தி ஸ்மைல் மேன்
விமர்சனம்
தயாரிப்பு - மேக்னம் மூவிஸ்
இயக்கம் - ஷியாம் பிரவீன்
இசை - கவாஸ்கர் அவினாஷ்
நடிப்பு - சரத்குமார், ஸ்ரீகுமார், சிஜா ரோஸ்
வெளியான தேதி - 27 டிசம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
ரசிகர்கள் எதிர்பார்க்கும் விறுவிறுப்பு, பரபரப்பு ஆகியவை சரியாக இருந்தால் க்ரைம் திரில்லர் படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். ஓடிடி தளங்கள் வந்த பிறகு மலையாளத்தில் வந்த பல க்ரைம் திரில்லர் படங்களைப் பார்த்து தமிழ் ரசிகர்களின் ரசனையும் மாறிவிட்டது. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக இருந்தால் மட்டுமே அவர்களும் பார்த்து ரசிப்பார்கள்.
சரத்குமார் நடித்து கடந்த வருடம் வந்த 'போர் தொழில்' படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் சீரியல் கில்லர் பற்றிய ஒரு படம். இந்தப் படமும் அதே போன்று சீரியல் கில்லர் பற்றிய படம்தான். ஆனால், இரண்டு படத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. இந்தப் படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை கொஞ்சம் மிஸ்ஸிங்.
சிபிசிஐடி-யில் உயர் அதிகாரியாக இருப்பவர் சரத்குமார். குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் விபத்தில் சிக்கி சில வருடங்கள் ஓய்வில் இருப்பவர். அவருக்கு ஞாபக மறதி நோயான அல்சைமர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த 'ஸ்மைல் மேன்' சீரியல் கொலைகள் போல தற்போதும் நடக்க ஆரம்பிக்கிறது. புதிதாக வந்த அதிகாரியான ஸ்ரீகுமார் அந்த வழக்கு விசாரணையை நடத்த ஆரம்பிக்கிறார். சரத்குமாரை மீண்டும் பணிக்கு வருமாறு அழைத்து அவரது தலைமையில் ஒரு குழு செயல்பட ஆரம்பிக்கிறது. மீண்டும் நடக்கும் கொலைகளுக்குக் காரணமான அந்த கொலையாளியை அவர்கள் கண்டுபிடிக்கிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சரத்குமாரின் நடிப்பில் வெளிவந்துள்ள 150வது படம். அவருடைய கதாபாத்திரம் அழுத்தமான கதாபாத்திரமாகவே உள்ளது. ஞாபக மறதியில் பாதிக்கப்பட்டு, தனக்கு நெருக்கமானவர்களின் கொலையைத் தடுக்க முடியாத பாதிப்பு என தவிக்கும் ஒரு கதாபாத்திரம். அவருடைய அனுபவ நடிப்பில் அவரது கதாபாத்திரத்தில் நிறைவாகவே நடித்திருக்கிறார்.
வழக்கை விசாரிக்கும் புதிய அதிகாரியாக ஸ்ரீகுமார், அவருடைய உதவியாளர்களாக சிஜா ரோஸ், ராஜ்குமார். காக்கிச்சட்டை அணியாத சிபிசிஐடி அதிகாரிகள். காமெடி என்ற பெயரில் சில காட்சிகளில் கிறுக்குத்தனம் செய்கிறார் ராஜ்குமார். சரத்குமாருக்கு உதவி செய்யும் குமாஸ்தாவாக ஜார்ஜ மரியான். பிளாஷ்பேக்கில் இனியா, பேபி ஆலியா சம்பந்தப்பட்ட காட்சிகள் கலங்க வைக்கின்றன.
கோயம்புத்தூர் தான் கதைக்களம். அதன் இரவு நேர சாலை காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன் அற்புதமாய் லைட்டிங் செய்திருக்கிறார். பின்னணி இசையில் கவாஸ்கர் அவினாஷ் கொஞ்சம் பரபரப்பு ஏற்படுத்துகிறார்.
க்ரைம் திரில்லர் படங்களில் விறுவிறுப்பான திரைக்கதை மிகவும் முக்கியம். இதில் அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் இடைவேளை வரை மெதுவாக நகர்த்தி
இருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின்பு இடம் பெறும் பிளாஷ்பேக் காட்சிகள்
நெகிழ்வாய் அமைந்துள்ளது. யார் அந்த சீரியல் கில்லர் என்று தெரிய வரும்
போது நாம் எதிர்பார்க்காத சஸ்பென்ஸ் அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம்
முயற்சித்திருந்தால் பரபரப்பான த்ரில்லர் படமாகக் கொடுத்திருக்கலாம்.
தி ஸ்மைல் மேன் - தி சீரியஸ் மேன்
தி ஸ்மைல் மேன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
தி ஸ்மைல் மேன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்