காபி வித் காதல்
விமர்சனம்
தயாரிப்பு - அவ்னி சினிமேக்ஸ், பென்ஸ் மீடியா
இயக்கம் - சுந்தர் சி
நடிப்பு - ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாள்விகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி
வெளியான தேதி - 4 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 27 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
இன்றைய காதல் எப்படி இருக்கிறது என்று சொல்லும் மற்றுமொரு படம். ஒரே குடும்பத்தில் உள்ள மூன்று அண்ணன் தம்பிகளின் 'காதல்' தான் இந்தப் படத்தின் கதை. அவை மூன்றும், மூன்று விதமான காதல். முதலாவது கள்ளக் காதல், இரண்டாவது திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்ந்து பிரிந்த காதல், மூன்றாவது புரிந்து கொள்ளாத ஒரு காதல்.
இந்த மூன்று காதலையும் மையமாக வைத்து அதைச் சுற்றி திரைக்கதை அமைத்து, அதில் காமெடியைக் கலந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், எதையெதையோ சுற்றிச் சுற்சிச் சொல்லி அதில் காதலைக் கலந்ததுதான் சரியாக வராமல் போயிருக்கிறது.
ஊட்டியில் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிகள் ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய். ஸ்ரீகாந்துக்குத் திருணமாகி ஒரு பெண் குழந்தை இருந்தும் ரைசா உடன் பழக்கமாகி தவறு செய்கிறார். ஜீவா, ஐஸ்வர்யா தத்தா சில வருடங்கள் லிவிங் டு கெதர் ஆக சேர்ந்து வாழ்ந்த நிலையில் ஐஸ்வர்யா பழைய தோழருடன் ஓடி விடுகிறார். ஜெய், தங்களது குடும்ப நண்பரின் மகளான அம்ரிதா தன் மீது வைத்துள்ள காதலை தாமதமாகத் தெரிந்து கொண்டு தவிக்கிறார். இதனிடையே, ஜெய்க்குத் திருமணம் நிச்சயிக்கும் மாளவிகா சர்மா, ஜீவாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அம்ரிதா வேறு ஒருவரை அழைத்து வந்து அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்கிறார். ஜீவாவுக்கும் ரைசாவுக்கும் திருமண நிச்சயம் ஆகிறது. ஜெய் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாளவிகாவைத் தவிர்த்து, அம்ரிதா பின்னால் சுற்றுகிறார். இந்த குழப்பங்களுக்கெல்லாம் என்ன முடிவு என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சுந்தர் சி படம் என்றாலே குடும்பத்துடன் பார்க்கும்படி இருக்கும், நகைச்சுவைப் படமாக இருக்கும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பு. ஆனால், இந்தப் படத்தில் அந்த இரண்டுமே குறைவாகவும், குறையாகவும் இருக்கிறது. இவ்வளவு நடிகர்கள், நடிகைகளை படத்தில் நடிக்க வைத்தவர் அவர்களுக்காக ஆளுக்கு ஒரு நான்கு காட்சிகளையாவது 'நச்' என்று வைத்திருந்தால் மொத்த படமுமே ரசிக்கும்படியாக இருந்திருக்கும். ஆனால், 'கிளாமர், கொஞ்சம் ஆபாசம்' என வேறு ஒரு பாதையில் பயணித்தால் இன்றைய ரசிகர்களைக் கவர முடியும் என நினைத்து தடம் மாறியிருக்கிறார்.
ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், மாள்விகா, அம்ரிதா, ரைசா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி இவர்களுடன் திவ்யதர்ஷினி என படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் நான்கைந்து நடிகர்களாவது வந்து விடுகிறார்கள். இவர் பின்னால் அவர் சுற்றுகிறார், அவர் பின்னால் இவர் சுற்றுகிறார், ஒருவர் பின்னால் இருவர் சுற்றுகிறார்கள், இருவர் பின்னால் ஒருவர் சுற்றுகிறார் யாரோ, யார் பின்னாலோ படம் முழுவதும் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். படத்தில் யாருக்குமோ எமோஷனலாக காட்சிகள் என எதுவும் இல்லை.
ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகியோரின் சகோதரியான திவ்யதர்ஷினி சகோதரர்களுக்கு இடையில் ஏதோ பெரிதாக சமரசம் செய்யப் போகிறார் என்று பார்த்தால் அதுவும் சிம்பிளாகப் போய்விடுகிறது. யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். படத்தின் நாயகிகள் அனைவரும் பேஷன் ஷோ நடப்பது போல விதவிதமான கிளாமர் ஆடைகளில் வந்து போகிறார்கள். அதைக் கவனமாக கேமரா கோணங்களில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
படம் முழுவதும் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒரே வீட்டுக்குள்தான் கதை அதிக நேரம் நகர்கிறது. 'நாளைய பொழுது' பாடலில் மட்டும் யுவன் ஷங்கர் ராஜா உருக வைக்கிறார். கதையோடு சேர்ந்து அடிக்கடி சில பாடல்கள் வருகிறது. அவற்றை விடவும் படம் முடிந்த பின் வரும் ரீமிக்ஸ் பாடலான 'ரம்பம் பம் ஆரம்பம்' பாடலைத்தான் எல்லாரும் உட்கார்ந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
பி அன்ட் சி ரசிகர்களுக்கு படம் பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. சுவாரசியமான குழப்பம் ஏற்படுத்தி, அதை விறுவிறுப்பாக நகர்த்தி, சுபமாய் முடிப்பதுதான் சுந்தர் சி படங்களின் முத்திரை. இப்பத்தில் அனைத்தும் உண்டு. ஆனால், அந்த சுந்தர் சி முத்திரை இதில் மிஸ்ஸிங்.
காபி வித் காதல் - நாட் எ பில்டர் காபி
காபி வித் காதல் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
காபி வித் காதல்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்