மை டியர் பூதம்,My Dear Bootham
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - அபிஷேக் பிலிம்ஸ்
இயக்கம் - ராகவன்
இசை - இமான்
நடிப்பு - பிரபுதேவா, ரம்யா நம்பீசன், மாஸ்டர் அஷ்வத்
வெளியான தேதி - 15 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 3/5

குழந்தைகளுக்கான படங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக வருவதே இல்லை. எப்போதோ ஒரு முறைதான் அப்படியான படங்கள் வரும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சுவாரசியமான குழந்தைகள் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவன்.

'மஞ்சப் பை, கடம்பன்' ஆகிய தன்னுடைய முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் விலகி இப்படி ஒரு படத்தை ராகவன் கொடுத்திருப்பது ஆச்சரியம்தான். கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் துணையுடன் குழந்தைகள் ரசித்து மகிழும் படமாக இந்தப் படம் இருக்கிறது.

திக்கித் திக்கிப் பேசும் குறையுடயவர் மாஸ்டர் அஷ்வத். அவரது அம்மா ரம்யா நம்பீசன். கணவர் இல்லாத குறை தெரியாமல் மகன் அஷ்வத் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். ஒரு நாள் பள்ளி சுற்றுலா சென்ற போது 3000 வருடங்களாக சித்தர் ஒருவரின் சாபத்திற்கு ஆளாகி பூமியில் சிலையாக இருக்கும் பூத லோகத்தின் தலைவர் பிரபுதேவாவிற்கு உயிர் கொடுக்கிறார் அஷ்வத். இருவரும் பின்னர் நண்பர்களாகிவிடுகிறார்கள். 48 நாட்களுக்குள் ஒரு மந்திரத்தை சொன்னால் மட்டும்தான் பிரபுதேவா மீண்டும் பூதலோகம் செல்ல முடியும், இல்லை என்றால் காற்றோடு காற்றாக கலந்து மறைந்து விடுவார் என்பதுதான் சாபம். பிரபுதேவாவிற்கு உயிர் கொடுத்த அஷ்வத் தான் அந்த மந்திரத்தையும் சொல்ல வேண்டும். திக்கிப் பேசும் அஷ்வத் அந்த மந்திரத்தை சொன்னாரா, பிரபுதேவா மீண்டும் பூத லோகம் சென்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ்டர் அஷ்வத். விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் அவர் மகனாகவும், இன்னும் சில படங்களிலும் நடித்த சிறுவன். இந்தப் படத்தில் அவருடைய நடிப்புதான் படத்திற்குப் பலம். திக்கித் திக்கிப் பேசி அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார். மற்ற சிறுவர்களைப் போல தன்னால் இருக்க முடியவில்லையே என அவர் கலங்கும் போது நாமும் கலங்கிவிடுவோம்.

ஆக்ஷன், நடனம் என அசத்திய பிரபுதேவா ஒரு குழந்தைகள் படத்தில் பூதலோகத்தின் தலைவனாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆச்சரியம்தான். தலையை முழுவதுமாக மொட்டைய அடித்து உச்சந்தலையில் ஒரு நீளமான குடுமியுடன், வித்தியாசமான ஆடையுடன் குழந்தைகளைக் கவரும் விதத்தில் நடித்திருக்கிறார். வேறு எந்த ஒரு நடிகராவது இப்படி நடிக்க சம்மதிப்பார்களா என்பது சந்தேகம்தான். பிரபுதேவாவிற்கும், அஷ்வத்திற்கும் இடையில் நட்பு என்பதைக் கடந்து ஒரு அப்பா, மகன் பாசம் போல அமைந்து நெகிழ வைக்கிறது.

மீடியம் பட்ஜெட் படம், ஒரு சிறுவனுக்குத் தாய் என்றால் தமிழ் சினிமாவில் உள்ள இன்றைய முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களுக்காகவே இருப்பவர் ரம்யா நம்பீசன். வழக்கம் போல அவரும் இந்தப் படத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

படத்தில் வேறு எந்த கதாபாத்திரங்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. பிரபுதேவா, அஷ்வத் இருவரைச் சுற்றியேதான் மொத்த படமும் அமைந்துள்ளது. பிக் பாஸ் சம்யுக்தா டீச்சராக நடித்திருக்கிறார்.

இமான் பின்னணி இசை பொருத்தமாக இருந்தாலும், பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி ஹிட்டாக்கி இருக்கலாம். யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் ஆகியவற்றை இன்னும் செலவு செய்து தரமாக அமைத்திருக்கலாம். ஒரு டிவி தொடருக்கு செலவு செய்வதைப் போலத்தான் செலவு செய்திருப்பார்கள் போலிருக்கிறது. இப்படி இன்னும் சில குறைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கான ஒரு படத்தைக் கொடுக்க முன் வந்த குழுவினரைப் பாராட்டலாம்.

மை டியர் பூதம் - குட்டீஸ்களுக்கு…

 

மை டியர் பூதம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மை டியர் பூதம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

பிரபுதேவா

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படுவர் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, கர்நாடக மாநிலம், மைசூரில் 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தார். தந்தையை போலவே பிரபுதேவாவும் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு சின்ன வயதில் இருந்தே முறைப்படி நடனம் கற்றார்.

பரதநாட்டியம், வெஸ்டர்ன் என அனைத்து வித நடனங்களையும் ஆடும் ஆற்றல் பெற்ற பிரபுதேவா, சினிமாவில் ஒரு டான்ஸராகத்தான் அறிமுகமானார். ஆரம்பத்தில் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பின்னர் ஓரிரு பாடல்களில் நடனமாடினார். பின்னர் இந்து என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, தொடர்ந்து காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

ஒருகட்டத்தில் நடித்தபடியே இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன அமைப்பாளராக இருந்துள்ள பிரபுதேவா, சிறந்த நடன அமைப்புக்காக இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தான் காதலித்த ரமலத் என்ற பெண்ணையே திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அப்பாவும் ஆனார். இதில் அவரது ஒரு மகன் கேன்சர் நோயால் இறந்து போனார். மகனின் மரணம் பிரபுதேவாவை பெரிதும் வாட்டியது.

இந்த சூழலில் நடிகை நயன்தாராவை காதலிக்க தொடங்கி, தான் காதலித்து மணந்த முதல் மனைவியான ரமலத்தை விவாகரத்தும் செய்தார். பின்னாளில் நயன்தாராவுடனான காதலும் முறிவுக்கு வந்தது.

மேலும் விமர்சனம் ↓