துருவங்கள் பதினாறு, குற்றம் 23 வரிசையில் வந்திருக்கும் இன்னொரு துப்பறியும் கதையுடனான படம். ஆனால் அவை தந்த திருப்தியான த்ரில்லர் மொமண்டை தந்திருக்கிறதா என்று பார்ப்போம்.
கல்பதரு பிக்சர்ஸ் ராம்மோகன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜேபிஆர் திரைக்கதை, இயக்கத்தில், சரத்குமார், சுஹாசினி, நெப்போலியன், முனீஸ்காந்த் நடிப்பில் தீபாவளி ரேஸில் களம் இறங்கியிருக்கும் படம் சென்னையில் ஒருநாள் 2.
சென்னையில் இருந்து கோயம்பத்தூருக்கு இடமாற்றலாகி வரும் சரத்குமாருக்கு உடனேயே ஒரு சேலஞ்ச் காத்திருக்கிறது. கோவை மாநகரம் முழுக்க ஏஞ்சலின் கொலை இன்றா? நாளையா? என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஏஞ்சலினையும் கொலையாளியையும் கண்டுபிடித்து குற்றத்தை தடுக்கும் பொறுப்பை சரத்குமாருக்கு தருகிறார் கமிஷனர் நெப்போலியன். சரத் அதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை.
க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் கதையை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் ஜேபிஆர். ஆனால் நாவலில் இருக்கும் பரபரப்பை திரைக்கதையில் கொண்டு வராமல் விட்டுவிட்டார். அது மேக்கிங்கிலும் எதிரொலிக்க படம் நம்மை பாடாய் படுத்துகிறது.
ஒண்ணே முக்கால் மணி நேர படம் நான்கு மணி நேரம் ஓடுவது போல தோன்றுகிறது. போதாத குறைக்கு படம் முழுக்கவே ரிப்பீட்டட் காட்சிகள். எடிட்டருக்கு ஒரு மணி நேர படத்தை ஒண்ணே முக்கால் மணி நேரமாக்கும் டாஸ்க்கை கொடுத்திருப்பார்கள் போல... பாவம் நாம் தான்!
இயக்குநர் ஜேபிஆர் நடிகர்கள், டெக்னிஷியன்கள் உள்ளிட்ட யாரிடமுமே சரியாக வேலை வாங்கவில்லை. தெரிந்த முகங்களான சரத்குமார், சுஹாசினி, முனீஸ்காந்த் மூவரும் கூட ஏதோ கடமைக்கு நடித்திருப்பது தெரிகிறது.
கோவையில் நடக்கும் கதைக்கு ஏன் சென்னையில் ஒரு நாள் என்று டைட்டில்?
இந்த படம் புதுமுக இயக்குநர்களுக்கு ஒரு பாடம்!