Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

தீயா வேலை செய்யணும் குமாரு

தீயா வேலை செய்யணும் குமாரு,theeya velai seiyyanum kumaru
25 ஜூன், 2013 - 13:59 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தீயா வேலை செய்யணும் குமாரு

  

தினமலர் விமர்சனம்


சமீபத்தில் வெளிவந்த "கலகலப்பு" படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சியும், யு.டி.வி மோஷன் பிக்சர்ஸீம் உடனடியாக இணைந்து உருவாக்கியிருக்கும் படம் தான் "தீயா வேலை செய்யணும் குமாரு..."

கதைப்படி ஹீரோ சித்தார்த்தின் குடும்பம், பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக காதல் திருமணம் செய்து கொண்டு புரட்சி பண்ணி வரும் குடும்பம். சித்தார்த்தின் அக்காக்கள் இருவரும் கூட காதல் திருமணம் புரிந்தவர்கள் தான். ஆனால் ஐ.டி. கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்கும் சித்தார்த்துக்கு மட்டும் காதல், எட்டிக்காயாக கசக்கிறது. காரணம் சின்ன வயதிலும், பள்ளி கல்லூரி பருவங்களிலும் அவர் சக மாணவிகளிடம் வாங்கிய லவ்-பல்புகள் தான்! இந்நிலையில் தம்பிக்கு ஒரு லவ் மேரேஜை செய்து பார்த்துவிட வேண்டும் எனும் அக்காக்களின் பேராசையாலும், அத்தான்களின் ஒத்தாசையாலும், தன் அலுவலகத்திற்கு புதிதாக பேரழகியாக வந்து சேரும் சஞ்சனா எனும் ஹன்சிகா மோத்வானியை காதலியாக அடையத்துடிக்கிறார் குமார் எனும் சித்தார்த்! அதற்காக காசுக்கு காதல் டிப்ஸ்களை வாரி வழங்கி பலரது காதல் கைகூட காரணமாக இருக்கும் மோக்கியா சந்தானத்தின் உதவியை நாடுகிறார் சித்தார்த்!

கண்டபடி காசை வாங்கிக் கொண்டு சித்தார்த்தை, காதலில் தீயா வேலை செய்ய சொல்கிறார் சந்தானம்... சந்தானத்தின் ஐடியாபடி சித்தார்த் பண்ணும் காதல் கலாட்டாக்களும், அதற்கு ஹன்சிகா அசைந்து கொடுத்தாரா? இல்லையா? என்பதுடன், இன்னும் சில கலர்புல் திருப்பங்களை கலந்து கட்டி தந்திருப்பதும் தான் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

நாயகர் சித்தார்த், ஆரம்பத்தில் அசமந்தமாக காத‌லில் பிடிப்பில்லாமல் கொஞ்சம் ‌சோகமே உருவாக திரிவதும், பின் சந்தானத்தின் ஐடியாபடி லவ்வர் பாயாக மாறி ஹன்சிகாவை சுற்றி சுற்றி வந்து காதலில் கலக்குவதும், தன் காதலுக்கு வில்லனாக வரும் கணேஷ் வெங்கட்ராமை வெறும் வதந்தி மூலம் கட்டம் கட்டி தூக்குவதுமாக செம காதல் கலாட்டாக்கள் புரிந்திருக்கிறார். சித்தார்த்திற்குள் இப்படி தீயா வேலை செய்யும் ஒரு குமாரா.?! எனும் ஆச்சர்யத்தை கிளப்புகிறார் மனிதர்!!

நாயகி ஹன்சிகா, முந்தைய படங்களைக் காட்டிலும் நிறையவே ஸ்லிம் ஆகி செம செக்ஸி லுக்கில் சித்தார்த்தை மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகர்களையும் காதலிக்க தூண்டுவது மாதிரி நடித்திருப்பது "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது!

