தினமலர் விமர்சனம்
இதுநாள் வரை அண்ணன் - தம்பி, அப்பா - மகன், தாத்தா - பேரன்... என்றெல்லாம் இரட்டை வேடம் ஏற்று ஜெயித்த நடிகர் ஆர்.சரத்குமார், ஹீரோ - வில்லன் என இரட்டை வேடம் ஏற்று நடித்து வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் சண்டமாருதம். அதுவும் சரத்துக்கு ஏய் உள்ளிட்ட வெற்றிகளை தந்த ஏ.வெங்கடேஷின் இயக்கத்தில் வௌிவந்திருக்கிறது இப்படம் என்பது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது...!
வில்லன் சரத், சின்ன வயதில் பணமில்லாததால் படிப்பையும், தாய்பாசத்தையும் இழக்கிறார். அதனால் பணத்தாசை பிடித்து, கும்பகோணத்தில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவில், ஒரேநேரத்தில் 101 இடங்களில் பட்டாசுக்கு பதில் பாம் வெடித்து தீபாவளி கொண்டாட திட்டமிடுகிறார். எல்லாவற்றுக்கும் காரணம் பணம். அதற்காக சர்வதேச தீவிரவாதிகள் சகலருடனும் கைகோர்த்து கொண்டு காய் நகர்த்தும் சர்வ வல்லமை படைத்த சர்வேஸ்வரனாக, தன் படை பரிவாரங்களுடன், பண்ணாத அட்டூழியம் இல்லை, செய்யாத தகிடுதத்தங்கள் இல்லை..., கொலை கொடூரமில்லை... எனும் அளவிற்கு பக்காவாக பவனி வருகிறார்.
அவரை, பொள்ளாச்சி பக்கம் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து தன் குடும்பத்தில் தந்தை டெல்லி கணேஷ் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் என்-கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸாக இருக்கும் ஹீரோ சூர்யா-சரத், கூண்டோடு சுட்டு பொசுக்குவது தான் சண்டமாருதம் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!
சூர்யா-சரத், என்கவுன்ட்டர் போலீஸ் ஆபிசராக இளமை முறுக்கோடு செய்யும் சாகசங்கள் அதிரடி என்றால், அதைக்காட்டிலும் அதிரடியாகவும், அலப்பறையாகவும் இருக்கிறது அண்டர்கிரவுண்ட் தாதாவாக சர்வராஜ்யம் பண்ணும் வில்லன் சர்வேஸ்வரன்-சரத்தின் கெட்ட-அப்பும், பில்-டப்பும். அதிலும் சாதாரண வாட்டர்கேன் போடும் சரத், சக்ரவியூகம், ஓவியம் பற்றி பேசுவது பார்த்து, ஒரு நிமிஷம் யோசித்து பன்ச் டயலாக் அடிக்கும் வில்லன் சர்வேஸ்வரன்-சரத், ஹீரோ-சரத்தை காட்டிலும் ஒரு மடங்கு உயரம்!
ஹீரோ-சரத்தின் முறைபெண் மகாலட்சுமியாக வரும் மீரா நந்தன், போலீஸ் ஆபிசர் மின்மனியாக வரும் ஓவியா இருவருக்கும் இதுமாதிரி ஆக்ஷ்ன் படத்தில் வழக்கமாக தரப்படும் முக்கியத்துவத்தை காட்டிலும் ஒருபடி ஜாஸ்தியாக நடிக்கவும், இளமை துடிக்கவும் வாய்ப்பு தரப்பட்டிருப்பது சண்டமாருதம் படத்திற்கு மேலும் பலமாக இருக்கிறது.
சரத்தின் நண்பராகவும், கடமை தவறாத போலீஸ் அதிகாரியாகவும் வந்து, ரசிகர்களை பரிதவித்து வைக்கவிட்டுபோகும் சமுத்திரகனி, வில்லன் சரத்தின் நண்பர்கள் ஆர்.ஆர் - ராதாரவி, காதல் தண்டபாணி, செல்வமாக வரும் அருண் சாகர், வெண்ணிறாடை மூர்த்தி, தம்பி ராமைய்யா, சிங்கம் புலி, டெல்லி கணேஷ், நளினி, மோகன்ராம், ஜி.எம்.குமார், சந்தானபாரதி, வின்சென்ட் அசோகன், கானா உலகநாதன், இமான் அண்ணாச்சி, ஆதவன், ரேகா சுரேஷ் உள்ளிட்ட சகலரும் சண்டமாருதத்திற்கு பிரமாண்ட பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
சரத்குமாரின் கதை, கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் திரைக்கதை, ஜேம்ஸ் வசந்தனின் இசை, என்.எஸ்.உதய்குமாரின் ஔிப்பதிவு, வி.டி.விஜயனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், ஏ.வெங்கடேஷின் வசனமும், இயக்கமும், சண்டமாருதம் படத்தை ரொம்பவும் பிரமாண்டமாக காட்டியிருக்கிறது.
