ் மேனரிஸங்கள் ஏனோ? மொக்கை டயலாக்கும் சாதனைச் சிரப்புமாக வரும் சிவாவின் சேட்டைகள் கச்சிதம். எங்க ஆளுங்க எடுத்து வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் ஒவ்வொரு வைரமா உங்க கிட்ட வந்து சேரும் என்று வில்லனிடம் சிவா போடுகிற அசட்டு டீலுக்கு தியேட்டரில் குபீர் சிரிப்பு.
அஞ்சலியும் ஓவியாவும் கவர்ச்சி ஏரியாவுக்காக ஓவர் டைம் வேலை பார்த்திருக்கிறார்கள். படத்தில் அஞ்சலிக்கு குளியல் சீன் எத்தனை என தனி போட்டியே வைக்கலாம்.
அஞ்சலியின் முறைமாமன் கேரக்டரில் டம்மி வில்லனாக வரும் சந்தானத்துக்கு அறிமுகம் மட்டும் அசத்தம்.
இன்ஷூரன்ஸ் மோசடி செய்யும் வைர வியாபாரியாக சுப்புவும் தில்லாலங்கடி இன்ஸ்பெக்டராக ஜான் விஜய்யும் காமெடி வில்லத்தனத்தில் ஈர்க்கிறார்கள். இளவரசு, ஜார்ஜ் ஆகியோர் இந்த கலகல ரேஸுக்கு ஈடுகொடுத்திருக்கிறார்கள்.
கீழே கிடப்பதை விமலிடம் கொண்டு வந்து கொடுக்கிற நாய், எந்தூத நெருக்கடியிலும் நாயைக் கொஞ்சும் இளைஞன், போலீஸுக்குப் பயந்து மாறுவேடத்தில் அலைகிற கந்துவட்டி ஆள் போன்ற சின்னச் சின்ன ஐடியாக்கள் படத்தை ஜாலி திருவிழா ஆக்குகின்றன. காட்சிகளை வளவளவென வளர்க்காமல், அடுத்த காட்சிக்குத் தாவும் எடிட்டிங், படத்துக்குப் பக்கா பலம்.
பழைய பில்லாவை புதுசா எடுத்தா ஓடுதுல்ல உள்ளிட்ட இடங்களில் வசனங்கள் அடடே சொல்ல வைக்கின்றன. இவளுங்க இம்சை தாங்க முடியலை பாடலில் மட்டும் இசையமைப்பாளர் வினய் எபனேசர் ஞாபகத்துக்கு வருகிறார்.
தனது இயக்கத்தில் வரும் 25வது படம் என்பதற்காக சுந்தர்.சி கொடுத்திருக்கும் உழைப்பு படத்தில் தெரிகிறது. காமெடிக்காகவே கொண்டாடப்பட்ட அவரது மாஸ்டர் பீஸ்களில் கலகலப்பு இடம்பெறாது என்பதும் புரிகிறது.
கலகலப்பு - அவசர அரட்டை.
குமுதம் ரேட்டிங் - ஓகே