அக்னி தேவி
விமர்சனம்
நடிப்பு - பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா மற்றும் பலர்
தயாரிப்பு - சீன்டோ ஸ்டுடியோ
இயக்கம் - ஜேபிஆர் - ஷாம் சூர்யா
இசை - ஜேக்ஸ் பிஜாய்
வெளியான தேதி - 22 மார்ச் 2019
நேரம் - 1 மணி நேரம் 43 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக குறும் பட இயக்குநர்கள் பலர் திரைப்படம் எடுக்க வந்தார்கள். அதன் பின் சினிமாவுக்கு என்று இருந்த இலக்கணம் மாறிப்போனது. இப்போதெல்லாம் பல திரைப்படங்களைப் பார்ப்பதற்கு குறும் படங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது.
ஐந்து நாள் மட்டுமே இந்தப் படத்தில் நடித்தேன் அதன்பின் நடிக்கவில்லை என்று இப்படத்தின் நாயகன் பாபி சிம்ஹா, இயக்குனர் மீதே வழக்கு தொடர்ந்த பின் இந்தப் படம் வெளியானது.
ஒரு டிவி நிருபர் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கை காவல்துறை அதிகாரியான பாபி சிம்ஹா விசாரிக்க ஆரம்பித்து, கொலைக்கான பின்னணியைக் கண்டுபிடிக்க முயல்கிறார். ஆனால், அவரை அந்த வழக்கை விசாரிக்க வேண்டாமென கமிஷனர் அழுத்தம் கொடுக்கிறார். அதையும் மீறி பாபி சிம்ஹா, குற்றவாளியான மதுபாலாவை நெருங்குகிறார். தக்க ஆதாரங்களுடன் அவரைக் கைது செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தில் பாபி சிம்ஹா ஐந்து நாட்கள் மட்டும்தான் நடிக்க வராமல் இருந்திருப்பார் போலிருக்கிறது. அதனால், அவர் நடித்துத் தர வேண்டிய சண்டைக் காட்சிகளை மட்டும் டூப் வைத்து எடுத்து முடித்திருக்கிறார்கள். டப்பிங் பேசவும் வர மறுத்துவிட்டார் போலிருக்கிறது. அதனால், வேறு ஒருவரை பாபி சிம்ஹாவுக்கு பேச வைத்திருக்கிறார்கள். அது பொருத்தமாகவும் இல்லை. படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே வேண்டா வெறுப்பாகத்தான் பாபி சிம்ஹா நடித்திருப்பார் போலிருக்கிறது.
படத்தில் நாயகி என ரம்யா ரம்பீசன் இருக்கிறார். மூன்று காட்சிகளில் மட்டும் வருகிறார். மூன்று வரி வசனம் பேசுகிறார்.
ஜென்டில்மேன் பட நாயகி மதுபாலா தான் படத்தின் வில்லி. தமிழக அரசியல் தலைவி ஒருவரின் கதாபாத்திரத்தை மனதில் வைத்து உருவாக்கி இருப்பார்கள் போலிருக்கிறது. மதுபாலா ஓவர் ஆக்டிங்கிலும் ஓவர் ஆக்டிங் செய்து நடித்திருக்கிறார். அவர் குதறிக் குதறிப் பேசும் தமிழும், உடல்மொழியும் வில்லித்தனத்தை வரவைப்பதை விட எரிச்சலைத்தான் வரவைக்கிறது.
பாபியின் வளர்ப்பு அப்பாவாக சில காட்சிகளில் லிவிங்ஸ்டன். நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிளாக டெல்லி கணேஷ். பாபி சிம்ஹாவுக்கு உதவும் மற்றொரு போலீசாக சதீஷ். போலீஸ் கமிஷனராக போஸ் வெங்கட்.
க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய ஒரு க்ரைம் நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படத்தில் சிறப்பு என்று சொல்லும்படியாக எந்த விஷயமும் கண்ணில்படவில்லை.
இசை, ஒளிப்பதிவு என மற்ற தொழில்நுட்ப விஷயங்களும் கூட படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.
1 மணி நேரம் 40 நிமிடத்தில் படம் முடிந்துவிடுவதால் ஒரு குறும்படத்தை கொஞ்சம் நீளமான படமாகப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.
அக்னி தேவி - அனல்