பரம்பொருள்
விமர்சனம்
தயாரிப்பு - கவி கிரியேஷன்ஸ்
இயக்கம் - அரவிந்த்ராஜ்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா பர்தேஷி
வெளியான தேதி - 1 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
சினிமாவில் குற்றங்களைக் காட்டுவதில் கூட அவ்வப்போது ஒரு டிரெண்ட் வரும். ஒரு கட்டத்தில் ஆயுதக் கடத்தல், பின் போதைப் பொருள் கடத்தல், சமீப காலங்களில் சிலைக் கடத்தல். அப்படி ஒரு சிலைக் கடத்தல் பற்றிய படம்தான் இந்தப் படம். இயக்குனர் அரவிந்த்ராஜ், சிலைக் கடத்தல் பற்றி ஒரு டீடெய்லிங்கான படத்தைக் கொடுத்திருக்கிறார்.
தனது தங்கையின் மருத்துவ செலவுக்காக திருட்டு வேலைகளைச் செய்பவர் அமிதாஷ். ஒரு முறை இன்ஸ்பெக்டரான சரத்குமார் வீட்டில் திருடச் சென்று மாட்டிக் கொள்கிறார். ஒரு சிலை கடத்தல் குற்றவாளியிடம் வேலை செய்த அமிதாஷ் விசாரணையின் போது அது பற்றி சொல்ல சரத்குமார், அமிதாஷைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். அந்த குற்றவாளி மறைத்து வைத்திருந்த சிலைகளைத் தேடிப் பிடித்து எடுத்து விற்று பங்கு போட்டுக் கொள்ள சரத்குமாரும், அமிதாஷும் முடிவு செய்கிறார்கள். அதன்படி ஆயிரம் வருட அபூர்வ சிலை ஒன்றைத் தேடி எடுக்கிறார்கள். அதை விற்பதற்காக அவர்கள் முயல அதனால் பல சிக்கல்கள் வருகிறது. அவற்றைக் கடந்த சிலையை விற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சிலை கடத்தலின் ஆரம்பம், பின் அந்த சிலைகள் எப்படி கை மாறுகிறது, எப்படி வியாபாரம் நடக்கிறது, எப்படியெல்லாம் சிலைகளைக் கடத்துகிறார்கள் என விவரமான ஒரு கிரைம் திரில்லர் கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அமிதாஷ், சரத்குமார் இருவரது கதாபாத்திரங்களும் படத்தை வெகுவாய் தாங்குகின்றன. சமீபத்தில் 'போர் தொழில்' படத்தில் சரத்குமாரின் நடிப்பு பேசப்பட்டது போல, இந்தப் படத்திலும் பேசப்படும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் இன்ஸ்பெக்டராக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சத்தமில்லாமல் சாதித்திருக்கிறார் சரத்குமார்.
தங்கையின் மருத்துவ செலவு, குடும்ப சூழல் காரணமாக திருடனாக இருக்கும் அமிதாஷ் பின் சரத்குமாரின் மிரட்டலுக்குப் பணிந்து சிலை கடத்தும் வேலைகளில் இறங்குகிறார். வளரும் நடிகர்கள் துணிச்சலான கதாபாத்திரங்களை தைரியமாக ஏற்று நடித்து வரவேற்பைப் பெற்று வருகிறார்கள். அந்த விதத்தில் இந்தப் படத்தில் அமிதாஷின் நடிப்பை வரவேற்கலாம். கதாபாத்திரத்திற்குரிய நடிப்பை கச்சிதமாய் வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்தில் கதாநாயகி இருக்க வேண்டும் என்பதற்காக காஷ்மீரா பர்தேஷி கதாபாத்திரத்தை வைத்திருக்கிறார்கள். தனியாக அவருடைய கதாபாத்திரம் தெரியக் கூடாதென கதையோடு பயணிக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று. இம்மாதிரியான பாடல்களில் பாடல்களுக்கு அவசியமேயில்லை. அவை ஸ்பீட் பிரேக்கர்களாகவே இருக்கின்றன. பாண்டிகுமார் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளில் தரமாய் அமைந்திருக்கிறது.
படம் முழுவதும் சரத்குமார், அமிதாஷ் இருவருமே ஆக்கிரமித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதுவே ஓவர் டோஸ் ஆகி விடுகிறது. அவர்களைத் தவிர்த்து வேறு பாதையில் திரைக்கதை பயணிக்காமல் போது படத்திற்கு மைனஸ். கிளைமாக்ஸ் டுவிஸ்ட் சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று. அதுதான் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
பரம்பொருள் - பரபரப்புடன்…
பட குழுவினர்
பரம்பொருள்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்