லிப்ட்,Lift

லிப்ட் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஏகா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - வினீத் வரப்பிரசாத்
இசை - பிரிட்டோ மைக்கேல்
நடிப்பு - கவின், அம்ரிதா
வெளியான தேதி - 1 அக்டோபர் 2021 (ஓடிடி ரிலீஸ்)
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான ஒரு பேய் படம் தான். பொதுவாக பேய் படங்களை ஒரு வீட்டை மையமாக வைத்து, பழங்கால பங்களாவை மையமாக வைத்து, பாழடைந்த பங்களாவை மையமாக வைத்துத்தான் உருவாக்குவார்கள். இந்தப் படத்தில் ஒரு லிப்ட்ஐ வைத்து உருவாக்கியிருக்கிறார்கள். அதுதான் இந்தப் படத்தில் இருக்கும் ஒரே வித்தியாசம். மற்றபடி பேய் பயமுறுத்தும் காட்சிகள் எல்லாமே வழக்கம் போலத்தான்.

ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடர் பதவிக்கு, பெங்களூருவிலிருந்து மாற்றலாகி சென்னைக்கு வருகிறார் கவின். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில் வீட்டுக்குக் கிளம்பும் போது கம்பெனி வி.பி. ஒரு வேலை கொடுக்க அதைச் செய்து முடிக்க இரவு ஆகிவிடுகிறது. வீட்டிற்குக் கிளம்ப லிப்ட்டில் செல்லும் போது ஏதோ ஒரு அமானுஷ்யம் நடக்கிறது. கார் வரை சென்றவரை வெளியில் செல்ல விடாமல் மீண்டும் லிப்ட் வந்து அலுவலுகத்திற்கே இழுக்கப்படுகிறார் கவின். அவர் எவ்வளவோ நினைத்தும் தப்ப முடியவில்லை. ஒரு கட்டத்தில் வேறொரு அறையில் மாட்டிக் கொண்ட நாயகி அம்ரிதாவும் கவினுடன் சேர இருவரும் அலுவலகத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் தப்பிச் சென்றார்களா, அவர்களை பேயாகத் துரத்துவது யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு 9 மாடி அலுவலகம், ஒரு லிப்ட், முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் என இரண்டரை மணி நேரம் படத்தை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வினீத் வரப்பிரசாத்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஸ்மார்ட்டாக என்ட்ரி கொடுக்கிறார் கவின். முதல் காட்சியிலேயே அவரை டீம் லீடர் என ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆரம்பத்தில் அலுவலகத்தில் தனியாக மாட்டிக் கொண்டு வெளியேற முடியாமல் அப்பாவித்தனமாக பயப்படுகிறார். அதன்பின் கதாநாயகி அம்ரிதா அவருடன் வந்து இணைந்த பிறகு மீண்டும் ஸ்மார்ட்டாக மாறி எப்படியாவது தப்பிக்க வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். மனதுக்குப் பிடித்தவர்கள் உடன் இருந்துவிட்டால் பயத்தைத் தூக்கிப் போட்டு சாதிக்கத் துடிப்பார்கள் இளைஞர்கள் என்பதை அவரது கதாபாத்திரம் புரிய வைக்கிறதோ ?.

அம்ரிதா முதலில் அழகாக என்ட்ரி கொடுத்து பின்னர் காணாமல் போய்விடுகிறார். இடைவேளைக்கு முன்பாகத்தான் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். பயப்படுவதைத் தவிர நடிப்பதற்கு வேறு வேலை இல்லை. அதை சரியாகவே செய்திருக்கிறார்.

படத்தின் வில்லனாக சில காட்சிகளில் பாலாஜி வேணுகோபால். பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரமே வருகிறார்கள் காதல் ஜோடிகள் கிரண் கொன்டா, காயத்ரி ரெட்டி.

படத்தில் ஒளிப்பதிவாளருக்குத்தான் அதிக வேலை. ஒரே ஒரு லிப்ட், அதை எத்தனை கோணங்களில், எத்தனை விதமான லைட்டிங்குகளில் காட்ட முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா. அலுவலகத்தையும், மற்ற இடங்களையும் பார்த்தால் கூட நம் மனத்தில் பயம் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு அவரது ஒளிப்பதிவு அமைந்துள்ளது. பிரிட்டோ மைக்கேலின் இசை ஒரு பேய் படத்திற்கு என்ன அவசியமோ அதைக் கொடுத்திருக்கிறது.

ஒரு காதல் கதையாக படம் நகருமோ என்று எதிர்பார்த்தால் அதில் ஏமாற்றம். லிப்ட்டிற்குள் கதை நகர்ந்த பிறகு அங்கேயே நீண்ட நேரத்தை இழுத்துவிட்டார்கள். சீக்கிரமே அதை விட்டு அலுவலகத்தில் நகர்ந்திருக்கலாம். அந்த ஆரம்ப தேக்கத்தைத் தவிர அதன்பின் படம் பரபரப்பாக நகர்கிறது.

யார் பேயாக கவினையும், அம்ரிதாவையும் விரட்டுகிறார்கள் என்பதை கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் காட்டுகிறார்கள். அவர்களிருவரை விரட்ட வேண்டிய அவசியம் என்ன ?. தங்கள் சாவுக்குக் காரணமானவர்களைத்தானே பேய்கள் பழி வாங்கும் என பல படங்களில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் சம்பந்தமில்லாதவர்களைப் பழி வாங்குவதற்கான காரணம் தெளிவாக இல்லை.

பேய் படம் என்று சொல்லிவிட்டு, கடைசியில் ஐ.டியில் வேலை பார்ப்பவர்களின் தற்கொலைக்கு அலுவலகப் பணியின் அழுத்தமே காரணம் என முடித்திருக்கிறார்கள். ஐ.டி. துறை மீது இயக்குனருக்கு அப்படி என்ன கோபமோ ?.

லிப்ட் - கொஞ்சம் தடங்கலுடன்...

 

லிப்ட் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

லிப்ட்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