விமர்சனம்
தயாரிப்பு - சாரா கலைக்கூடம்
இயக்கம் - தர்மா
நடிகர்கள் - ஆதிரன் சுரேஷ், வின்சென்ட், ராகுல்,மைக்கேல், சதீஷ் ராமதாஸ், தஷ்ணா, ராஜசிவம், விஜய் ஸ்ரீநிவாஸ்
இசை - சாந்தன் அன்பழகன்
வெளியான தேதி - 23.05.2025
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
கதைக்களம்
மெடிக்கல் கடை ஒன்றில் மூன்று நண்பர்கள் வேலைசெய்கிறார்கள். அந்த கடையை உரிமையாளர் விற்க முடிவெடுத்ததும், கடையை மூவருமே சேர்ந்து வாங்கிக் கொள்ள முடிவு செய்தனர். இதற்காக சேர்த்து வைத்த பணம் திடீரென திருட்டு போய் விடுகிறது. இதனால் ஊரில் உள்ள சொத்தை விற்க நண்பர்களில் ஒருவரான ஆதிரன் சுரேஷ் நண்பர் ராகுலுடன் செல்கிறார். போகும் வழியில் வண்டி பஞ்சர் ஆகி விடுகிறது. அப்போது அங்கிருந்த ஒரு சிலருடன் அவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டு, பெரிய ஆபத்தில் சிக்கி கொள்கிறார்கள். அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது? அவர்களின் மெடிக்கல் கடையை வாங்கும் எண்ணம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதி கதை.
தமிழ் சினிமாவில் எதையாவது புதிதாக செய்தால் மட்டுமே ஜெயிக்க முடிகிறது. அந்த வகையில் இந்த படத்தில் பெண் கதாபாத்திரமே இல்லாமல் முழுக்க
முழுக்க ஆண்களை வைத்து மட்டுமே 2 மணிநேர படத்தை ரசிக்கும்படி இயக்குனர் தர்மா இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க புதியவர்களை வைத்து அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படம் போன்று விறுவிறுப்பாக படத்தை கொடுத்துள்ளார்.
படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள ஆதிரன் சுரேஷ் அந்த கேரக்டருக்கு தகுந்த நடிப்பை சரியாக கொடுத்துள்ளார். அதே போல் நண்பர்களாக வரும் ராகுல், சதீஷ் ராமதாஸ், வின்சென்ட், மைக்கேல் ஆகியோரும் சிறந்த நடிப்பு வெளிப்படுத்தி உள்ளனர். பஞ்சர் கடையில் வேலை செய்யும் சிறுவன் ராஜசிவன் மற்றும் ஆதிரன் சுரேஷின் தந்தை கேரக்டர்கள் மனதில் பதிகிறது.
லியோராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது.சாந்தன் அன்பழகனின் இசை படத்தை ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் கவனம் பெறுகிறது.
பிளஸ் & மைனஸ்
புது முகங்களை வைத்துக்கொண்டு, ஒரு வரி கதையை அழகான பொழுதுபோக்கு படமாக இயக்குனர் கொடுத்துள்ளார். பைக் பஞ்சர் ஆனால் வாழ்க்கையே பஞ்சரான அளவுக்கு கதையை சிறப்பாக நகர்த்தியதற்க்கு பாராட்டுகள். இருப்பினும் கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் அதிகமாக ரசிக்கும் படியாக இருந்திருக்கும்.
ஆகக் கடவன - "குற்றமே காக்க"