வசந்த முல்லை,Vasantha Mullai

வசந்த முல்லை - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - லீட் இந்தியா என்டர்டெயின்மென்ட், எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம்- ரமணன் புருஷோத்தமா
இசை - ராஜேஷ் முருகேசன்
நடிப்பு - பாபி சிம்ஹா, காஷ்மீரா
வெளியான தேதி - 10 பிப்ரவரி 2023
நேரம் - 1 மணி நேரம் 48 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

ஐ.டி. யுகத்தில் இன்றைய இளைஞர்கள் ஒரு பக்கம் நிறைய சம்பாதித்தாலும் மறுபக்கம் ஒரு நிம்மதியான, தூக்கமில்லாத வாழ்க்கையையும் இழந்து வருகிறார்கள். குறுகிய காலத்தில் வாழ்க்கையில் 'செட்டில்' ஆக வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படாமல், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்காமல் எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.

இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான ஒரு விஷயத்தை, த்ரில்லர் முலாம் பூசி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரமணன் புருஷோத்தமா. பாபி சிம்ஹா ஒரு ஐ.டி. கம்பெனியில் டீம் லீடர் ஆக வேலை பார்ப்பவர். புதிய புராஜக்ட் ஒன்றை தலைமை ஏற்று செய்ய ஒத்துக் கொள்கிறார். இரவு, பகலாக அந்த வேலையிலேயே மூழ்கியதால் அவருக்கு தூக்கம் போகிறது. அதனால், மூளை மிகவும் சோர்வடைந்து அவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதிலிருந்து விடுபட்டு ஓய்வெடுக்க மனைவி காஷ்மீராவுடன் வெளியில் செல்கிறார். 'வசந்த முல்லை' என்ற ஹோட்டலில் ஒரு இரவு மட்டும் தங்குகிறார். அப்போது எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கிறது. அது திரும்பத் திரும்ப 'டைம் லூப்' போல நடக்க அதிர்ச்சியாகிறார். அதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கடந்த மாதம் பாபி சிம்ஹா நடித்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற ஒரு படம் வந்த சுவடு தெரியாமல் ஓடிப் போனது. இந்த 'வசந்த முல்லை' படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென முயற்சி செய்துள்ளார் பாபி சிம்ஹா. கதையாக தேவையான ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்ட இயக்குனர் த்ரில்லர் பாணியில் சொல்லாமல் வேறு ஒரு பாணியில் சொல்லியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்குமோ என்று எண்ண வைக்கிறது. இடைவேளைக்குப் பின் 'டைம் லூப்' போல வரும் காட்சிகள் குழப்பியடித்து போரடிக்கவும் வைக்கின்றன.

பாபி சிம்ஹா, ஐ.டி. டீம் லீடர் ஆக பொருத்தமாகவே நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அவரது கதாபாத்திரம் போகப் போகக் கொஞ்சம் ஏமாற்றி விடுகிறது. இருந்தாலும் பாபி சிம்ஹா அவருடைய நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அவரது காதலியாக காஷ்மீரா. பாபியின் நிலைமையைக் கண்டு அவரை எப்படியாவது அமைதிப்படுத்தி ஓய்வெடுக்க வேண்டும் என்று துடிக்கிறார். கிளைமாக்சில் சிறப்புத் தோற்றத்தில் ஆர்யா வந்து போகிறார்.

'வசந்த முல்லை' ஹோட்டல் செட் நன்றாகவே உள்ளது. அங்கு நடைபெறும் மர்மங்கள் அடுத்தடுத்து வேறு விதமான காட்சிகளாக நகர்ந்திருந்தால் வேறு ஒரு வகையான த்ரில்லர் படத்தைப் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும். ஆனால், இயக்குனர் இந்த 'டைம் லூப்' சிறப்பாக இருக்கும் என நினைத்திருக்கிறார் போலிருக்கிறது.

ராஜேஷ் முருகேசினின் பின்னணி இசை பரபரக்க வைக்கிறது. இரவு நேரக் காட்சிகளில் மேலும் திகிலைத் தருகிறது கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு.

வாழ்க்கையில் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லியிருப்பதற்காகத் தனியாகப் பாராட்ட வேண்டும்.

வசந்த முல்லை - தூக்கமில்லை, வசந்தமில்லை…

 

பட குழுவினர்

வசந்த முல்லை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