வரலாறு முக்கியம்
விமர்சனம்
தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ்
இயக்கம் - சந்தோஷ் ராஜன்
இசை - ஷான் ரகுமான்
நடிப்பு - ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நக்ரா
வெளியான தேதி - 9 டிசம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
'சிவா மனசுல சக்தி' படத்திற்குப் பிறகு ஜீவா நடித்து வெளிவந்த சுமார் 20 படங்களில் அவருக்குப் பெயர் சொன்ன படமாக அமைந்த ஒரே படம் 'கோ' மட்டுமே. மற்ற படங்கள் எதுவும் அவருக்கு சிறப்பானதொரு படமாக அமையவில்லை என்பதே உண்மை.
மீண்டும் 'சிவா மனசுல சக்தி' படம் போல ஒரு படத்தைக் கொடுத்தால் மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கலாம் என இந்தப் படத்தைத் தேர்வு செய்திருப்பார் போலிருக்கிறது. அந்த 'சிவா - சக்தி' காதலை குடும்பத்துடனும் பார்த்து ரசிக்கலாம். ஆனால், இந்த 'கார்த்தி - யமுனா - ஜமுனா' காதலை 'சிங்கிள்ஸ்கள்' மட்டுமே பார்க்க முடியும். அந்த அளவிற்குப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள், ஏடாகூடமான காட்சிகளை நிரப்பி வைத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன்.
கோயம்பத்தூரில் எந்த வேலைக்கும் செல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர் ஜீவா. அவர்களது தெருவில் புதிதாகக் குடி வந்த மலையாளக் குடும்பத்தைச் சேர்ந்த காஷ்மீரா பர்தேஷியைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அதே சமயம் காஷ்மீராவின் தங்கையான பிரக்யா நக்ரா--வும் ஜீவாவைக் காதலிக்கிறார். சில பல முயற்சிகளுக்குப் பிறகு காஷ்மீராவின் மனதில் இடம் பிடிக்கும் ஜீவா, பிரக்யாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர் மனதில் உள்ள காதலைக் கலைத்துவிடுகிறார். தங்களது மகள்களை துபாய் மாப்பிள்ளைக்கே திருமணம் செய்து வைப்பேன் என இருப்பவர் காஷ்மீரா, பிரக்யாவின் அப்பா சித்திக். காஷ்மீரா, ஜீவா காதல் பற்றி அவருக்குத் தெரிய வர உடனடியாக துபாய் மாப்பிள்ளையுடன் திருமணம் நிச்சயிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
'சிவா மனசுல சக்தி' படத்தை நினைத்துக் கொண்டே இந்தப் படத்தில் ஜீவா நடித்திருக்கிறார். அந்த சிவாவுக்கும், இந்த கார்த்திக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அந்த சிவா, கொரியர் கம்பெனியிலாவது வேலை பார்த்தார். இந்த கார்த்தி எந்த வேலைக்கும் போகாமல் இருக்கிறார். யு டியூப் சேனல் நடத்துகிறார் என்று வசனம் வருகிறது. ஆனால், கிளைமாக்சில் மட்டுமே ஒரு வீடியோவை பதிவிடுகிறார். மற்றபடி படம் முழுவதும் தெருவில் சுற்றுகிறார் இல்லையென்றால் காஷ்மீரா பின் சுற்றுகிறார். இப்படிப்பட்ட படங்களும், கதாபாத்திரங்களும்தான் தன்னைக் காப்பாற்றும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.
மலையாளப் பெண்கள் என்றாலே தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களிடம் ஒரு 'மவுசு' இருக்கிறது என தன் பெண்களிடமே வசனம் பேசுகிறார் மலையாள அப்பா சித்திக். ஆனால், அவரது பெண்கள்தான் ஜீவாவிடம் எளிதில் காதலில் விழுகிறார்கள். மூத்த பெண் காஷ்மீரா சில பல சந்திப்புகளுக்குப் பின்தான் ஜீவாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், இளைய பெண் பிரக்யாவோ ஜீவாவைப் பார்த்ததுமே காதலில் விழுகிறார். காஷ்மீராக் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகக் காட்டிய இயக்குனர், பிரக்யாவை இப்படி கவர்ச்சிகரமாகக் காட்டியதன் காரணம் என்னவோ?.
ஜீவாவின் அப்பாவாக பள்ளி ஆசிரியராக கேஎஸ் ரவிக்குமார், அம்மாவாக சரண்யா, இப்படி ஒரு மகனைப் பெற்றிருக்கிறோமே என அடிக்கடி வருத்தப்படுகிறார்கள். படத்தில் ஜீவாவின் நண்பர்களாக சிலர் நடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு நடிக்க வாய்ப்பே தரவில்லை இயக்குனர். அதற்குப் பதிலாக அரசியல்வாதியாக சுற்றித் திரியும் விடிவி கணேஷ்தான் ஜீவாவின் நண்பராக படம் முழுவதும் வருகிறார். படத்தை அவர்தான் ஆரம்பித்தும் வைக்கிறார், முடித்தும் வைக்கிறார்.
ஷான் ரகுமான் இசையில் துள்ளல் பாடல்கள் மட்டுமே ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. காதல் படத்திற்கு இரண்டு அருமையான டூயட் பாடல்களைக் கொடுத்திருக்கலாம்.
ஜாலியான டைம் பாஸ் படமாகக் கொடுக்க வேண்டும் என யோசித்து கதையை விட 'காமக்' காட்சிகள் காப்பாற்றும் என்று நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட படத்தை எடுத்து விட்டு 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி' என்று மட்டும் விளம்பரப்படுத்தி விடாதீர்கள்.
வரலாறு முக்கியம் - எந்த வரலாறு ?.
வரலாறு முக்கியம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
வரலாறு முக்கியம்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்