சித்தார்த், ஹன்சிகா இருவரையும் காட்டிலும் காசுக்கு, காதலுக்கு உதவும் கேரக்டரில் காமெடியனாக வரும் மோக்கியா எனும் சந்தானம் தான் இப்படத்தின் ஹீரோ, ஹீரோயின், வில்லன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் எனும் அளவிற்கு எல்லோரது பாத்திரத்திலும் புகுந்து புறப்பட்டு கலாய்த்திருக்கிறார். கணேஷ் வெங்கட்ராமை பார்த்து,  "அது யாருடா அது செல்வராகவன் பட செகண்ட் ஹீரோ மாதிரி செம அழகா இருப்பது..", "ஆர்யாவுக்கு 6 லட்சம் ரூபாய்க்கு காதல் டிப்ஸ் தந்தவன் நான்...." என்பதில் தொடங்கி சித்தார்த்தின் காதலுக்கு அவரது அக்கா-தங்கை, அத்தான்கள் என அனைவரும் உதவுவதை பார்த்து, "இது குடும்பம் அல்ல விக்ரமன் படம்..." என்று கமெண்ட் அடிப்பது வரை சந்தானத்தின் ‌ஒவ்வொரு டயலாக்களும் தியேட்டரே சிரிப்பிலும், விசில் சப்தத்திலும் அதிர்கிறது! பேஷ், பேஷ்!!

செகண்ட் ஹீரோ கணேஷ் வெங்கட்ராம், மொட்டை பாஸ்கி, எப்.எம்.பாலாஜி, டீம் லீடர் விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

குஷ்பு சுந்தரின் உடையலங்காரம், கோபி அமர்நாத்தின் அழகிய ஒளிப்பதிவு, சத்யாவின் இனிய இசை எல்லாம் சேர்ந்து, சுந்தர்.சி.யின் எழுத்து இயக்கத்தில், "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தை "தியேட்டரில் போய் பார்க்கணும் ரசிகரு..." எனும் ஆவலை ஏ, பி, சி எல்லா சென்டரிலும் ஏற்படுத்தி விடும் என்றால் மிகையல்ல!

மொத்தத்தில், "தீயா வேலை செய்யணும் குமாரு" - "செம திருப்திப்படுத்தும் எல்லோரையும் பாரு"


-------------------------------------------

கல்கி விமர்சனம்


காதலும் காமெடியும் தமிழ் சினிமாவின் மூத்த குடிகள். காதலியைக் கவர, ஹீரோ செய்யும அத்தனை அசட்டுத்தனங்களும் காமெடிக்குத் தீனி. இந்தப்படத்திலும் அதே பார்முலாதான். பேக்கேஜிங் மட்டும் லேட்டஸ்ட்.

குமாருக்கு (சி்த்தார்த்) காதல் என்றாலே அலர்ஜி. அவரையும்‌ மயக்குபவர் சஞ்சனா (ஹன்சிகா). சஞ்சனாவிடம் தன் காதலைச் சொல்லி ஏற்க வைக்க குமார் செய்வது அத்தனையும் தகிடுதத்தங்கள். அதற்கு யைா மணி ‌வேலை செய்பவர், புரொபஷனல் காதல் குரு மோகியா (சந்தானம்). சித்தார்த் ஹீரோ இல்லை; சந்தானத்தை நம்பித்தானே படமே!
சித்தார்த்துக்கு சந்தானம் வைக்கும் டெஸ்டுகளில் தொடங்கி, கொடுக்கும் டிரெயினிங்குகள், போட்டுக்கொடுக்கும் திட்டங்கள் என்று காமெடி டிரீட்மென்ட் அட்டகாசம்! இரண்டாம் பாதியில் கதை கொஞ்சம் சீரியசாகி, சந்தானம் வில்லனாவது டிவிஸ்ட். இறுதியில் ஹன்சிகா, ஆம்பிளை பசங்களை எல்லாம் ‘திருட்டுப்பசங்க’ என்று பட்டம் கொடுக்க குஷ்பு உட்பட எல்லா நடிகர்களும் கோரஸாக ‘திருட்டுப் பசங்க, திருட்டுப் பசங்க’ என்று பாட்டுப்பாடி வாழ்த்தி அனுப்புகிறார்கள்.
சந்தானம் அறிமுக ஷாட்டில், தியேட்டரில் பயங்கர விசில். குறுகிய காலத்தில் ஹீரோ ரேஞ்சு வளர்ச்சி. இதில் அடிபட்டுப்போவது சித்தார்த்தான். பள்ளிக்கூட மாணவன் மாதிரி, ‘என்ன பாஸ் இப்படி பேசறீங்க’ என்ற அப்பாவிப்பேச்சு ஹீரோவுக்கு ஆகாது! சிச்சுவேஷன் காமெடிதான், படத்துக்குப் பெரிய பலம். ஏராளமான கேரக்டர்கள். கணேஷ் வெங்கட்ராமன், தேவதர்ஷினி, வெங்கி, ஆர்ஜே பாலாஜி, வித்யுலேகா என்று ஒவ்வொருவரும் இயல்பாகவே நகைச்சுவைக்கு ரூட் போடுகிறார்கள். நலன் குமாரசாமியும் சீனியும் வரிக்கு வரி, காமெடி ரோடு போடுகிறார்கள்.

