ஸ்டார்,Star

ஸ்டார் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட், ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா
இயக்கம் - இளன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - கவின், ப்ரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர்
வெளியான தேதி - 10 மே 2024
நேரம் - 2 மணி நேரம் 38 நிமடம்
ரேட்டிங் - 2.75/5

சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ஒரு இளைஞனுக்கு அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. தமிழ் சினிமாவில் சினிமாவையே மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. ஆனால், அந்தப் படங்கள் ரசிகர்களுடன் எந்த அளவிற்கு நெருக்கமாக அமைந்தன என்பதுதான் கேள்வி.

இப்படத்தை ஒரு இளைஞனின் வாழ்க்கைப் போராட்டமாக யதார்த்தமாகக் கொடுப்பதா அல்லது சினிமாத்தனமாகக் கொடுப்பதா என இயக்குனர் இளன் குழம்பியிருப்பது தெரிகிறது. இடைவேளைக்கு முன்பு ஒரு கதையாகவும், இடைவேளைக்குப் பின்பு அந்த மையத்தை விட்டு விலகிய கதையாகவும் இப்படம் அமைந்திருக்கிறது.

போட்டோ ஸ்டுடியோ நடத்தி வரும் லால் மகன் கவின். சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆசை. அதை வளர்த்துவிட்டவர் அவரது அப்பா லால். பள்ளிப்படிப்பு முடிந்த பின் அம்மாவின் வற்புறுத்தலால் இஞ்சினியரிங் படித்து முடிக்கிறார். படிக்கும் போது ப்ரீத்தி முகுந்தன் மீது காதல். சினிமாவில் நடிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து அதற்காக காரில் பயணிக்கும் போது கவினுக்கு விபத்து ஏற்படுகிறது. அவரது முகத்தில் பெரிய காயம் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின் அந்த காயத்தின் வடு அமைகிறது. தன் சினிமா கனவு நிறைவேறாமல் போனதால் வெறுப்பின் உச்சத்தை அடைகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

டிவி சீரியல்களில் எமோஷனல் காட்சிகளில் நடித்து நிறைய அனுபவம் இருப்பதால் இந்தப் படத்தில் பல காட்சிகளில் எளிதில் ஸ்கோர் செய்கிறார் கவின். ஜாலியான கல்லூரி மாணவர், அதிரடியில் இறங்குபவர், காதலில் விழுந்தவர், அப்பாவுக்கு செல்ல மகன் இடைவேளை வரை கலகலப்பான கவினைப் பார்க்கலாம். இடைவேளைக்குப் பின் தன் நிலை கண்டு கலங்கும் கவின்தான் கண்முன் நிற்கிறார்.

கல்லூரியில் படிக்கும் போது கவினின் காதலியாக ப்ரீத்தி முகுந்தன். வழக்கம் போல முதலில் வேண்டாமென்று சொல்லி பின் காதலிக்க ஆரம்பிக்கிறார். நெருக்கமாகப் பழகும் இவர்கள் ஒரு கட்டத்தில் திடீரெனப் பிரிகிறார்கள். இடைவேளைக்குப் பின் கவினைத் தேடிப் போய் காதலித்து கல்யாணமும் செய்து கொள்கிறார் அதிதி பொஹங்கர். கலங்கி நிற்கும் கவினை மாற்றுவதில் இவருக்குத்தான் பெரும் பங்கு.

கவினின் சினிமா ஆசைக்குக் காரணமானவராக அவரது அப்பா லால். இத்தனை தமிழ்ப் படங்களில் நடித்த பின்பும் மலையாள வாடை இல்லாமல் இவருக்குத் தமிழ் பேச வரவில்லை. பல காட்சிகளில் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. கவினின் அம்மாவாக கீதா கைலாசம், இயல்பான அம்மாவை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

இந்த ஸ்டாரின் கூடுதல் ஒளிக்கு முக்கியக் காரணம் யுவன்ஷங்கர் ராஜாவின் இசை. காட்சிக்குக் காட்சி அவரது பின்னணி இசை படத்தை வேறு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. சில பாடல்கள் படத்துடன் ரசிக்க வைக்கிறது. எழில் அரசுவின் ஒளிப்பதிவு தரமாய் மின்னுகிறது.

உணர்வுபூர்வமாக சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. ஆரம்பத்தில் அருமையாக 'டேக் ஆப்' ஆகி போகப் போக எங்கெங்கோ சென்று திரைக்கதை தடுமாறுகிறது. மும்பை சம்பந்தமான காட்சிகள் படத்திற்கு எந்தவிதத்திலும் உதவி செய்யவில்லை. தேவையற்ற சில காட்சிகள் படத்தின் நீளத்தை இழுத்திருக்கிறது. இன்னும் சுருக்கமாய், அழுத்தமாய், தெளிவான திரைக்கதையுடன் சொல்லியிருந்தால் முக்கியமான படமாக அமைந்திருக்கும்.

ஸ்டார் - பொன்னாக மின்னியிருக்கலாம்

 

ஸ்டார் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஸ்டார்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