ஆனாலும், ஒவ்வொரு ஆக்ஷ்ன் படத்திலும் வரும் காட்சிகள், இப்படத்திலும் தவறாமல் ரீ-பிளேஸ் செய்யப்பட்டிருப்பதும், தொட்டுவிடும் தூரத்தில் ஹீரோவுக்கு வில்லனும், வில்லனுக்கு ஹீரோவும் அடிக்கடி வந்து போனாலும், அப்போதெல்லாம் சுடாத அவர்களது துப்பாக்கி, ஆக்ஷ்ன் பிளாக்குகளில் மட்டும் டம் டும் என்று வெடிப்பது, இந்துக்களின் புனிதமாக போற்றப்படும் காசி தீர்த்த குடுவையில் ஒஃபாலிஸிகா வெடிபொருளை வைத்து வில்லன்-சரத் வியாபாரம் செய்வது, உள்ளிட்ட ஒருசில குறைகள் என்னதான் புதுமை என்றாலும், புதிய மொந்தையில் பழைய கள்ளாகவே சண்டமாருதத்தை காட்டுகிறது!
அதேநேரம், பட டைட்டிலுக்கு ஏற்ப சண்டைக்காட்சிகள் புதுமையான தொழில்நுட்பத்துடன் மிரட்டலாக படமாக்கப்பட்டிருப்பதற்காக சண்டமாருதத்தையும், சரத்தின் உழைப்பையும் பாராட்டியே ஆக வேண்டும்.
மொத்தத்தில், சண்டமாருதம் - கேப்டன் விஜயகாந்த், ஆக்ஷ்ன் கிங் ஆர்ஜூன் படங்களின் வரிசையில் சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமாரின் வந்தேமாதரம்!
கல்கி சினி விமர்சனம்
கும்பகோணத்து தாதா சர்வேஸ்வரன் (சரத்குமார்) சர்வதேச தீவிரவாத கும்பலுடன் சேர்ந்து இந்தியாவில் 101 இடங்களில் குண்டு வைக்கத் திட்டமிட்டு காசி சொம்புக்குள் பாம் வைத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனுப்புகிறார். இன்னொரு சரத்குமார் (சூர்யா) அதை முறியடிப்பதுதான் "சண்டமாருதம் அவுட்லைன் ஸ்டோரி.
கதை சரத்குமார். அதற்கு க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதையில் விறுவிறுப்பேற்றி படத்தை படுவேகமாகச் செல்ல உதவியுள்ளார்.
பள்ளியில் படிக்க ஆசைப்பட்டு அம்மாவோடு சென்று தனியார் பள்ளி தாளாளரிடம் கெஞ்சுகிறார். தாளாளர் கோபத்தில் தாயைத் தள்ளிவிட அவர் தலையில் அடிபட்டுச் சாகிறார். அன்றுமுதல் பணம் பணம் என்று ஊரே நடுங்கும் சர்வேஸ்வரனாக உருவாகிறார் ஒரு சரத்குமார். அவரைப் பிடிக்க வந்த இன்னொரு சரத்தின் நண்பன் சமுத்திரகனியை நாடகமாடிக் கொல்கிறார். இதற்குப் பழிவாங்க தனிப்படை அமைத்துப் போட்டுத் தள்ளுகிறார் நல்ல சரத்குமார்.
போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் வரும் சமுத்திரகனி கதாபாத்திரம் சபாஷ் போட வைக்கிறது. காதலியாக வரும் மீரா நந்தன் மனதை அள்ளுகிறார். ஸ்பெஷல் போலீஸ் ஆபீஸராக வரும் ஓவியா சரத்துடன் ஆடிப்பாடி குண்டுக்குப் பலியாகி மனத்தில் நிற்கிறார்.
ஓவியாவை இமான் அண்ணாச்சியிடம் அறிமுகப்படுத்தி சர்வேஸ்வரன் வீட்டுக்குள் நுழைவது, மீரா நந்தனிடம் காதலில் கலக்குவது என நல்ல சரத்குமார் வழக்கமான நாயகன்தான். ஆனால் ஸ்வீட் வில்லனாக வரும் சர்வேஸ்வரன் கேரக்டரில் சரத்குமார் முத்திரை பதித்திருக்கிறார்.
தம்பி ராமையா, இமாம் அண்ணாச்சி, வெண்ணிற ஆடை மூர்த்தி வரும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. "கானா உலகநாதன் சர்வேஸ்வரன் துதி பாடியபடியே அவருக்கு ஜால்ரா போடுவது ரசிக்கலாம்.
நளினி, டெல்லி கணேஷ், மோகன்ராம், சந்தான பாரதி, ஆதவன், வின்சென்ட் அசோகன் என ஒரு பெரிய கேரக்டர் பட்டாளமே இருந்தாலும் யாரும் அதிக வேலையில்லை என்பது குறை.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் மென்மையைப் பேசுகிறது. பின்னணி இசையும் ஓகே.
கும்பகோணம் ஒரு சிறிய பகுதி. அங்கிருந்து இந்தியா முழுவதும் பாம்களை லாரி மூலம் கடத்தி இந்தியாவை நாசமாக்கும் சர்வேஸ்வரன்மீது உளவுதுறை பார்வை படாதது ஏன்? போலீஸ் அதிகாரியாக வரும் இன்னொரு சரத் கதாபாத்திரம் என்ன செய்கிறது என்பதை சரியாக விளக்காதது மைனஸ்கள்.
படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் சலிப்பின்றி போகிறது. கமர்ஷியல் படத்துக்கு என்னென்ன தேவையோ அதை விறுவிறுப்பாகத் தந்துள்ளார் இயக்குநர் ஏ. வெங்கடேஷ். ஸ்டன்ட் சிவாவின் சண்டைக்காட்சிகள் அனல் பறக்கிறது.
சண்டமாருதம் - கமர்ஷியல் புயல்!