சத்யாவின் பாடல்களும் பின்னணி இசையும் அவ்வளவு இனிமை! ‘அழகென்றால்’, ‘மெல்லிய சாரல்’, ‘லவ்வுக்கு எஸ்’, ‘என்ன பேச என்றே’ பாடல்கள் கட்டிப்போடுகின்றன. ஒரு சில இடங்களில் ஒரு பீட்டைத் தவறவிட்டு, இடைவெளி விட்டு என்றெல்லாம் சத்யா விரிக்கும் கற்பனை, பாடல்களை மெருகேற்றுகின்றன ‘கண்களோ மன்மதக் கழகமென்றேன், இருவரிக் கவிதை தானே உன்னிதழ் ரெண்டுமென்றேன்’, ‘தேயிலைக் கண்ணைக் கண்டேன்’ - பா.விஜய் வரிகள் மிகப் புதிதாகக் கவருகின்றன. ஒருசில டான்ஸ்கள் மட்டும் சொதப்பல்.
சந்தானம் பெண்களை அழைக்கும் வார்த்‌தைகள் எல்லாம் கொச்சை ரகம். சிரிப்பைவிட எரிச்சலே மிச்சம். ஐ.டி. ஆண்கள் எல்லோரும் பெண்கள் பின்னால் அலைபவர்கள் என்று காட்டியிருப்பதும் என்ன லாஜிக்கோ!

இரண்டரை மணி நேரம் தொய்வில்லாமல் நான்ஸ்டாப் காமெடிக்கு திரைக்கதையே பலம். சுந்தர்.சி.யின் முந்தைய படங்களைப் போலல்லாமல், இது ஸ்டைலிஷாகவும் டிரெண்டியாகவும் இருப்பது கூடுதல் ப்ளஸ்.

தீயா வேலை செய்யணும் குமாரு - சிரிப்பு ரகளை!


--------------------------------------------


குமுதம் விமர்சனம்


இதுவும் ஒரு தில்லுமுல்லு கதைதான்!

காதலிக்க கற்றுக்கொடுக்க ஒரு  காஸ்ட்லி ஏஜென்ஸி நடத்துகிறார் சந்தானம். அவரிடம் ஹன்சிகாவை செட் அப் செய்ய அஜால் குஜால் டியூஷன் எடுத்து அதில் வெற்றியும் பெறுகிறார் சி்த்தார்த். கடைசியில் சந்தானத்தின் தங்கச்சிதான் ஹன்சிகா என்று தெரியவர, அப்புறம் என்ன? தீயா வேலை செய்திருக்கிறார்கள்!

காமெடி என்றால் சுந்தர்.சி.க்கு ஜிலேபி சாப்பிடுவது மாதிரி. அதிலும் இப்படி ஒரு கதை, சந்தானம் வேறு. கேட்கவா வேண்டும்? படம் முழுக்க சந்தானத்தின் ராஜ்ஜியம்தான். அவரது சொந்த டயலாக்கோ, சுந்தர் அண்ட் கோ டயலாக்கோ, என்ன சொன்னாலும தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். சித்தார்த்தை மாட்டிவிட பிராத்தல் வீட்டில் அவர் பிளான் செய்ய, அது அவருக்கே ஆப்பாக முடியும்போதும் கலகலக்கிறது அரங்கம். சித்தார்த் நைஸ். அப்பாவித்தனமும், ஏமாற்றுத்தனமும் அழகு. சின்ன குஷ்பு ஹன்சிகா! (பெரிய குஷ்பு ஜாக்கிரதை) மாவு பொம்மை மாதிரி கொஞ்சுகிறார். கவர்ச்சியாக டான்ஸ் ஆடுகிறார். இது போதாதா?

பாடல்களைவிட லொக்கேஷன் கேமராவும் மனசைக் கொள்ளையடிக்கின்றன.

சமந்தா (சி்த்தார்த்துக்காக?!) விஷால் (ஹன்சிகாவுக்காக?!) ஒரே ஒரு காட்சிக்கு வந்து ஹாய் சொல்கிறார்கள்!

தீவேசெகு - எந்த லாஜிக் புண்ணாக்கையும் பார்க்காமல் சும்மா சிரித்துவிட்டு வரலாம்.

குமுதம் ரேட்டிங் - நன்று



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in